search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தி.மு.க. அரசு 2 வகையாக செயல்படுகிறது- கவர்னர் தமிழிசை தாக்கு
    X

    தி.மு.க. அரசு 2 வகையாக செயல்படுகிறது- கவர்னர் தமிழிசை தாக்கு

    • கவர்னர் மாளிகையில் உள்ள பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த கவர்னர் தமிழிசை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மத்தியில் கேக் வெட்டினார்.
    • கவர்னருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரது உருவம் கோலத்தில் வரையப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

    புதுச்சேரி:

    கவர்னர் தமிழிசை பிறந்த நாள் விழா புதுவை கவர்னர் மாளிகையில் கொண்டாடப்பட்டது.

    கவர்னர் மாளிகையில் உள்ள பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த கவர்னர் தமிழிசை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மத்தியில் கேக் வெட்டினார். கவர்னருக்கு புதுவை தலைமை செயலாளர் ராஜுவர்மா மற்றும் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து தெலுங்கானா மாநிலம் உதய நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்ற கண்கவர் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை கவர்னர் தமிழிசை ரசித்து பார்த்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னுடைய செல்போன் காலர் டியூன் பாடலான ''எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு'' என்ற பாடலை எடுத்து தெலுங்கானா மாணவர்கள் நடனமாடினர்.

    ''ஆடுவோமே பள்ளு பாடுவோமே'' என்ற பாரதியார் பாடலை எடுத்தும் பாடினர்.

    தெலுங்கானா ராஜ்பவனில் தமிழ் ஒலித்தது. இதனைத்தான் பிரதமர் விரும்புகிறார். தெலுங்கானா மாநில உதய தினம் எல்லா மாநிலங்களிலும் கொண்டாடப்பட்டிருக்கிறது.

    எல்லா மாநில கவர்னர்களும் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எப்படி தெலங்கானா உதய தினமும், உங்களுடைய பிறந்த தினமும் ஒன்றாக அமைந்தது என்று கேட்டனர். அது இறைவனின் சித்தம் என்று நான் சொன்னேன்.

    தெலுங்கானாவில் இன்னும் அரசியல் இருக்கிறது. அங்கு உதய தினத்தை பெரிய விழாவாக கொண்டாடுகின்றனர். ஆனால் அவர்கள் கவர்னரை அழைப்பதில்லை. அதைப்பற்றி நானும் கவலைப்படுவதில்லை.

    கவர்னரை அழைக்கமாட்டார்கள், ஆனால் அதே கட்சி தான் ஜனாதிபதியை ஏன் அழைப்பதில்லை என்று கேள்வி கேட்பார்கள்.

    அப்படியானால் இதில் எவ்வளவு மாறுபாடுகள், அரசியல் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவுக்கு அரசியலமைப்பு தலைவரை அழைக்கவில்லை. ஆகவே விழாவுக்கு வரவில்லை என்பார்கள். ஆனால் அவர்கள் அரசியலமைப்பு தலைவரை எந்த நிகழ்வுக்கும் அழைக்கமாட்டார்கள்.

    இதில் அரசியல் இருக்க கூடாது. எல்லாவற்றிலும் பரந்த மனப்பான்மை இருக்க வேண்டும். அதில் எனக்கு ஒரு சதவீதம் கூட கவலையில்லை. தெலுங்கானாவில் 2 அரசு நடைபெறவில்லை.

    மேகதாது அணை விவகாரத்தை தமிழக அரசு எவ்வாறு எதிர்கொள்ள போகிறது என்பதை நாம் பார்க்கின்றோம். புதுவையை பொருத்தவரையில் நமக்கான தண்ணீர் எந்தவித்திலும் குறைய கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம். எதிர்கட்சியாக இருக்கும்போது ஒருவகையாகவும், ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு வகையாகவும் அவர்கள் பணியாற்றுகின்றனர்.

    ஒருவேலை மாற்று கட்சியினரிடம் இருந்து அணை கட்டுவது தொடர்பான அறிவிப்பு வந்திருந்தால் தமிழக அரசு பெரிய எதிர்ப்பை தெரிவித்திருப்பார்கள்.

    ஆனால் அதைப்பற்றி இப்போது வெளிக்காட்டாமல் இருக்கின்றனர். நமக்கென்று வரும்போது ஒரு அரசியலும், பிறருக்கென்று வரும்போது ஒரு அரசியலும் இல்லாமல் எப்போதும் ஒரே தன்மையான நிலைபாட்டில் இருக்க வேண்டும்.

    தெலுங்கானா முதலமைச்சருக்கு நான் கருத்து சொல்லும் அளவுக்கு இல்லை. மக்களுக்கு, நான் சொல்வது உங்களுக்கு நான், எனக்காக நீங்கள் என்று ஏற்கனவே பேசியுள்ளேன். ஆகவே அவர்கள் என்னோடு அன்போடு பயணிக்கிறார்கள். அவர்களின் மேம்பாட்டில் என்னுடைய பயணம் எப்போதும் தொடரும்.

    இவ்வாறு தமிழிசை கூறினார்.

    கவர்னருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரது உருவம் கோலத்தில் வரையப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

    Next Story
    ×