search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகழ்வாராய்ச்சி பணி"

    திருவள்ளூர் அருகே நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணியை அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு செய்தார். அப்போது 353 தொல்பொருட்கள் கிடைத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. #MinisterPandiarajan
    திருவள்ளூர்:

    தொல்லியல் துறை சார்பில் கடந்த மாதம் 25-ந் தேதியில் இருந்து திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் உள்ள பழம்பெரும் சிவன் கோவிலுக்கு மேற்கே அகழ்வாய்வுக்காக 2 ஏக்கர் நிலத்தில் 11 குழிகள் தோண்டப்பட்டு ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுவரை நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய கருப்பு சிவப்பு பானை ஓடுகள், கருப்பு நிற பானை ஓடுகள், மெருகூட்டப்பட்ட கருப்பு பானை ஓடுகள், சொரசொரப்பான மண்பாண்ட ஓடுகள், சிவப்பு நிற மண்பாண்ட ஓடுகள், வழவழப்பான சிவப்பு மண்கலன்கள், செம்பழுப்பு பூச்சு கொண்ட காவி நிற மண்பாண்ட ஓடுகள், காவி வண்ணம் பூசப்பட்ட சிவப்பு பானை ஓடுகள், தாழிகளின் ஓடுகள், ஜாடிகளின் மூடிப்பகுதிகள், பழமையான செங்கல் துண்டுகள், கற்கருவிகள், இரும்பு கருவிகள், எலும்பு மற்றும் கண்ணாடியால் செய்யப்பட்ட மணிகள், சூது பவளமணிகள், சங்கு வளையல்கள், சுடுமண்ணால் ஆன சில்லுகள், இரும்பு பொருட்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், அரியவகை கல்மணிகள், தேய்ப்பு கற்கள், பல்வேறு வகையான குறியீடுகள் பொறித்த பனை ஓடுகள், தமிழ் பிராமி எழுத்து பொறிப்புகளுடன் கூடிய பனை ஓடுகள், ஏராளமான எலும்புகள், வரலாற்று தொடக்க காலத்தை சேர்ந்த செங்கற்களின் துண்டுகள் என 353 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

    மேலும் இங்கு அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணியை நேற்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்து அங்கிருந்தவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பட்டரைபெரும்புதூர், கீழடி அகழ்வாய்வால் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அகரம்பாக்கம் பகுதியில் மனிதன் வாழ்ந்திருப்பது என்பது விஞ்ஞானிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 3 லட்சத்து 75 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலகின் முதல் மனிதன் ஆப்பிரிக்காவில் தான் இருந்தான் என்ற நம்பிக்கை மாறி முதலாவதாக தமிழகத்தில் இருந்து உலகம் முழுவதும் சென்றதாக நிரூபிக்க முடியும். வரலாறு ரீதியாக இந்த சான்றுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    திருவள்ளூரை அடுத்த பூண்டியில் உள்ள அருங்காட்சியகத்தை மேம்படுத்த ஒரு திட்டம் தீட்டி அதற்கு செயல்வடிவம் தந்து கொண்டிருக்கிறோம். வரும் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் அறிவிப்பார்.

    பட்டரைபெரும்புதூரில் பல கோவில்கள் சார்ந்த கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. பல்லவ மன்னன் அபராஜிதவர்மன் காலத்தில் இருந்த கல்வெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. இப்பகுதியில் பழங்குடியினர் மற்றும் இருளர் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளது. அவர்களின் வாழ்வுமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு கல்வெட்டுகளுடன் ஒப்பிட்டு இந்த இடத்தின் தொன்மை, வரலாற்றை உலகுக்கு அரிய செய்யப்படும்.

    இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் மாணவர்கள் அருகில் உள்ள அருங்காட்சியகத்துக்கு செல்ல அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அங்கு மாணவர்களுக்கு ஒரு நாள் முழுக்க வகுப்புகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது தொல்லியல்துறை ஆணையர் நாகராஜ், பட்டரைபெரும்புதூர் அகழ்வாய்வு இயக்குனர் பாஸ்கர், துணை இயக்குனர் சிவானந்தம், கலெக்டர் சுந்தரவல்லி, ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, தாசில்தார் தமிழ்ச்செல்வன் மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் உடன் இருந்தனர். #MinisterPandiarajan
    ×