search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோமநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா யாக பூஜையுடன் தொடங்கியது
    X

    சோமநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா யாக பூஜையுடன் தொடங்கியது

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஆனந்தவல்லி சோமநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா யாக பூஜையுடன் தொடங்கியது.
    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட ஆனந்தவல்லி- சோமநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு 24 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    சோமநாதர் சன்னதி கால பைரவர், சதாசிவப் மேந்திராள் போன்ற சன்னதிகள் புதிதாக கருங்கல்லில் அமைக்கப்பட்டு உள்ளது. ராஜகோபுரம், விமான கோபுரம், பரிவார சுவாமி சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டும் கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளுக்கும் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் மர கதவுகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

    கடந்த 4-ந் தேதி எல்லை தெய்வங்களுக்கு சிறப்பு பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று மாலை யாகசாலைக்கு புனித நீர் கலசங்களில் கொண்டு வரப்பட்டு முதல் கால யாக பூஜை தொடங்கியது.

    திருப்பரங்குன்றம் கந்த குருவேத பாடசாலை முதல்வர் ராஜா பட்டர் தலைமையில் வேத விற்பன்னர்கள் யாக சாலையில் விசே‌ஷ சாந்தி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்காரம் மற்றும் பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.

    அதனைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) 2-ம் கால யாகசாலை பூஜை, நாளை 3-ம் கால யாக பூஜை நடைபெறுகிறது.

    11-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9.15 மணிக்கு ஆனந்தவல்லி சோமநாதர் மூலவர் விமான கோபுரம், ராஜ கோபுரம், பரிவார விமான கோபுரங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

    காலை 9.40 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் சோமநாத சுவாமிக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகம்- தீபாராதனை நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்தை காணவரும் திரளான பக்தர்களுக்கு வைகை ஆற்றில் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், 6 மணி முதல் 7 வரை திருக்கல்யாணமும், 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, அதனைத் தொடர்ந்து இரவு பக்தி இசை, வள்ளி திருமணம் புராண நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வைகை ஆறு சீரமைக்கப்பட்டு குடிநீர் வசதி செய்யப்பட்டு உள்ளது. கோவில் முன்பு பக்தர்கள் பாதுகாப்பாக உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஆனந்தவல்லி- சோமநாத சுவாமி சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×