search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை நீக்க வேண்டும்
    X

    கல்விதுறை அலுவலகம் முன்பு அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.

    ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை நீக்க வேண்டும்

    • அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் அன்பழகன் பேச்சு
    • ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது என்பது நெருப்பு கொண்ட ஈட்டியால் இளைஞர்களின் இதயத்தை துளைப்பதாகும்.

    புதுச்சேரி:

    புதுவை கல்வித் துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஓய்வுபெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்பும் அரசின் முடிவினை கண்டித்து

    அ.தி.மு.க. சார்பில் கல்வித்துறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    புதுவை மாநிலத்தில் 2012-ம் ஆண்டுக்கு பிறகு சுமார் 11 ஆண்டுகளாக நடுநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யவில்லை. நடுநிலை ஆசிரியர்களில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு 40 சதவீத பதவி உயர்வு அடிப்படையிலும் 60 சதவீதம் நேரடியாகவும் நியமிக்க வேண்டும் என நியமன விதி இருந்தும் அரசு இந்த விஷயத்தில் மிக மிக அலட்சியமாக இருந்து வந்துள்ளது.

    தற்போது ஏதோ அவசர தேவைக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர்களை கொண்டு தற்காலிகமாக நியமனம் செய்ய இருப்பதாக அமைச்சர் அறிவித்துள்ளார். ஏன் காலியாக உள்ள பணியிடங்களை ஆட்சி அமைந்ததில் இருந்து அரசு நிரப்ப முன்வரவில்லை?

    ஆசிரியர் பணி முடித்த இளைஞர்கள் அரசு பணி கிடைக்காமல் தனியார் பள்ளிகளில் ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் பணி செய்கின்றனர்.

    இந்த இளைஞர்களை கொண்டு காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது என்பது நெருப்பு கொண்ட ஈட்டியால் இளைஞர்களின் இதயத்தை துளைப்பதாகும்.

    அரசு பணிகளில் 33 வயது மற்றும் 35 வயதுக்கு மேல் யாரையும் பணியில் அமர்த்த முடியாத சூழ்நிலையில் 60 வயது முடிந்தவர்களை ஒப்பந்த அடிப்படையில் அரசு பணிகளில் அமர்த்துவது எந்த பணி நியமன சட்டத்தில் உள்ளது.

    ஓய்வுபெற்ற ஆசிரியர்களை கொண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் முடிவினை அரசு கைவிட வேண்டும். தமிழகத்தை போல ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை நீக்க வேண்டும். அப்போது தான் நீண்ட காலமாக பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்கும்.

    இவ்வாறு அன்பழகன் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. மாநில துணை தலைவர் ராஜாராமன், மாநில இணை செயலாளர் கணேசன், பொருளாளர் ரவிபாண்டுரங்கன், துணைச்செயலாளர்கள் எம்.ஏ.கே. கருணாநிதி நாகமணி ஜெயசேரன், காந்தி, நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்கள் பாண்டுரங்கன், சிவாலயா இளங்கோ, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மீனவரணி செயலாளர் ஞானவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×