search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவணி மூலத்திருவிழா"

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. விழாவின் 8-ம் நாளான நேற்று ‘நரியை பரியாக்கிய லீலை’ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன.

    விழாவின் 8-ம் நாளான நேற்று ‘நரியை பரியாக்கிய லீலை’ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.

    நரியை பரியாக்கிய லீலை புராண தகவல் வருமாறு:-

    அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் தென்னவன் பிரம்மராயன் என்ற பட்டத்துடன் மாணிக்கவாசகர் அமைச்சராக பணியாற்றி வந்தார். மன்னன் தனது படைக்கு தேவையான குதிரைகள் வாங்குவதற்காக மாணிக்கவாசகரை பெரும்பொருளுடன் அனுப்பி வைத்தான்.

    திருப்பெருந்துறை என்னும் தலத்தை அடைந்தவுடன் இறைவனை குருவாகப் பெற்ற மாணிக்கவாசகர் அங்கேயே சிவாலய திருப்பணி, சிவனடியார் திருப்பணி என மன்னர் கொடுத்த முழுப்பொருளையும் செலவிட்டார்.



    இதற்கிடையில் அரசனிடமிருந்து அழைப்பு வந்தவுடன் வெறுங்கையாக இருந்த மாணிக்கவாசகர் செய்வதறியாமல் திகைத்துப் போய் இறைவனை தொழுதார். இறைவனும் ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும் என்று மன்னரிடம் கூறும்படி அனுப்பி வைத்தார். ஆவணி மூலத்திருநாளும் வந்தது. ஆனால் குதிரைகள் வராதது கண்ட மன்னன் மாணிக்கவாசகரை சிறையில் அடைத்து துன்புறுத்தினான்.

    மாணிக்கவாசகர் இது குறித்து இறைவனிடம் முறையிட்டார். அப்போது காட்டிலுள்ள நரிகளை எல்லாம் குதிரைகளாக்கி, சிவகணங்களை குதிரை பாகர்களாக்கி, தானே தலைவனாக இறைவன் ஒரு குதிரையின் மீதேறி மதுரைக்கு வந்தடைந்தார். இதைக் கண்ட அரசனும் மகிழ்ந்து மாணிக்கவாசகரை பாராட்டினான். ஆனால் அன்று இரவு அந்த குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறி, அங்கிருந்த குதிரைகளை கொன்று விட்டு காட்டை நோக்கி ஓடின.

    இதை கண்ட மன்னன், மாணிக்கவாசகரை தண்டிக்க நினைத்து அவரை கட்டி சுடுமணலில் கிடக்கச் செய்தான். இறைவன், மாணிக்கவாசகரை காக்கும் பொருட்டு வைகையாற்றில் வெள்ளப் பெருக்கெடுக்கச் செய்தார்.

    இவ்வாறு புராணம் கூறுகிறது.



    நரியை பரியாக்கிய நேற்றைய லீலையின் தொடர்ச்சியாக, இன்று (வியாழக்கிழமை) பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சிவபெருமான் காட்சி அளிக்கிறார்.

    இதையொட்டி, காலை 6 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து சாமியும், அம்மனும் பொன்னகரம் பகுதியில் உள்ள புட்டுத்தோப்பு பகுதிக்கு செல்கிறார்கள்.

    அங்கு மதியம் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடந்து முடிந்து இரவு கோவில் வரும் வரை மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும். 
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூல திருவிழாவில் 7-ம் நாளான நேற்று சுந்தரேசுவரருக்கு வைர கிரீடம் சூடி பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூல திருவிழாவில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் தினமும் நிகழ்த்தப்படுகின்றன. 7-ம் நாளான நேற்று வளையல் விற்ற லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார்.

    இந்த விழாவையொட்டி சுவாமியும், அம்மனும் காலையில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி ஆவணி மூலவீதி, மேலமாசிவீதி வழியாக இன்மையிலும் நன்மை தருவார் கோவிலுக்கு சென்றனர். அங்கிருந்து மாலை தங்கப்பல்லக்கில் புறப்பட்டு மேலமாசி வீதி, மேலக்கோபுர தெரு, தானப்ப முதலியார் அக்ரஹாரம், வடக்கு ஆவணி மூலவீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

    அதன் பின்னர் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது. முன்னதாக சுவாமி சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளினார்கள். அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க இரவு 7.35 மணிக்கு சுந்தரேசுவரர் சாமிக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அப்போது சாமிக்கு நவரத்தினகற்கள் பதித்த செங்கோல் வழங்கப்பட்டு, வைர கிரீடம் சூட்டப்பட்டது. அதை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.



    பின்பு சுவாமியின் பிரதிநிதியாக மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் செங்கோலை பெற்று, 2-ம் பிரகாரம் வலம் வந்து, மீண்டும் சாமியிடம் கொடுத்தார்.

    இதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் ஆட்சி நிறைவுபெற்று இன்று முதல் சுந்தரேசுவரர் ஆட்சி 8 மாதங்களுக்கு நடைபெறுவதாக ஐதீகம்.

    நிகழ்ச்சியில் கோவில் இணை கமிஷனர் நடராஜன், கோவில் பணியாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவின் 5-ம் நாளான நேற்று உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல் அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன. விழாவின் 5-ம் நாளான நேற்று உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல் அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.

    ‘உலவாக்கோட்டை அருளிய லீலை’ புராணம் வருமாறு:-

    மதுரையில் அடியார்க்கு நல்லார் என்ற அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் சிவனடியார்களுக்கு உணவளித்த பிறகு தான் உணவு உண்பது என்ற கொள்கை உடையவராக இருந்தார். இதனால் அவரது செல்வம் வற்றிய போதும் கடன் பெற்றாவது தனது கடமையை நிறைவேற்றி வந்தார்.



    ஒரு கட்டத்தில் கடனும் கிடைக்காத நிலை ஏற்பட்டது. எனவே அவர் தனது மனைவியுடன் இறைவன் சோமசுந்தரரை தரிசனம் செய்த பின்பு உயிர் நீப்பது என நினைத்து கோவிலுக்கு சென்றார்.

    அவரது தருமநெறியின் உண்மை நிலை கண்ட இறைவன் அசரீரியாகத் தோன்றி வீட்டிற்கு செல். அங்கே உனக்காக அள்ள அள்ளக் குறையாத நெல்மணிகளைக் கொண்ட உலவாக் கோட்டை ஒன்றை அளித்துள்ளோம் என்று கூறினார். இறைவன் தெரிவித்த படியே இருவரும் வீட்டிற்கு சென்றனர். அங்கு இறைவன் வழங்கிய உலவாக் கோட்டை மூலம் கிடைத்த நெல்மணிகளைக் கொண்டு கடைசி காலம் வரை சிவனடியார்களுக்கு உணவளித்து வாழ்ந்தார். இவ்வாறு புராணம் கூறுகிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று இரவில் சாமி நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்மன் யாழி வாகனத்திலும் எழுந்தருளி ஆவணி மூலவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 
    மானூரில் ஆவணி மூலத்திருவிழாவை முன்னிட்டு கருவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் ஜோதி மயமாக காட்சி கொடுக்கும் வைபவம் நாளை நடக்கிறது.
    திருவளரும் கீரனூரில் பிறந்த கருவூர் சித்தர், தனது முன்வினை பயனால் தவம் செய்து எண் வகை சித்திகளும், சிவத்தல யாத்திரை பேறும் பெற்றிருந்தார். அதோடு அவர் எந்த சிவத்தலத்திலும் தாம் அழைத்தவுடன் இறைவன் நேரில் தோன்றி காட்சியளிக்கும் பேறும் பெற்று விளங்கினார். ஆனால் கருவூர் சித்தர் ஒவ்வொரு சிவத்தலமாக சென்று இறைவனை நேரில் அழைத்து நேரில் கண்டு வழிபட்டு வந்தார்.

    ஒரு நாள் கருவூர் சித்தர் பெருமை வாய்ந்த திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் முன்பு வந்து சுவாமி நெல்லையப்பரை அழைத்தார். அப்போது சுவாமி நெல்லையப்பரிடம் இருந்து பதில் வராததால் கோபம் அடைந்த சித்தர், ஈசன் இங்கு இல்லை. இவ்விடத்தில் எருக்கும் குறுக்கும் எழுக என சாபமிட்டு அருகில் உள்ள சிவத்தலமான மானூர் (மானையம்பதி) செல்ல முற்பட்டார்.

    இதனை அறிந்த நெல்லையப்பர் ஒரு சிவத்தொண்டராக வந்து சித்தரை தடுத்து அழைத்தார். சித்தர், அந்த சிவத்தொண்டரை பார்த்து, நீ யாரென்று கேட்க, தான் தொண்டருக்கெல்லாம் தொண்டர் என்று கூறி பணிந்தார். சற்றே கோபம் தணிந்த சித்தர், இறைவனை மானூர் வந்து தனக்கு காட்சியளித்து சாப விமோசனம் பெறச் சொல் என்று சிவத்தொண்டரிடம் கூறிவிட்டு மானூருக்கு புறப்பட்டார். தற்போது அந்த இடத்தில் தொண்டர் நயினார் கோவில் உள்ளது.

    எனவே மறுநாள் காலை சுவாமி நெல்லையப்பரும், காந்திமதி அம்மனும் மானூர் செல்லும் பொருட்டு, ராமையன்பட்டி வந்து, அங்கு சந்திரசேகரராகவும், பவானி அம்மனாகவும் மாறி மானூர் வருகின்றனர். இதற்கிடையே சித்தருக்கு இறைவன் காட்சி கொடுக்க போவதை அறிந்த மன்னர் பாண்டியராஜன், அகத்தியர், குங்குலிய நாயனார், சண்டிகேசுவரர், தாமிரபரணி அம்மன் ஆகியோர் சேர்ந்து தாங்களும் அந்த திருக்காட்சியை காண விரும்பி இறைவனோடு மானூர் வருகிறார்கள்.

    மானூரில் கருவூர் சித்தருக்கு இறைவன் ஜோதி மயமாக காட்சி தந்து அருளுகிறார். இதனால் சினம் தணிந்த கருவூர் சித்தரை அழைத்துக் கொண்டு இறைவன் உள்ளிட்ட யாவரும் நெல்லை நோக்கி வரும் வழியில் ராமையன்பட்டி வந்ததும் சந்திரசேகரரும், பவானி அம்மனும் மீண்டும் நெல்லையப்பர், காந்திமதி அம்மனாக மாறியதோடு குதிரையில் நெல்லை வருகிறார்கள்.

    இறைவன் தொண்டராக வந்து சித்தரை தடுத்த இடம் வந்ததும், ஈசன் இங்கு உளன். எருக்கும், குறுக்கும் அறுக என்று சாப விமோசனம் வழங்குகிறார் கருவூர் சித்தர். மேலும் ஆண்டுதோறும் வரும் ஆவணி மூலத்திருநாளன்று அடியேனுக்கு இறைவன் காட்சி கொடுக்க வேண்டும் என்றும், அக்காட்சியை கண்டு வழிபடுவோருக்கு முக்தி கிடைக்க இறைவன் அருள்புரிய வேண்டும் என்றும் இறைவனை கருவூர் சித்தர் வேண்டுகிறார். நெல்லையப்பரும் அவ்வாறே அருள்கிறார். இதுவே ஆவணி மூலத்திருவிழாவின் வரலாறு ஆகும்.

    நெல்லையப்பர் கோவில் விழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆவணி மூலத்திருவிழாவாகும். இந்த விழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) காலை நெல்லையில் இருந்து கருவூர் சித்தர் மானூர் வந்தடைகிறார். சுவாமி சந்திரசேகரர், பவானி அம்மன், மன்னர் பாண்டியராஜன், அகத்தியர், சண்டிகேசுவரர், குங்கிலிய நாயனார், தாமிரபரணி அம்மன் ஆகிய மூர்த்திகளின் வீதிஉலா நிகழ்ச்சி நெல்லையில் நடக்கிறது.

    அதன் பின்னர் மேற்கண்ட மூர்த்திகள், மானூர் புறப்பட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை மானூர் வந்து சேர்கிறார்கள். அங்கு மானூர் அம்பலவாண சுவாமி கோவிலில் வைத்து கருவூர் சித்தருக்கு இறைவன் ஜோதி வடிவாக காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. பின்னர் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளும் நடக்கிறது. இந்நிகழ்ச்சியே ஆவணி மூலத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    விழாவை முன்னிட்டு மானூரில் ராட்டினங்கள், மிட்டாய் கடைகள், வளையல், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட கடைகள் அமைக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டுள்ளது. 
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவின் 3-ம் நாளான நேற்று ‘மாணிக்கம் விற்ற லீலை’ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன. விழாவின் 3-ம் நாளான நேற்று ‘மாணிக்கம் விற்ற லீலை’ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.

    ‘மாணிக்கம் விற்ற திருவிளையாடல் லீலை‘ பற்றிய புராண தகவல் வருமாறு:-

    மதுரையில் வீரபாண்டியன் நீதியுடன் ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு ஒரு ஆண் மகன் பிறந்தான். அந்த சமயத்தில் ஒரு நாள், அரசன் வேட்டையாடச்சென்ற போது புலிக்கு இரையாகி இறந்தான். இதனை அறிந்த அரசனின் காமக்கிழத்தியர்களின் பிள்ளைகள் அரண்மனைக்குள் புகுந்து சகல செல்வங்களையும், மணி மகுடத்தையும் திருடிச்சென்றனர். இதனையடுத்து இளவரசனுக்கு முடிசூட்டலாம் என்று அமைச்சர்கள் முடிவு செய்தனர்.

    மணிமகுடம் உள்ளிட்ட பொருட்கள் களவு போனதை இறைவனிடம் முறையிட எண்ணி கோவிலுக்கு சென்றனர். வழியில் இறைவன் சோமசுந்தரப்பெருமானே, நவரத்தின வியாபாரியாக அவர்கள் முன் தோன்றினார். அரண்மனையில் நடந்ததை அவர்களிடம் கேட்டு அறிந்தார். பின்னர் புதிய மணிமகுடம் செய்வதற்காக விலை உயர்ந்த நவமணிகளை அவர்களிடம் கொடுத்தார். மேலும் அந்த மணிகளின் வரலாறு, குணம், குற்றங்கள், யார் எந்த மணியை அணிய வேண்டும் என்பதையும் எடுத்துச்சொன்னார். புதிய மகுடத்தை சூட்டி இந்த குமாரனை அபிடேகபாண்டியன் என்று அழையுங்கள் என கூறி மறைந்தார்.

    அமைச்சர்கள் மகிழ்ச்சி அடைந்து திரும்பிச்சென்றனர். அதன்பின் திருடப்பட்ட செல்வங்களும், மணிமகுடமும் மீண்டும் கிடைக்கப்பெற்றன. அபிடேகபாண்டியனுக்கு மகுடம் சூட்டப்பட்டது. செங்கோல் வழுவாமல் ஆட்சி புரிந்தான். மக்கள் நலமுடன் வாழ்ந்தனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று இரவில் சாமி கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி பாண்டிய வேளாளர் தெரு, மேலமாசி வீதி, மேல, வடக்கு கீழ ஆவணி மூலவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன.

    விழாவில் 2-ம் நாளான நேற்று நாரைக்கு முக்தி கொடுத்த லீலை திருவிளையாடலுக்கு, அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல் லீலை பற்றிய விவரம் வருமாறு:-



    மதுரைக்கு தெற்கே ஒரு தடாகத்தில் நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த குளத்தில் நீர் வற்றியதால் நாரை மற்றொரு குளத்திற்கு சென்றது. அக்குளத்தில் முனிவர்கள் தினமும் வந்து நீராடினர். அப்போது அவர்கள் மீது குளத்தில் இருந்த மீன்கள் புரண்டு விளையாடின. முனிவர்கள் மீது புரண்டு விளையாடிய மீன்களை உண்ணக்கூடாது எனக்கருதி அந்த மீன்களை நாரை உண்ணாமல் இருந்தது. அப்போது முனிவர்கள் பேசியதை அறிந்த நாரை மதுரையை பற்றி தெரிந்து மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்திற்கு வந்தது. அங்கு குளத்தில் நீராடி இறைவனை வணங்கி முக்திப் பேறு பெற்றது.

    அப்போது அந்த நாரை இறைவனிடம், “பொற்றா மரைக்குளத்தில் இனிமேல் நீர்வாழ் உயிர்கள் எதுவும் இருக்கக் கூடாது. நீர்வாழ் உயிர்கள் இருந்தால் அவற்றை பறவைகள் உண்ணக்கூடும். இதனால் அந்த பறவைகளுக்கு பாவம் வந்துசேரும். எனவே பொற்றாமரைக்குளத்தில் நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் இருக்கக் கூடாது” என்று வரம் வாங்கியதாக ஐதீகமாக நம்பப்படுகிறது. நாரைக்கு இறைவன் வழங்கிய வரத்தினால் இன்று வரை பொற்றாமரைக்குளத்தில் நீர்வாழ் உயிரினங்கள் இல்லை.

    ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று இரவு சாமி பூத வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பூக்கடை தெரு, கீழமாரட் வீதி, அம்மன் சன்னதி வழியாக ஆவணி மூலவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 
    சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட திருநாளானது, ஆவணி மாதம் மூலம் நட்சத்திரம் ஆகும். அன்றைய தினம் சிவாலயங்கள் தோறும் சிறப்பாக பிட்டுக்கு மண்சுமந்த திருநாளைக் கொண்டாடுவர்.
    ‘அடி உதவுவது போல அண்ணன் தம்பிகூட உதவமாட்டான்’ என்பது பழமொழி. ஆண்டவனின் திருவடியைப் பற்றினால் அனைத்திலும் வெற்றி காணலாம் என்பதைக் குறிக்கும் விதத்திலேயே அந்தப் பழமொழி அமைந்திருக்கின்றது. அப்படிப்பட்ட ஆண்டவனே “அடி” வாங்கித் திருவிளையாடல் நடத்திய மாதம் ஆவணி மாதமாகும்.

    சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட திருநாளானது, ஆவணி மாதம் மூலம் நட்சத்திரம் ஆகும். அன்றைய தினம் சிவாலயங்கள் தோறும் சிறப்பாக பிட்டுக்கு மண்சுமந்த திருநாளைக் கொண்டாடுவர். அதில் கலந்து கொண்டு வழிபாடு செய்தால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். இறைவனே வேலை பார்த்துச் சம்பளம் வாங்கிய நாள் என்பதால், உத்தியோகத்தில் பிரச்சினைகள் இருப்பவர்கள், இந்த தினத்தில் உள்ளன்போடு சிவபெருமானை வழிபட்டால் எதிர்ப்புகள் அகன்று இனிய வாழ்க்கை அமையும்.

    மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இந்த விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆவணி மூல வழிபாட்டில் கலந்து கொண்டால், மூல நடத்திர தோஷங்கள் விலகி ஓடும். முன்னேற்றங்கள் வந்து சேரும். மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண் இருபாலரும் இந்த விழாவில் கலந்து கொள்வது நல்லது. 
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவில் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் நேற்று முதல் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன. முதல் நாளான நேற்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல் லீலை பின்வருமாறு:-

    ஒருவன் முற்பிறவியில் எவ்வளவோ புண்ணிய காரியங்கள் செய்திருந்த நிலையில் சிறிதளவு பாவம் செய்திருந்ததால் மறுபிறவியில் கருங்குருவியாக பிறக்கிறான். அந்த கருங்குருவியை காகங்கள் மிகவும் துன்புறுத்தின. அவற்றிற்கு பயந்து கருங்குருவி நெடுந்தூரம் பறந்து சென்று ஒரு மரத்தின் கிளையில் தன் நிலையை எண்ணி வருந்தியபடி அமர்ந்திருந்தது. அந்த சமயத்தில் அந்த மரத்தின் கீழே சிலர் மதுரையைப்பற்றியும், அங்குள்ள மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் நீராடி சுந்தரேசுவரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் என்று பேசி கொண்டனர். இதை கேட்ட கருங்குருவி அங்கிருந்து பறந்து மதுரைக்கு வந்தது. அங்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் உள்ள பொற்றாமரைக்குளத்தில் நீராடி இறைவனை தினமும் வணங்கி வந்தது.

    இறைவனும் அந்த குருவியின் பக்திக்கு மனமிரங்கி மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். அப்போது கருங்குருவி இறைவனிடம் எங்கள் இனத்தையே எளியான் என்னும் பெயர் மாற்றி வலியான் என வழங்கும்படி கேட்டது. மேலும் கருங்குருவி இறைவன் வழங்கிய மந்திரத்தை உபதேசித்து முத்திபேறு அடைந்தது என்பது வரலாறு. விழாவில் நேற்று இரவு சாமி கற்பக விருட்சக வாகனத்திலும், அம்மன் வெள்ளி சிம்மவாகனத்திலும் எழுந்தருளி ஆவணி மூலவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். 
    நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஆவணி மாதம் நடைபெறும் ஆவணி மூலத்திருவிழா கருவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் முக்கிய திருவிழா ஆகும். இந்த ஆண்டு ஆவணி மூலத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று அதிகாலை சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 11 மணிக்கு சுவாமி சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். இந்த திருவிழா மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகிறது.

    4-வது நாளான 14-ந் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சூறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மர மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரர் சப்பரத்திலும், பஞ்ச மூர்த்திகளுடன் 4 ரதவீதிகளிலும் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    19-ந் தேதி நெல்லையில் இருந்து கருவூர் சித்தர் புறப்பட்டு மானூர் அம்பலவாண சுவாமி கோவிலை சென்றடைகிறார். 10-வது நாளான 20-ந் தேதி இரவு 1 மணிக்கு சுவாமி சந்திரசேகரர், பவானி அம்பாள், பாண்டியராஜ, சண்டிகேசுவரர், தாமிரபரணி, அகஸ்தியர், குங்குலிய கலய நாயனார் ஆகிய மூர்த்திகள் பல்லக்கிலும், சப்பரத்திலும் மானூருக்கு புறப்பட்டு செல்கின்றனர். மறுநாள் 21-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு மானூர் கோவிலை சென்றடைகின்றனர்.

    அங்கு காலை 7 மணிக்கு கருவூர் சித்தருக்கு சுவாமி காட்சி தந்து சாப விமோசனம் நிவர்த்தி செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து வரலாற்று புகழ் மிக்க, புராண பாடல் பாடப்பெற்ற ஆவணி மூல மண்டபத்தில் வைத்து சுவாமி-அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. 
    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் ஆவணி மூலத்திருவிழா எனப்படும் பிட்டுத்திருவிழா வருகிற 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் ஆவணி மூலத்திருவிழா எனப்படும் பிட்டுத்திருவிழா வருகிற 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழா நடைபெறும் 14-ந்தேதி வரை காலை, மாலையில் சந்தரசேகரர் உற்சவம் நடைபெறுகிறது. வருகிற 15-ந் தேதி கருங்குருவிக்கு உபதேசம் நடைபெறுகிறது.

    பின்னர் நாரைக்கு முக்தியளித்தல், மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொறிகிழி வழங்குதல், உலவாக்கோட்டை, பாணனுக்கு அங்கம் வெட்டியது ஆகிய திருவிளையாடல் அடிப்படையிலான விழாக்கள் நடைபெறுகின்றன.

    வருகிற 20-ந் தேதி மாலை திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை நிலைநாட்டிய லீலை நிகழ்த்திக்காட்டப்படுகிறது.

    21-ந் தேதி சுந்தரேசுவரருக்கு சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் இரவு 7.30 மணிக்கு கும்ப லக்கனத்தில் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை பூஜையானது 23-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் இருந்து அன்று காலை புறப்பாடாகும் சுவாமி, அம்மன் மற்றும் திருஞான சம்பந்தர் சுவாமிகள் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள புட்டுத் தோப்பு பகுதிக்கு செல்கின்றனர்.

    சுவாமி-அம்மன் கோவிலில் இருந்து புட்டுத் தோப்பு பகுதிக்கு செல்வதை அடுத்து கோவில் நடையானது சாத்தப்படுகிறது. இருப்பினும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் பக்தர்கள் காலை 7.30 மணி முதல் வடக்கு கோபுரவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர்.

    அவர்கள ஆயிரங்கால் மண்டபத்துக்குள் பகல் 12.30 மணி வரை செல்லலாம். பின்னர் மாலையில் கோவில் நடை வழக்கம் போல திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
    ×