search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடிக்கக்கோரி போராட்டம்"

    ராமநாதபுரம் அருகே உள்ள புத்தேந்தல் கிராமத்தில் இடிந்துவிழும் நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனடியாக இடிக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் யூனியன் புத்தேந்தல் கிராமத்தில் சுமார் 650-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தின் நுழைவு பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஊரின் கடைசியில் உள்ள வயல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு குழாய்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

    கடந்த பல ஆண்டுகளாக இந்த தண்ணீரை தான் புத்தேந்தல் கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஊரில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் முறையான பராமரிப்பின்றி போனதால் பெரும்பாலான குழாய்களில் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் மேல்நிலைத்தொட்டியின் அருகில் புதிதாக 4 குழாய்கள் அமைத்து கிராம மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த தண்ணீர் சிறிது சிறிதாக வருவதால் இரவு பகலாக மக்கள் காத்திருந்து காவிரி தண்ணீரை பிடித்து செல்கின்றனர். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத் குடிநீர்தொட்டி நாளடைவில் அதன் உறுதித்தன்மையை இழந்து சிமெண்டு பூச்சுக்கள் பெயர்ந்து விழத்தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக விழுந்து வந்த நிலையில் தற்போது மேல்நிலை குடிநீர்தொட்டி எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.

    இந்த நிலை காரணமாக மேல்நிலைத்தொட்டியில் அரைமணி நேரம் மட்டுமே தண்ணீர் ஏற்றப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த குடிநீர் தொட்டியின் அருகில் தான் பெண்கள் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். இதுதவிர இங்கு பஸ் நிறுத்தம் உள்ளதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பஸ் மற்றும் இதர வாகனங்களுக்காக காத்திருப்பார்கள்.

    இதுபோன்ற நிலையில் ஆபத்தான மேல்நிலைத்தொட்டி இடிந்து விழுந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளதால் உடனடியாக தொட்டியை இடிக்க வேண்டும் என்று கோரி கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் மழைகாலத்திற்கு முன்பாக மோசமானநிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனடியாக இடித்து விட்டு, புதிய குடிநீர் தொட்டி கட்டி தர வேண்டும் என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    ×