search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லை தெய்வமான துர்க்கை அம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    X
    எல்லை தெய்வமான துர்க்கை அம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவண்ணாமலை மகா தீபத்திருவிழா எல்லை தெய்வ வழிபாட்டுடன் தொடங்கியது

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகா தீபத்திருவிழா எல்லை தெய்வ வழிபாட்டுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை மறுதினம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அதைத்தொடர்ந்து, 10 நாட்களும் தீபவிழா கோலாகலமாக நடைபெறும். விழாவின் 6ம் நாளன்று வெள்ளித் தேரோட்டமும், 7ம் நாளன்று மகா ரதம் பவனியும் நடைபெறும். 23-ம் தேதி அதிகாலையில் பரணி தீபம், மாலையில் மகா தீப பெருவிழாவும் நடைபெற உள்ளது.

    தீபத் திருவிழாவின் தொடக்கமாக 3 நாட்கள் நடைபெறும் எல்லை காவல் தெய்வ வழிபாடு நேற்று விமரிசையாக தொடங்கியது.

    தீபத்திருவிழா எந்த தடையும் இல்லாமல், சிறப்பாக நடைபெறவும், தீபத்தை தரிசிக்க வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு பாதுகாப்பு அருளவும் வேண்டி, துர்க்கையம்மன், பிடாரியம்மன், விநாயகர் வழிபாடு நடத்தப்படுகிறது.

    அதன்படி, துர்க்கையம்மன் உற்சவம் நேற்று இரவு விமரிசையாக நடந்தது. விழாவை முன்னிட்டு, சின்னக்கடை வீதியில் பவழக்குன்று அருகேயுள்ள துர்க்கையம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடந்தது. கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் மகா தீப கொப்பரை புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

    அதைத்தொடர்ந்து, இரவு 9 மணி அளவில், காமதேனு வாகனத்தில் துர்க்கையம்மன் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடும் பனி மற்றும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் மாட வீதியில் திரண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    எல்லை தெய்வ வழிபாட்டின் 2-ம் நாளான இன்று பிடாரியம்மன் உற்சவம் நடைபெற உள்ளது. இன்று இரவு சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் பவனி வருகிறார். அருணாசலேஸ்வரர் கோவில் 3-ம் பிரகாரத்தில் அமைந்துள்ள பிடாரியம்மன் சன்னதியில் பிரமாண்டமான உணவு படையல் இன்று இரவு நடைபெறும். எல்லை தெய்வ வழிபாட்டின் நிறைவாக, விநாயகர் உற்சவம் நாளை நடைபெற உள்ளது.

    மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது.கொப்பரை சீரமைக்கப்பட்டு வர்ணம் தீட்டி அர்த்தநாரீஸ்வரர் படம் வரையப்பட்டு அனைத்து பணிகளும் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரைக்கு கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்படும்.அதன் பின்னர் கொப்பரை தலைச்சுமையாக மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
    Next Story
    ×