search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரம் திருட்டு"

    திருவண்ணாமலை ஆசிரமத்தில் நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்த சென்னை போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடி அண்ணாமலையில் உள்ள தனியார் ஆசிரமத்திற்குள் கடந்த 21-ந் தேதி கொள்ளை கும்பல் புகுந்தனர். ஆசிரம நிர்வாகி கலைநம்பி (வயது 77) மற்றும் பெண்பணியாளர் பாலம்மாள் (63) ஆகியோரை கட்டிப்போட்டு கொடூரமாக தாக்கினர்.

    பிறகு, ஆசிரமத்தில் இருந்த 25 பவுன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து கொண்டு கும்பல் தப்பிச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கலைநம்பி தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை சமீபத்தில் ரூ.1 கோடிக்கு விற்றார். இந்த பணத்தை தனது வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளார். கலைநம்பி ரூ.1 கோடியை ஆசிரமத்திலேயே வைத்திருக்கலாம் என்று நினைத்தே கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

    கலைநம்பிக்கு நெருக்கமானவர்கள் யார் யார்? என்ற பட்டியலை போலீசார் சேகரித்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும், அவருடைய போன் அழைப்புகளும் சோதனை செய்யப்பட்டன.

    அப்போது, ஆசிரமத்திற்கு நன்கொடை கொடுப்பதாக மர்ம நபர் போனில் பேசியது தெரியவந்தது. அந்த நபர் வருவதாக கூறிய நேரத்தில் தான் கொள்ளை நடந்ததாக ஆசிரம நிர்வாகி கலைநம்பி தெரிவித்தார். அந்த நபர் யார் என்று விசாரித்தபோது, தேனி மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் (43) என்பது தெரியவந்தது.

    லட்சுமணனை பிடிக்க திருவண்ணாமலை போலீசார் முயன்றபோது, ஏற்கனவே வேறொரு வழக்கில் அவரை சென்னை போலீசார் கைது செய்தது தெரியவந்தது. இதையடுத்து, திருவண்ணாமலை போலீசார், சென்னை சென்று லட்சுமணனை விசாரணைக்காக அழைத்து வந்தனர்.

    கிடுக்கிப்பிடியாக நடத்திய விசாரணையில் லட்சுமணன் மற்றும் அவர் கூட்டாளிகள் காஞ்சீபுரத்தை சேர்ந்த திலீப் (28), பெரம்பலூரை சேர்ந்த செல்வக்குமார் (42) ஆகிய 3 பேரும் ரூ.1 கோடியை கொள்ளையடிப்பதற்காக நன்கொடையாளர்கள் என்று போனில் பேசி ஆசிரமத்திற்கு சென்று நகை, பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது.

    திலீப் மற்றும் செல்வக் குமாரையும் போலீசார் தேடி பிடித்து கைது செய்தனர். இவர்களில் செல்வக்குமார், சென்னையில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருவதும், தற்போது சஸ்பெண்டில் இருப்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு உள்பட 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×