search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆறு குளங்கள் தூர்வாருதல்"

    டெல்டா மாவட்டங்கள் ஆறுகள், நீர் நிலைகள் தூர்வாரப்படாமல் உள்ளதால் மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை கடைமடை வரை கொண்டு செல்ல ஏரி, வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #DeltaFarmers #MetturDam
    தஞ்சாவூர்:

    கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்துள்ளதால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டு வருகிறது. 1 லட்சம் 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு மேட்டூரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    இதன் காரணமாக அணையின் நீர் மட்டம் 96 அடியை எட்டியுள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.



    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வருகிற 19-ந் தேதி திறக்கப்படும் என்று நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த அறிவிப்பு டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    கர்நாடகத்தில் பெய்த தொடர் மழையால் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை மேட்டூர் அணை பெற்றுள்ளது. இதனால் இந்த ஆண்டு அகண்ட காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் வக்கீல் ஜீவக்குமார் கூறியதாவது:-

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை ஏரி, குளங்களில் தேக்கி வைக்க வேண்டும். குடிமராமத்து பணிகள் 25 சதவீதம் தான் முடிந்துள்ளது.

    ஏற்கனவே டெல்டா மாவட்டங்கள் ஆறுகள், நீர் நிலைகள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தற்போது மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை கடைமடை வரை கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். முறைப்பாசனம் இன்றி காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், ஆறுகளில் பிரித்து அனுப்பி நீர் மேலாண்மை மேற்கொள்ள வேண்டும்.

    கடலில் ஒருசொட்டு நீர் கூட கலந்து வீணாக்காமல் அனைத்து நீரையும் விவசாயத்திற்கே பயன்படுத்த பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டியக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாறன் கூறியதாவது:-

    டெல்டா மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளாக விவசாயத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து முழுமையாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதுவரை திறக்கப்பட்ட தண்ணீர் அனைத்தும் கடைமடை பகுதி வரை சென்றது இல்லை.

    கடைமடை பகுதிகளுக்கு கூடுதலாக 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும். அப்போது தான் கடைமடை பகுதியில் உள்ள விவசாயிகளும் இதில் பயன்பெற முடியும்.

    மேலும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தங்குதடையின்றி செல்ல ஏரி, வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.

    விவசாயிகளுக்கு தேவையான நெற்கதிர், உரம் ஆகியவை மானிய விலையில் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க வேண்டும்.

    தற்போது தமிழக முதல்-அமைச்சர் 19-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று அறிவித்திருப்பது டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக தண்ணீர் திறந்துவிட்டால் அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவர்.

    இவ்வாறு அவர் கூறினார். #DeltaFarmers #MetturDam
    ×