search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பங்குனி உத்திர திருவிழா: குலதெய்வ கோவில்களில் வழிபாடு நடத்திய பக்தர்கள்
    X

    பங்குனி உத்திர திருவிழா: குலதெய்வ கோவில்களில் வழிபாடு நடத்திய பக்தர்கள்

    பங்குனி உத்திர திருவிழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பக்தர்கள் குலதெய்வம் மற்றும் முருகன் கோவில்களில் வழிபாடு செய்து வருகிறார்கள். #PanguniUthiram
    சாஸ்தா அவதரித்த பங்குனி உத்திர திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்மாவட்ட மக்கள் தங்களின் குலதெய்வமான சாஸ்தா கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தாலும் பங்குனி உத்திர நாளில் தென்மாவட்டங்களுக்கு வந்து வழிபடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதற்காக தென் மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோவில்களில் அன்று அதிகாலை 5 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தன.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்ததை படத்தில் காணலாம்.


    திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு பிறகு கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி அசைவ படப்பு போட்டு வழிபாடு நடத்துவார்கள்.

    குரும்பூர் மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில், தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில், சேரன்மாதேவி அருகே உள்ள பிராஞ்சேரி கரையடி மாடசாமி கோவில் மற்றும் வீரியப்பெருமாள் சாஸ்தா கோவில், அம்பை அருகே உள்ள மெய்யப்ப சாஸ்தா கோவில், கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில், படப்பகுறிச்சி குளத்துப்புழை தர்ம சாஸ்தா கோவில், மானூர் கீழப்பிள்ளையார் குளம் திருமேனி அய்யனார் சாஸ்தா கோவில்,

    மணக்கரை புங்கமுடையார் சாஸ்தா கோவில், தென்திருப்பேரை கடம்பாகுளம் கரையில் உள்ள பூலுடையார் சாஸ்தா கோவில், நிறைகுளத்து சாஸ்தா, சேதுக்குவாய்த்தான் சூலுடையார் சாஸ்தா கோவில், சீவலப்பேரி மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா, பாவூர்சத்திரம் அருகே உள்ள கைகொண்டார் சாஸ்தா கோவில்,

    செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா கோவிலில் குவிந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    கடையம் அருகே உள்ள சூட்சமுடையார் சாஸ்தா கோவில், நரசிங்க நல்லூர் முருகுவுடையார் சாஸ்தா கோவில், பாளையங் கோட்டை சாஸ்தா, செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா, டவுன் தடிவீரன் சாஸ்தா, மேகலிங்கசாஸ்தா கோவில், அருணாப்பேரி மேகம்திரை கொண்டஆலங்குளம் அருகே அத்தியூத்து சாஸ்தா கோவில், முத்துக்கிருஷ்ணப்பேரி வன்னியடி சாஸ்தா கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

    இதேபோல் நெல்லை டவுன் கரும்பனை வீரதர்ம சாஸ்தா, வண்ணார்பேட்டை குட்டத்துறை சாஸ்தா, கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா, உக்கிரன் கோட்டை அணைத்தலை அய்யனார் தர்மசாஸ்தா, திப்பணம்பட்டி கைகொண்டார் சாஸ்தா, கடையம் ராமநதி அருகே உள்ள சூட்சமுடையார் சாஸ்தா, தலைமலை அய்யனார் உள்ளிட்ட கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

    குடும்ப சாஸ்தா கோவில் தெரியாதவர்கள் காரையார் சொரிமுத்து அய்யனார் தான் பொதுவான சாஸ்தா என்பதால் பாபநாசம் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் வழிபாடு நடத்தினர். இதையொட்டி சொரிமுத்து அய்யனார் கோவிலில் உள்ள மகாலிங்கசாமி, சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தாருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்ற‌து.

    திருச்செந்தூர் கடற்கரையில் புனித நீராட திரண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.

    இதைத்தொடர்ந்து பட்டவராயன், தளவாய் மாடசாமி, தூசி மாடசாமி, கசமாடசாமி, பேச்சி, பிரம்ம சக்தி, சுடலை மாடசாமி, மொட்டை கருப்பசாமி, கும்பமுனி, சட்டநாதர், பாதா கண்டி அம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்த‌து.

    செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பல ஹோமங்கள் நடந்தது. பக்தர்கள் செய்துங்கநல்லூர் நம்பி கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். சாஸ்தாவுக்கு சிறப்பு அபிசேஷம் அலங்காரம் ஆராதனை நடந்தது. பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாஸ்தாவை தரிசனம் செய்தனர். மக்கள் பொங்கலிட்டும் வணங்கினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு வன்னியராஜா வேட்டைக்கு செல்லுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லை புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சாஸ்தா கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. #PanguniUthiram
    Next Story
    ×