search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
    X

    பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மணக்குள விநாயகரை தரிசனம் செய்த காட்சி.

    மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்

    • புதுவையில் மிகவும் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது.
    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில் இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் மிகவும் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில் இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. மூலவர், உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உட்பட வாசனை திரவியங்கள் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், அமெரிக்கன் டைமண்ட் கவசம் அணிவிக்கப்பட்டு, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    உற்சவர் ராஜதர்பார் அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவில் யானை லட்சுமிக்கு 9 சபந்திரகலாவுடன் கூடிய தங்க முலாம் பூசிய, விநாயகர் உருவத்துடன் கூடிய நெற்றி பட்டை அணிவிக்கப்பட்டிருந்தது.

    அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை கோவிலில் நாதஸ்வர கச்சேரி நடக்கிறது. பக்தர்கள் அர்ச்சனை செய்யவும், தேங்காய் உடைக்கவும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் விநாயகரை தரிசனம் மட்டும் செய்தனர். பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதிகளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. நாளை மணக்குள விநாயகர் கோவிலில் 62-ம் ஆண்டு பிரம்மோற்சவ கொடியேற்றம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் 175 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிற 4-ம் தேதி (ஞாயிற்றுகிழமை) மாலை ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் சிலைகள் விஜர்சனம் செய்யப்படுகிறது.

    Next Story
    ×