என் மலர்
நீங்கள் தேடியது "அணை"
- 7 நாட்களுக்கு மொத்தம் 110.07 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
- வரப்பாளையம், சின்னப்புத்தூர் ஆகிய கிராமங்களிலுள்ள 6060 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள உப்பாறு அணையிலிருந்து வலது மற்றும் இடது கால்வாய் மூலம் பாசனம் பெறும் நிலங்களில், நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும், 19.01.2025 முதல் 25.01.2025 முடிய 7 நாட்களுக்கு மொத்தம் 110.07 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம், கெத்தல்ரேவ், தொப்பம்பட்டி, நஞ்சியம்பாளையம், சூரியநல்லூர், கண்ணன் கோவில், மடத்துப்பாளையம், வரப்பாளையம், வடுகபாளையம் மற்றும் சின்னப்புத்தூர் ஆகிய கிராமங்களிலுள்ள 6060 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மழை நின்றதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்தும் குறைந்து காணப்பட்டது.
- காவிரி பாசன கழகத்தின் கீழ் உள்ள 174 ஏரிகளில் தற்போது 142 ஏரிகள்முழுமையாக நிரம்பியுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் தலைகாவிரி அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு வந்து கொண்டு இருக்கிறது. பின்னர் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணையை வந்தடையும்.
இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியது. பின்னர் அங்கு இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையும் நடப்பாண்டில் 2 முறை நிரம்பியது. பின்னர் மழை நின்றதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்தும் குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையின் காரணமாகவும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டிசம்பர் மாதத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இன்று காலை நிலவரப்படி 124.80அடிஉயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.66 அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 1780 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வாய்க்கால் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 3526 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதே போல் கபினி அணையிலும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இந்த அணைக்கு வினாடிக்கு 1359 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
காவிரி பாசன கழகத்தின் கீழ் உள்ள 174 ஏரிகளில் தற்போது 142 ஏரிகள்முழுமையாக நிரம்பியுள்ளது. மீத முள்ள 20 ஏரிகளில் 75 சதவீத தண்ணீர் இருப்பு உள்ளது. ஒரு ஏரியில் 50 சதவீதமும், 3 ஏரிகளில் 25 சதவீதமும் தண்ணீர் இருப்பு உள்ளது. அணை, ஏரிகள் நிரம்பியதால் கோடை பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது.
- அணையில் 92.88 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 2331 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 2886 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 119.63 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 92.88 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- அணைக்கட்டிற்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.
- கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பூண்டி ஏரிக்கு தண்ணீர் வருகிறது.
திருவள்ளூர்:
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் வழியாக வரும் கல்லாற்று தண்ணீர் திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்து கேசாவரம் அணைக்கட்டு பகுதிக்கு வரும். பின்னர் அங்கிருந்து கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு என 2 ஆறுகளாக பிரிகிறது.
கேசவரம் அணைக்கட்டு நிரம்பினால், நேரடியாக கொசஸ்தலை ஆற்றில் செல்லும் நீர் பூண்டி ஏரிக்கு செல்லும். இதேபோல் அணைக்கட்டின் மற்றொரு புறம் அமைக்கப்பட்ட, 16 ஷட்டர்கள் வழியாக செல்லும் மழைநீர் கூவம் ஆறாக மாறி பேரம்பாக்கம், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக சென்னை நேப்பியார் பாலம் அருகே சென்று கடலில் கலக்கும்.
இந்த நிலையில் ஃபெஞ்ஜல் புயலால் ஏற்பட்ட கனமழையின் காரணமாக கேசவபுரம் அணைக்கட்டு முழுவதும் நிரம்பி வழிகிறது. அணைக்கட்டிற்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. இதையடுத்து 1000 கன அடி நீர் கேசவபுரம் அணைக்கட்டில் இருந்து வெளியேறி வருகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பூண்டி ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்து நீர் மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.
பாகசாலை, மணவூர், விடையூர், நாத்தவாடா, நாராயணபுரம் ஆகிய பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பூண்டி ஏரிக்கு தண்ணீர் வருகிறது.
இதேபோல் கூவம் ஆற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பேரம்பாக்கம் பிஞ்சிவாக்கம், ஏகாட்டூர், புட்லூர் ஆகிய பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் முழுவதுமாக நிரம்பி காணப்படுகிறது. கூவம் ஆற்றின் நடுவே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புதுச்சத்திரம் தரைப்பாலம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் செல்கிறது. புதுச்சத்திரம் தரைப்பாலம் மூழ்கினால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் 20 கி.மீ, துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்படும்.
- உபரி நீர் வெளியேற்றும் 19 ஆவது மதகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது
- கிருஷ்ணா நதியின் கரையோர மக்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில், விஜயநகர் மாவட்டத்தில் உள்ள துங்கபத்ரா அணை வேகமாக நிரம்பி வந்தது. இதனையடுத்து, அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படும் போது 19 ஆவது மதகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அணையில் இருந்து கிட்டத்தட்ட விநாடிக்கு 48 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது. இதனால் ஆந்திராவில் பாயும் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
105 டிஎம்சி கொள்ளளவு கொண்ட துங்கபத்ரா அணையில் இருந்து குறைந்தபட்சம் 60 முதல் 65 டிஎம்சி தண்ணீரையாவது திறந்துவிட்டால் தான் அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் அமைச்சர் சிவராஜ் தெரிவித்தார்.
- மேற்கு தொடர்ச்சி மலையில் தற்போது மழையின் அளவு குறைந்து விட்டது.
- சில மணி நேரங்களில் நீர் வெளியேற்றுவதும் நிறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை மழை பெய்து வந்தது.
மழை பெய்ததால் பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் அதிகளவு வந்து கொண்டிருந்தது.
பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார், பரம்பிக்குளம் அணைகளுக்கும் மழை காரணமாக தண்ணீர் அதிகளவு வந்தது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிக்கவே ஆழியார், பரம்பிக்குளம் அணைகள் அடுத்தடுத்து நிரம்பின.
அணைகள் நிரம்பியதை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அணையில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் தற்போது மழையின் அளவு குறைந்து விட்டது. இருந்தாலும் அணைகளுக்கு வரும் தண்ணீர் அளவு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
120 அடி கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் தற்போது 119.40 அடியாக உள்ளது. அப்பர் ஆழியார் அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வினாடிக்கு 1000 கன அடி நீர் வருகிறது.
இதன் காரணமாக அணையில் இருந்து வினாடிக்கு 1000 முதல் 1200 கன அடி வரை உபரிநீர் வெளியேற்றப்பட்டது. சில மணி நேரங்களில் நீர் வெளியேற்றுவதும் நிறுத்தப்பட்டது.
அதேபோல டாப்சிலிப்பை அடுத்துள்ள பரம்பிக்குளம் அணைக்கும் நீர்வரத்து அதிகமாக உள்ளது. 78 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 68 அடியாக உள்ளது.
வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. 900 கன அடி தண்ணீர் திருமூர்த்தி அணைக்கு திறக்கப்படுகறது. தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக ஆழியார், பரம்பிக்குளம் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
- சோலையாறு அணையின் மொத்த உயரம் 165 அடி ஆகும்.
வால்பாறை:
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஆழியாறு அணை வாயிலாக கோவை மாவட்டத்தில் புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டுகளில் 50,350 ஏக்கர் நிலங்களும், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மேல்ஆழியாறு, நவமலை, காடம்பாறை மற்றும் சர்க்கார்பதி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அணைக்கு நீர்வரத்துள்ள பிரதான நவமலை ஆறு, கவியருவி மற்றும் வனப்பகுதியில் உள்ள சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணையில் கடந்த 15-ந் தேதி அணையின் நீர்மட்டம் 88.60 அடியாக இருந்தது. மூன்று நாட்களில் 12.50 அடி அதிகரித்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 101.10 அடியாக உயர்ந்தது.
நேற்று தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் இன்று காலை 7 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 106 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 3,709 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 84 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல சோலையார் அணையும் நிரம்பி உள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் உள்ள 10 தொகுப்பு அணைகளில் முக்கிய அணையாக கருதப்படுவது சோலையார் அணையாகும். சாலக்குடி ஆற்றின் கிளை ஆறான சோலையார் ஆற்றின் குறுக்கே 3290 அடி உயரப் பகுதியில் கட்டப்பட்டுள்ள சோலையார் அணை, 5392 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கும் கொள்ளளவு கொண்டது. சோலையார் அணை தான் தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் மிக உயரமான அணையாகும்.
சோலையாறு அணையின் மொத்த உயரம் 165 அடி ஆகும். தற்போது அணையின் நீர்மட்டம் 161 அடியாக உள்ளது. மேலும் நீர்மட்டம் அதிகரிக்கும்பட்சத்தில் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படும்.
- விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
- அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயர வைகை அணை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல் போக பாசனத்துக்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2ம் போக பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இதன் மூலம் 5 மாவட்டங்களில் உள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். கடந்த 3 ஆண்டுகளாக வைகை அணையில் போதிய நீர் இருந்ததால் ஜூன் 2-ந் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தின் முதலே நீர்வரத்து குறைவாக இருந்ததால் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.
இருந்தபோதும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 51.71 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 706 கன அடி நீர் வருகிறது. நீர் இருப்பு 2223 மி.கன அடியாக உள்ளது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து இரு போக பாசனத்துக்காக பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் பாசன வசதி பெறும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது. 45 நாட்களுக்கு 900 கன அடி வீதம் முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மி.கன அடி தண்ணீர் வைகை அணையில் இருந்து இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களான சங்கீதா, ஷஜீவனா, பூங்கொடி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டவுடன் விவசாயிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த தண்ணீர் திறப்பின் மூலம் திண்டுக்கல் மாவட்ம் நிலக்கோட்டை வட்டத்துக்குட்பட்ட 1797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்துக்குட்பட்ட 16,452 ஏக்கர் வடக்கு வட்டத்துக்குட்ட 26,792 ஏக்கர் என இரு மாவட்டங்களிலும் உள்ள 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு குறுகிய காலப்பயிர்களை நடவு செய்தும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் அடையுமாறு விவசாயிகளுக்கு 3 மாவட்ட கலெக்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே நாளில் வைகை அணையின் நீர்மட்டம் 50.10 அடியாகவும், நீர் இருப்பு 2005 மி.கன அடியாகவும் இருந்தது. மேலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 123.60 அடியாக உள்ளது. வரத்து 1200 கன அடி. திறப்பு 862 கன அடி. இருப்பு 3341 மி.கன அடி. கடந்த ஆண்டு இதே நாளில் பெரியாறு அணை நீர்மட்டம் 114.85 அடியாக இருந்தது. வரத்து 403 கன அடி. திறப்பு 112 கன அடி. இருப்பு 1702 மி.கன அடியாக இருந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
- கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 86 அடியாக இருந்தது.
- தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணைகள் மற்றும் அருவிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்றும் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தொடர் மழை காரணமாக 143 அடி உயரம் கொண்ட பிரதான அணையான பாபநாசத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 86 அடியாக இருந்தது. நேற்று 97.50 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று மேலும் 2.5 அடி உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 99.90 அடியாக இருந்தது. தொடர்ந்து பிற்பகலில் 100 அடியை எட்டியது. கடந்த 3 நாட்களில் 14 அடி உயர்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக பாபநாசம் அணைக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நேற்று இரவு முதல் மழை குறைந்ததால் தண்ணீர் வரத்தும் குறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு 2,576 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 804.75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதேபோல் 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 78.64 அடியாகவும், 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 7 அடி உயர்ந்து 112 அடியாகவும், இன்று மேலும் 2 அடி உயர்ந்து 114.76 அடியாகவும் உள்ளது.
இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான நாலு முக்கில் 42 மில்லி மீட்டர், ஊத்து பகுதியில் 33 மில்லி மீட்டரும், காக்காச்சி பகுதிகளில் 24 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 9 மில்லி மீட்டரும் மழைப் பொழிவு பதிவாகி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா நதி நீர்மட்டம் நேற்று 4 அடி உயர்ந்து 57 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 59 அடியாக உள்ளது.
84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 75 அடியாகவும், கருப்பாநதி நீர்மட்டம் 37.40 அடியாகவும் உள்ளது. 36 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 80 அடியாக இருந்த நிலையில் நேற்று 5 அடி உயர்ந்து 85 அடியாகவும், இன்று மேலும் 5 அடி உயர்ந்து 90 அடியாகவும் உள்ளது.
கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 52.50 அடியாகவும், நேற்று 50.50 அடியை எட்டிய நிலையில் இன்று மேலும் ஒரு அடி உயர்ந்துள்ளது. அணை நிரம்ப இன்னும் ஒரு அடியே உள்ளது.
அம்பை வனச்சரகம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழை காரணமாக மாஞ்சோலை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த தடை உத்தரவு மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்.
- அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 44.65 அடியாக உள்ளது.
- வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 905 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 635 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 44.65 அடியாக உள்ளது.
அணையில் இருந்து விநாடிக்கு ஆற்றிலும், ஊற்றுக்கால்வாய்களிலும் 111 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பாரூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும், அணைக்கு வரும் நீர் முழுவதும் சேமிக்கப்படுவதாக நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலை முதலே வெயிலின் தாக்கம் காணப்பட்ட நிலையில், பிற்பகலில் கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பொழிவு காணப்பட்டது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மில்லி மீட்டரில், தேன்கனிக்கோட்டை 41, கிருஷ்ணகிரி 22.30, அஞ்செட்டி 15, சூளகிரி 12, சின்னாறு அணை 10, தளி 5, கிருஷ்ணகிரி அணை 1 பதிவாகி இருந்தது.
- அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரள மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது.
- பாம்பாற்றுக்கு வரும் தண்ணீரை மறித்து பட்டிசேரி அணை கட்டப்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி., நீர் கொள்ளளவு கொண்டது. 1958-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக 110 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரள மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது. இந்த ஆறு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும்.
இந்தநிலையில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா, வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட, பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொது மக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கேரளாவின் சட்டவிரோத, தமிழ்நாட்டின் உரிமையை பாதிக்கின்ற தடுப்பணை திட்டம் செயல்படுத்துவதை கண்டித்து உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் வழியில் உள்ள சின்னாறு சோதனை சாவடியை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த முற்றுகை போராட்டத்தில் அமராவதி ஆற்று பாசன விவசாயிகள், அனைத்து விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உழவர் போராளிகள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறுகையில்,
1957ம் ஆண்டு காமராஜரால், 4 டி.எம்.சி கொள்ளளவோடு கட்டப்பட்ட அமராவதி அணையானது, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகளின் நீர் தேவையை பூர்த்திசெய்வதோடு பல நூற்றுக்கணக்கான கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. தற்போது சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு தடுப்பணை கட்டும் பணிகள் முறையான அனுமதி இல்லாமல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இரு மாநிலங்களுக்கு இடையிலான நதியின் குறுக்கே, எந்த ஒரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் ஒப்புதலின்றித் தன்னிச்சையாக எவ்வித அணையும் கட்டமுடியாது என்பதை உச்சநீதிமன்றம் பலமுறை தனது தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திர அரசுகள் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
அமராவதி அணையின் முக்கிய நீராதாரங்களாக கேரளா மாநிலத்தில் உள்ள பாம்பாறு, தேனாறு, சிலந்தி ஆறு மற்றும் சின்னாறு ஆகியவை உள்ளன. ஏற்கனவே பாம்பாற்றுக்கு வரும் தண்ணீரை மறித்து பட்டிசேரி அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து போனது. பருவமழை பெய்தால் மட்டுமே அணை நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமராவதி ஆற்றின் துணை நதியான சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், அமராவதி ஆறு முற்றிலும் வறண்டு லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாலைவனமாகும் சூழல் உள்ளது. பசுமை தீர்ப்பாயம் தாமாகவே முன்வந்து சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும் கேரள அரசு எந்த ஒரு முடிவையும் தெரிவிக்கவில்லை. எனவே தடுப்பணை கட்டும் திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
- பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு ஏற்கனவே 22 தடுப்பணைகளைக் கட்டியுள்ளது.
- தமிழர்களின் நதிநீர் உரிமை பறிபோகாமல் பாதுகாக்க வேண்டும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே அம்மாநில அரசு தடுப்பணை கட்டிவருகின்ற செய்தியறிந்து தமிழக வேளாண் பெருங்குடி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டி அமராவதி அணைக்கு வரும் நீரைத் தடுக்க கேரள அரசு முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டின் கரூர், திருப்பூர் மாவட்டங்களின் நீர்த்தேவையை நிறைவு செய்யும் அமராவதி ஆறு, காவிரி ஆற்றின் நீர் வரத்தை அதிகரிக்கும் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். 1957ஆம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்கே பெருந்தலைவர் காமராசர் அவர்களால் 4 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை கட்டப்பட்டது. ஆனால், திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அணையின் கொள்ளளவு 3 டி.எம்.சியாகக் குறைந்து விட்டது.
கடந்தகால திமுக ஆட்சியில், காவிரியின் குறுக்கே கர்நாடக அடுத்தடுத்து அணைகளைக் கட்டி காவிரிப்படுகையை வறண்ட நிலமாக்கியதுடன் தற்போது மேகதாது அணை கட்ட 9 ஆயிரம் கோடிகளை ஒதுக்கியுள்ளது. அதுமட்டுமின்றி, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வடமாவட்டங்களையும் வறண்ட பூமிமாக்கியது.
பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகளைக் கட்டியுள்ள ஆந்திர அரசு, மேலும் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் ரூ. 215 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மேலும், உலகின் மிகச்சுவையான நன்னீர் ஆறுகளில் ஒன்றான சிறுவாணி ஆற்றின் குறுக்கே கூலிக்கடவு – சித்தூர் சாலையில் கேரள அரசு ஏற்கனவே தடுப்பணையைக் கட்டி முடித்துள்ளதுடன், மேலும் 2 இடங்களில் தடுப்பணைகளைக் கட்ட தீவிர நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், தற்போது சிலந்தி ஆற்றின் குறுக்கேயும் தடுப்பணை கட்ட முயல்வது தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கொடுஞ்செயலாகும்.
திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ஆற்று நீர் உரிமை ஒவ்வொன்றாகப் பறிபோவது தொடர்கதையாகிவிட்டது. அவற்றைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு செயலற்று இருப்பது தமிழ்நாட்டின் உரிமை மீதான அதன் அக்கறையின்மையையே காட்டுகிறது.
இரு மாநிலங்களுக்கு இடையிலான நதியின் குறுக்கே, எந்த ஒரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் ஒப்புதலின்றித் தன்னிச்சையாக எவ்வித அணையும் கட்டமுடியாது என்பதை உச்சநீதிமன்றம் பலமுறை தனது தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை ஆளும் கம்யூனிஸ்ட் அரசு தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி முறைகேடாகத் தடுப்பணைகளைக் கட்டிவருவது அப்பட்டமான நதிநீர் சட்ட விதிமீறலாகும்.
கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் நெருங்கிய நட்பு பாராட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியில் உள்ள திமுக அரசு, தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் கம்யூனிஸ்ட் அரசின் அத்துமீறலை இதுவரை கண்டிக்காதது ஏன்? கேரள அரசு மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது ஏன்? காவிரி நதிநீரைத் தரமறுக்கும் கர்நாடக மாநில பாஜக அரசின் அத்துமீறலுக்குத் துணைநின்று தமிழ்நாடு பாஜக துரோகம் செய்கிறது. அதற்கு, சற்றும் குறைவில்லாதது, சிறுவாணி மற்றும் சிலந்தி நதிநீரைத் தடுக்கும் கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசின் அத்துமீறலுக்குத் துணைபோகும் திமுக அரசின் பச்சைத்துரோகமாகும்.
ஆகவே, சிலந்தி மற்றும் சிறுவாணி நதிகளின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கேரள அரசின் எதேச்சதிகாரப்போக்கிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் உடனடியாக வழக்கு தொடர்ந்து, சமரசமற்ற சட்டப்போராட்டம் நடத்தி தமிழர்களின் நதிநீர் உரிமை பறிபோகாமல் பாதுகாக்க வேண்டுமெனத் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.