search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்று மாலை பங்குனி உத்திர தேரோட்டம்: பழனியில் குவிந்த பக்தர்கள்
    X

    இன்று மாலை பங்குனி உத்திர தேரோட்டம்: பழனியில் குவிந்த பக்தர்கள்

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி கோவிலில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது.
    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக் கல்யாணம் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து மணக்கோலத்தில் வள்ளி தெய்வானையுடன் முத்துக்குமார சுவாமி வெள்ளித் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    பங்குனி உத்திரத் திருவிழாவின் 7-ம் நாளான இன்று காலை 4.30 மணிக்கு தீர்த்த வாரிக்கு எழுந்தருளலும், காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல் நடைபெற்றது. காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் திருஆவினன்குடி கோவிலில் எழுந்தருளல், பகல் 11.45 மணிக்கு மேல் 12.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளினர்.

    இதனையடுத்து மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து பழனி கோவிலுக்கு தீர்த்தம் எடுத்தும், காவடி சுமந்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் பழனி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் வெள்ளம் கடல் போல் காட்சியளிக்கிறது.
    Next Story
    ×