search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவசர கால கட்டுப்பாட்டு அறை"

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசரகால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
    கோவை:

    இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் நாளை மறுநாள்(7-ந் தேதி) அதிக கனமழை பெய்யும் என தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்திருந்தது.

    இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் பருவமழை எதிர்நோக்கி அனைத்து வட்டங்களில் செய்யப்பட வேண்டிய முன்ஏற்பாடுகள் குறித்து கண்காணிக்கவும், மழையினால் பாதிப்புகள் ஏற்படும் போது தாசில்தாரால் மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணிக்கவும், ஒவ்வொரு வட்டத்திற்கும், துணை கலெக்டர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வட்டங்களில் பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மழையினால் பாதிப்புகள் ஏற்படும் பொருட்டு, வட்டாட்சியரால் மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணித்தும் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வெள்ள பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கையாக மீட்பு வாகனங்கள், மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள், பொக்லைன் வாகனங்கள், பவர் ஸா மற்றும் ஜெனரேட்டர் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர், சப்-கலெக்டர்கள், ஆர்.டி.ஓ.க்கள், மற்றும் துணை ஆட்சியர்களால் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் தேவையான அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் இருப்பு குறித்து உறுதி செய்தல் வேண்டும். சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம்களை அமைக்க நடவடிக்கை எடுப்பதோடு, நோய்தடுப்பு மருந்துப் பொருட்கள் தேவையான அளவு இருப்பு வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காவல்துறையினர் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் போக்குவரத்தை சரிசெய்ய மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். மின்சார வாரியத்தின் மின்வழித் தடங்களை சரி பார்த்து, பழுதான மின்கம்பங்ளை உடனடியாக மாற்ற வேண்டும். தீயணைப்பு துறையினர் உயிர்ப் பாதுகாப்பு உடைகளுடன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் மீட்பதற்குத் தேவையான தளவாடங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    கழிவு நீர் கால்வாய்களில் பொதுமக்கள் கொட்டும் குப்பைகளால் அவ்வப்போது அடைப்பு ஏற்படுகிறது. பொதுமக்கள் இதை உணர்ந்து மழைநீர் வடியும் கால்வாய்களில் குப்பைகளை கொட்டாமலும், அடைப்பு ஏற்படாமலும் பார்த்து கொள்ள வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசரகால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் தங்கள் பகுதியில் வடகிழக்கு பருவ மழையால் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×