search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சிங்கப்பூர் தம்பதியை தாக்கி செல்போன் பறிப்பு
    X

    தம்பதியை தாக்கிய சி.சி.டி.வி. காட்சி. 

    சிங்கப்பூர் தம்பதியை தாக்கி செல்போன் பறிப்பு

    • மன்னார்குடி கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
    • அந்த கும்பல் சரவணன் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட் ரோடு காந்தி நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). இவர் சிங்கப்பூரில் கட்டுமான தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    சிங்கப்பூரில் உள்ள அரசு கட்டிடங்களை கான்ட்ராக்ட் எடுத்து கட்டுமான பணிகளையும் சரவணன் செய்து வருகிறார். அங்கு மன்னார்குடியை சேர்ந்த குருநாதன் மகன் சரவணன் என்பவர் தமிழக வேலை ஆட்களை வைத்து சென்ட்ரிங் காண்ட்ராக்டர் பணி செய்து வருகிறார்.

    இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டத்தைச் சேர்ந்த சரவணன் மன்னார்குடியைச் சேர்ந்த சரவணனுக்கு சென்ட்ரிங் காண்ட்ராக்டர் வேலையை கொடுத்து வந்தார்.

    இந்நிலையில் மன்னார்குடி சரவணன் தமிழகத்திலிருந்து வேலைக்கு ஆட்கள் அதிகம் வந்திருப்பதால் சென்ட்ரிங் ஒப்பந்தத்துடன் கட்டிடத்தின் தரை அமைக்கும் பணியையும் அவரிடம் கேட்டு பணி செய்து வந்துள்ளார்.

    ஒரு அரசு கட்டிடம் கட்டுமானத்தில் மன்னார்குடியை சேர்ந்த சரவணன் தரம் இல்லாமல் பணியை செய்ததால் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு சரவணனுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் தனக்கு ஆன நஷ்டத்தை வழங்க வேண்டுமென மன்னார்குடி சரவணனுக்கு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு சரவணன் சிங்கப்பூர் வக்கீல் வழியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த சிங்கப்பூரில் இருக்கும் மன்னார்குடி சரவணன் தனது மைத்துனர் மகாதேவன் என்பவர் மூலம் ஒரு காரில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள சரவணன் வீட்டுக்கு 5 பேர் வந்தனர். அப்போது மகா தேவனுடன் வந்த ஒருவர் போலீஸ்காரர் எனக் கூறி சரவணன் வீட்டுக்குள் வந்து பேசி கொண்டு இருந்த போது மகாதேவன் மற்றும் போலீஸ்காரர் என கூறியவர் இருவரும் சேர்ந்து சரவணனை சரமாரியாக தாக்கினர்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மனைவி உமா மகேஸ்வரியையும் அந்த கும்பல் தாக்கியது. பின்னர் அந்த கும்பல் சரவணன் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து க் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    இதனைப் பார்த்து சரவணனும் அவரது மனைவியும் வலி தாங்காமல் கதறிய பொழுது அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த கும்பலை விரட்டினர்.

    ஆனால் அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச்சென்று விட்டது. கும்பல் தாக்கியதில் சரவணனின் முகம், கை மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. பின்னர் அவரையும் அவரது மனைவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜிப்மர் மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தம்பதியை தாக்கிய சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மன்னார்குடி கும்பல் மீது வீடு புகுந்து தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தல், செல்போனை பறித்து செல்லுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மகாதேவன் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×