search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    டிராகன் பழ சாகுபடியில் பட்டதாரி விவசாயி
    X

    அறுவடை செய்த டிராகன் பழத்துடன் பட்டதாரி விவசாயி செல்வமணி.

    டிராகன் பழ சாகுபடியில் பட்டதாரி விவசாயி

    • புதுவை மண்ணாடிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி, பி.சி.ஏ. பட்டதாரி.
    • தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மண்ணாடிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி, பி.சி.ஏ. பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதனையடுத்து தனது வேலையை விட்டு விட்டு பூர்வீக விவசாய நிலத்தில் டிராகன் பழ சாகுபடி செய்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பயிரிடப்பட்ட டிராகன் பழ செடிகள், தற்போது அறுவடையை தொடங்கி உள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் டிராகன் பழங்கள் புதுவையில் உள்ள பழ கடைகளில் கிலோ ரூ.150 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    20 ஆண்டுகள் மகசூல் தரும் பயிரான டிராகன் பழ சாகுபடியில் ஒருமுறை முதலீடு செய்தால் விவசாயி கள் எந்தவித நஷ்டமும் ஏற்படாமல் அதிக லாபம் பெறலாம் என செல்வமணி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:

    பி.சி.ஏ. பட்டதாரியான நான் கடந்த 15 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். அந்த பணி பிடிக்காததால் சொந்தமாக தொழில் செய்ய முடிவு செய்து என்னுடைய பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்யும் ஆர்வம் ஏற்பட்டது.

    மற்ற விவசாயிகளை போன்று நெல், கரும்பு உள்ளிட்டவைகளை பயிர் செய்வதை தவிர்த்து, மாற்று பயிர் சாகுபடி செய்ய முடிவு செய்து, மற்ற மாநிலங்களில் பயிரிடப்படும் பயிர்கள் குறித்து ஆய்வு செய்தேன்.

    அதன்படி, அரியானா மாநிலத்தில் அதிக அளவு பயிரிடப்படும் டிராகன் பழ செடிகளை புதுவையில் முதல் முறையாக சாகுபடி செய்ய முடிவு செய்துஎனது விவசாய நிலத்தில் ரூ.5 லட்சம் முதலீட்டில் 2000 டிராகன் பழ செடிகளை நட்டு பண்ணை அமைத்தேன்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சாகுபடி செய்யப்பட்ட டிராகன் பழ செடிகள், தற்போது அறுவடையை தொடங்கி உள்ளது. ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை டிராகன் பழங்கள் அறுவடை ஆகும்.

    டிராகன் பழங்கள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் உள்ளதால் பழங்களை சந்தைப்படுத்துவது மிகவும் எளிதாக உள்ளது. தற்போது புதுவையில் உள்ள கடைகளுக்கு மொத்த வியாபாரமாக கிலோ ரூ. 150-க்கு விற்பனை செய்து வருகிறேன்.

    இதனால், ஓராண்டிற்கு ஒரு செடியில் 3 கிலோ விதம் 6 டன் வரை பழங்களைப் அறுவடை செய்து, ரூ 6 லட்சம் வரை லாபம் ஈட்ட முடியும்.மற்ற விவசாயிகளும் டிராகன் பழ சாகுபடி செய்யல ஆலோசனை வழங்கவும் முடிவு செய்துள்ளேன்.

    அரசும் விவசாயிகளின் இதுபோன்ற புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளித்தால், விவசாயிகள் மற்ற தொழில்களுக்கு செல்லாமல், லாபம் தரும் விவசாயப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியும். இவ்வாறு செல்வமணி கூறினார்.

    பட்டதாரி விவசாயி செல்வமணியை தொடர்ந்து பி.இ. சிவில் என்ஜினீயர் நண்பர் ஆனந்தும் டிராகன் பழ சாகுபடியில் இறங்கியுள்ளார்.

    டிராகன் பழங்கள், மருத்துவ குணம் நிறைந்த, நோய் எதிர்ப்பு சக்தி உடையது. இதனை சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு கட்டுப்படுவதுடன், கலோரிகள் இல்லாததால் உடல் எடையை குறைக்கவும் முடியும்.

    Next Story
    ×