search icon
என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    திருவாரூர் அருகே உரிய ஆவணம் இன்றி அரசு பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.12.85 லட்சம் பறிமுதல்
    X

    திருவாரூர் அருகே உரிய ஆவணம் இன்றி அரசு பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.12.85 லட்சம் பறிமுதல்

    • பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூ.10 லட்சத்தை தாண்டி உள்ளதால் வருமான வரித்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    திருவாரூர்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக வரும் 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதனை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

    அதன்படி, திருவாரூர் மாவட்டம், கீரனூர் சோதனை சாவடியில் தலைமை காவலர் கிறிஸ்துராஜ், புஷ்பா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் பஸ்சில் பயணம் செய்த ஒருவரின் பையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அவரை விசாரித்த போது, மன்னார்குடியை சேர்ந்த தமிழ்வாணன் (வயது 40) என்பது தெரியவந்தது.

    ஆனால் அவர் வைத்திருந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. இது தொடர்பாக சோதனை சாவடியில் இருந்த போலீசார் தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தேர்தல் பறக்கும் படை அலுவலர் குமரேசன் தலைமையில் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.12.85 லட்சம் ஆகும்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூ.10 லட்சத்தை தாண்டி உள்ளதால் வருமான வரித்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. அரசு பஸ்சில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×