என் மலர்
நீங்கள் தேடியது "உதவித்தொகை"
- பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான வருமான உச்சவரம்பு 8 லட்சம் ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.
- இதனால் பின்தங்கிய நிலையில் வாழும் பல மாணவர்கள் மிகுந்த பயனை அடைந்துள்ளனர் என குறிப்பிட்டார்.
சென்னை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை ஒன்றிய அரசு ரூ.2.50 லட்சம் என நிர்ணயித்துள்ள நிலையில், அதை உடனடியாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான வருமான உச்சவரம்பை ஒன்றிய அரசு 8 லட்சம் ரூபாயாக மாற்றி அமைத்துள்ளதையும், தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர்தரக் கல்வித் திட்டம் போன்றவற்றில் வருமான உச்சவரம்பு 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பின்தங்கிய நிலையில் வாழும் பல மாணவர்கள் மிகுந்த பயனை அடைந்துள்ளனர்.
அகில இந்திய உயர்கல்வி ஆய்வு (All India Survey on Higher Education) தரவுகளின்படி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சில பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio) மற்ற மாணவர்களைக் காட்டிலும் கணிசமாகக் குறைந்துள்ளது.
மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் ஒப்பிடுகையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் சேர்வதற்குத் தேவையான வசதிகளை செய்து தருவது மிகவும் அவசியமானது.
மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க கணிசமாக பங்களிக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஆண்டு வருமான உச்சவரம்பிற்கு ஏற்ப, இப்பிரிவினர்களுக்கான உதவித்தொகைக்கான ஆண்டு வருமான உச்சவரம்பினை 2.50 லட்சம் ரூபாயிலிருந்து, 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கினால், இச்சமூகங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழும்.
எனவே, இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் தலையிட்டு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை 2.50 லட்சம் ரூபாயிலிருந்து, 8 லட்சம் ரூபாயாக உடனடியாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
- அஜித் பவார் பவார் என்சிபி 59 இடங்களில் போட்டியிட்டு 41 இடங்களில் வென்றுள்ளது. சரத் பவார் என்சிபி 89 இடங்களில் போட்டியிட்டு 10 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.
- மொத்தம் 288 சட்டமன்றத் தொகுதிகளில் வடக்கு மகாராஷ்டிராவில் 61 தொகுதிகளை உள்ளடக்கியது வித்ர்ப்பா பிரதேசம்
மகாராஷ்டிரா தேர்தல்
288 சட்டமன்றங்கள் கொண்ட மகாராஷ்டிராவுக்குக் கடந்த 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி இந்த தேர்தலில் 65% வாக்குகள் பதிவாகியுள்ளன. பதிவான வாக்குகளை என்னும் பணி நேற்றைய தினம் [நவம்பர் 23] வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
நேற்று பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் சூழலில் ஆளும் மாகயுதி [பாஜக - ஷிண்டே சேனா - அஜித் பவார் என்சிபி] 230 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. கூட்டணியில் பாஜக மட்டுமே 132 இடங்களில் வென்றுள்ளது.
உடைந்த நம்பிக்கை
முன்னதாக இந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 30 தொகுதிகளைக் கைப்பற்றி இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. பாஜக கூட்டணி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
எனவே சட்டமன்றத் தேர்தலை [காங்கிரஸ் - சரத் பவார் என்சிபி - தாக்கரே சிவசேனாவை ] உள்ளடக்கிய மகா விகாஸ் அகாதி [இந்தியா] கூட்டணி சட்டமன்றத் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொண்டது. கட்சியை உடைத்த துரோகிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று சரத் பவார் நம்பியிருந்தார்.
ஆனால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 79 இடங்களில் போட்டியிட்டு 57 இடங்களிலும், தாக்கரே தலைமையிலான சிவசேனா 98 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களிலும் வெற்றி பெற்றது. அஜித் பவார் பவார் என்சிபி 59 இடங்களில் போட்டியிட்டு 41 இடங்களில் வென்றுள்ளது.
ஆனால் சரத் பவார் என்சிபி 89 இடங்களில் போட்டியிட்டு 10 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. எனவே கட்சியை உடைத்து பாஜகவுடன் சென்ற ஷிண்டே மற்றும் அஜித் பவாரை மக்கள் ஏற்றுக்கொண்டதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
மக்களை தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையில் 6 மாதங்களே இடைவெளி இருந்த நிலையில் மக்களின் இந்த திடீர் மாற்றம் எப்படி நிகழ்ந்திருக்கும் என்ற கேள்வி எழலாம். இதுகுறித்த விரிவான பார்வையை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர்.
தேர்தல் பாடம்
மக்களவை தேர்தல் பின்னடைவுக்கு பின்னர் சுதாரித்த ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி அவசரகால மக்கள் திட்டங்களை அமல்படுத்த தொடங்கியது.
அதில் முக்கியமானது துணை முதல்வரும் நிதியமைச்சருமான அஜித் பவார் முன்னெடுத்து தொங்கிய 'முக்கிய மந்திரி லட்கி பஹின்' திட்டம். முதலமைச்சர் பெண்கள் உதவித் தொகை திட்டம் என்று அழைக்கப்படும் இதன்மூலம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்பட்டது.
லட்கி பஹின்
கடந்த 4 மாதங்களாகவே மாநிலத்தில் 18 இல் இருந்து 65 வயது வரை உள்ள பின்தங்கிய குடும்பப் பின்னணி கொண்ட பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்பட்டது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் 2 கோடியே 25 லட்சம் பெண்கள் பலனடைந்தனர். இவர்கள் மொத்த பெண்களில் 55% ஆவர்.
இந்த திட்டம் பெண்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த உதவித் தொகையை ரூ. 2,100 ஆக உயர்த்துவதாக மகாயுதி கூட்டணி தேர்தல் வாக்குறுதி மூலம் உறுதியளித்தது. மேலும் மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும் வரும் 5 வழிகளிலும் உள்ள சுங்கக்கட்டணத்தையும் முதல்வர் ஷிண்டே கடந்த அக்டோபர் 12 இல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ரத்து செய்தார்.
வித்ர்ப்பா வியூகம்
இதுதவிர்த்து மொத்தம் 288 சட்டமன்றத் தொகுதிகளில் வடக்கு மகாராஷ்டிராவில் 61 தொகுதிகளை உள்ளடக்கிய வித்ர்ப்பா பிரதேசத்திற்கு முக்கியத்துவம் அளிப்பட்ட்டது. இந்த பிரதேசத்தில் பாஜக கூட்டணி கடந்த மக்களை தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.
விவசாயம் நிறைந்த பகுதியான விதர்பாவில் சோயாபீன், பருத்தி விலை சரிவு, வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவை இதற்கு காரணம் ஆகும். எனவே வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கி, குறைந்த விலையில் விவசாயிகளிடம் இருந்து சோயாபீன் மற்றும் பருத்தியை ஆளும் பாஜக கூட்டணி அரசு கொள்முதல் செய்தது.
இது இந்த தேர்தலில் பாஜகவுக்கு கை கொடுத்திருக்கிறது. இந்த அனைத்து திட்டங்களும் மக்கள் மத்தியில் பதிய அரியானாவோடு நடக்க இருந்த சட்டமன்றத் தேர்தல் நவம்பருக்கு திட்டமிட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிரிக்கட்சிகள் சாடியதும் குறிப்பிடத்தக்கது.
ஓபிசி வியூகம்
அடுத்ததாக ஓபிசி பிரிவினரை குறிவைத்து நடந்தபட்ட பாஜக பிரசாரங்கள் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது. ஓபிசிக்களில் உள்ள பல்வேறு சாதியினரை தங்களுக்கான வாக்கு வங்கியாக மற்றும் முயற்சிகளில் பாஜக ஈடுபட்டது. ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்தே ஓபிசி மக்கள் ஒன்றாக இருப்பதை காங்கிரஸ் தடுக்க முயற்சித்து வருகிறது என்றும் ஓபிசி மக்களின் ஒற்றுமையைக் கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. அதனால்தான் சாதி வாரி கணக்கெடுப்பு கோஷத்தை முன் வைக்கிறார்கள்' என்று மோடி பிரசாரம் செய்தார்.
கோட்டை விட்ட காங்கிரஸ்
ஓபிசி இடஒதுக்கீட்டை பறிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது என்றும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனம் மாற்றப்படும் என்றும் பிரதமர் மோடி உட்பட பாஜக மேடைகள் தோறும் பிரசாரம் செய்யப்பட்டது. காங்கிரஸ் இதை பொய்யான கதை என்றும் கூறியது. ஆனால் காங்கிரஸ் தனது பிரசாரத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அலட்சியம் காட்டியதை தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தி உள்ளது.
பாஜக கூட்டணியை ஆதரித்து பிரதமர் மோடி 10 பேரணிகளில் பங்கேற்று 106 சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்திருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 16 பேரணிகள் மூலம் 38 தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ராகுல் காந்தி 7 பிரசாரங்களிலும், மல்லிகார்ஜுன் கார்கே 9 பேரணிகளில் மட்டுமே கலந்து கொண்டனர். இது காங்கிரஸ் கட்சியினரிடையேயேயும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் பாஜக கூட்டணி வெற்றிக்காக அரியானாவில் செய்ததை போன்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் களப்பணியும் முக்கிய காரணியாக உள்ளது.
பத்தேங்கே தோ கத்தேங்கே
மேலும் இந்துக்களை குறிவைத்து எழுப்பப்பட்ட , 'பத்தேங்கே தோ கத்தேங்கே' [பிரிந்திருந்தால் நாம் வெட்டப்படுவோம்], 'ஏக் ரஹேங்கே தோ சேஃப் ரஹேங்கே' [ஒற்றுமையாக பாதுகாப்பாக இருப்போம்] என்று பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி ஆத்தியநாத் முதல் அடிமட்ட பிரசாரக் கூட்டங்கள் வரை எழுப்பப்பட்ட கோஷங்களும் பாஜக கூட்டணி வெற்றியை தீர்மானித்திருக்கிறது. இந்த தோல்வியில் இருந்தாவது காங்கிரஸ் பாடம் கற்குமா என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.
- ஆண்டு வருமானம் வெறும் 2 ரூபாய் என தாசில்தார் ஒருவர் வழங்கிய வருமான சான்றிதழ் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- வெறும் 2 ரூபாய் ஆண்டு வருமானத்தில் ஒரு குடும்பம் எப்படி வாழமுடியும் என்று விமர்சனங்கள் எழுந்தது.
மத்திய பிரதேச மாநிலத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் வெறும் 2 ரூபாய் என தாசில்தார் ஒருவர் வழங்கிய வருமான சான்றிதழ் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 2 ரூபாய் ஆண்டு வருமானத்தில் ஒரு குடும்பம் எப்படி வாழமுடியும் என்று விமர்சனங்கள் எழுந்தது.
திசு சாதர் என்பவரின் குடும்பத்திற்கு தான் ஆண்டு வருமானம் 2 ரூபாய் என கடந்த ஜனவரி மாதம் வருமான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர்களது குடும்பத்தில் மொத்தம் 5 பேர். வறுமையால் அனைவரும் கூலி வேலைக்கு செல்கிறார்கள்.
திசு சாதரின் இளைய மகன் பல்ராம் சாதர், தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தனது படிப்பை தொடர்வதற்கு உதவித்தொகை விண்ணப்பித்திருக்கிறார். இதற்காக வருமான சான்றிதழ் ஒன்றை அவர் பெற்றிருக்கிறார். அதில் தான் ஆண்டு வருமானம் வெறும் 2 ரூபாய் என் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தனக்கு உதவித்தொகை கிடைக்காததை குறித்து ஆசிரியர்களிடம் அவர் தெரிவித்த போது தான் இந்த தகவல் அவருக்கே தெரிய வந்துள்ளது.
வருமான சான்றிதழ் குறித்து பேசிய பல்ராம், "பொது சேவை மையம் மூலம் ஆண்டுக்கு 40,000 ரூபாய் வருமானம் பெறுவதாக தான் சான்றிதழுக்கு விண்ணப்பித்தேன். ஆனால் அதில் ஆண்டு வருமானம் தவறுதலாக 2 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை யாருமே கவனிக்கவில்லை" என்று தெரிவித்தார்.
இப்போது தவறாக அச்சடிக்கப்பட்ட வருமான சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு மற்றொரு வருமான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- நிலையான வேலையை விட்டுவிட்டு சொந்த தொழிலில் இறங்கப் பலர் யோசிக்கின்றனர்.
- அவர்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு இந்த மாதாந்திர உதவித்தொகையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவிலேயே அதிக ஸ்டார்ட் அப்களை கொண்ட நகரமாக பெங்களூரு இருந்து வருகிறது. தங்களின் வருமானம் தருகின்ற நிலையான வேலையை உதறிவிட்டு ஸ்டார்ட் அப் தொடங்க பலர் ஆர்வமாக முன்வருகின்றனர். இதை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதிய திட்டமானது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே பேசுகையில், புதிய தொழில்களைத் தொடங்குவது என்பது ஒரு ஆபத்தான சமாச்சாரம். அதுவும் நிலையான வேலையை விட்டுவிட்டு சொந்த தொழிலில் இறங்கப் பலர் யோசிக்கின்றனர்.
புதிய தொழில் தொடங்குவதால் பல சமயங்களில் பொருளாதார சிக்கல்களில் அவர்கள் மாட்டிக்கொள்கின்றனர். எனவே அவர்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு இந்த மாதாந்திர உதவித்தொகையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இது புதிதாகத் தொழில்முனைவோர் அன்றாட செலவுகளைப் பற்றி யோசிக்காமல் தொழிலை வளர்ப்பதில் கவனம் செலுத்த உதவும்.
ஆனால் இந்த திட்டம் எந்த அளவு வெற்றி பெறுகிறது என்பதை அது செயல்படுத்தப்பட்ட பிறகே பார்க்க முடியும். உதவித்தொகை உரிய தகுதியின் அடிப்படையிலேயே வழங்கப்படும். யாருக்கு அதிகம் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு இது சென்று சேர வேண்டும். இதைத்தவிர்த்து தொழில் சார்ந்த அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கு அரசு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
- குழுவில் கூடுதல் செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், டெல்லி காவல்துறை உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
- விசாரணை குழு 30 நாட்களில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி தனியார் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் தண்ணீர் புகுந்து 3 மாணவர்கள் பலியான விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் குழு அமைத்துள்ளது.
குழுவில் கூடுதல் செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், டெல்லி காவல்துறை உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
விசாரணை குழு 30 நாட்களில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வெள்ளத்தில் மூழ்கி இறந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ள டெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.
- நாட்டுப்படகுகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்கிறது.
- ராமேஸ்வரம் பாம்பன் தூக்குப்பாலம் அருகில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவி தொகை ரூ.250ல் இருந்து ரூ.350 ஆக உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
நாட்டுப்படகுகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்கிறது.
ராமேஸ்வரம் பாம்பன் தூக்குப்பாலம் அருகில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீனவச் சங்கப் பிரதிநிதிகள் சந்திக்க அனுமதி வழங்கிட பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- பஸ் பயணம், வங்கி கடன் உள்ளிட்ட பயன் கிடைக்காமல் உள்ளது.
சேலம்:
மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய் துறையின் மூலமாக வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1500 மற்றும் கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி துறை மூலமாக வழங்கக்கூடிய உதவிக்காக ரூ.2000 கேட்டு விண்ணப்பித்து பயனாளிகளை தேர்வு செய்து ஓராண்டுக்கு மேலாகியும் ஆயிரக்கணக்கான பேருக்கு இதுவரை வழங்கப்படவில்லை.
மாவட்டம் முழுவதும் மாற்றித்திறனாளிகள் உதவி தொகை கேட்டு விண்ணப்பம் செய்ய செல்லும்போது சர்வர் வேலை செய்யவில்லை என காரணங்களை சொல்லி திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
இதனை கண்டித்தும், உதவித்தொகை வழங்க கோரியும் மாற்றுத்திறனாளிகள் 300-க்கும் மேற்பட்டோர் இன்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு அவருடைய உடல் ஊன தன்மைகேற்ப வேலை வழங்க வேண்டும் எனவும் அதுவும் 4 மணி நேரம் மட்டுமே வேலை வழங்க வேண்டும் முறையான ஊதிய வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால் இங்கு பல ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுக்க மறுத்து வருகின்றனர் . இதுகுறித்து அதிகாரிகளும் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 35 கிலோ அரிசி வழங்க கேட்டு மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்கள் கொடுத்தனர். ஆனால் அதில் சிலருக்கு மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாற்றுத்திறனாளி விண்ணப்பித்தால் உடனடியாக வீட்டுமனை வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வந்த யூ.டி.ஐ.டி. கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு சிலருக்கு மட்டுமே கார்டு வந்துள்ளது. இதனால் பஸ் பயணம், வங்கி கடன் உள்ளிட்ட பயன் கிடைக்காமல் உள்ளது. எனவே கலெக்டர் மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அவர்களிடம் தொடர்ந்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- புகார் அளித்தும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை.
- மக்கள் மீது மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சியில் போலீஸ் நிலையம் பின்புறமே கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என்றால் இந்த ஆட்சியின் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஆளும் கட்சியை சேர்ந்த அதிகாரம் மிக்கவர்களே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது. இல்லாவிட்டால் இவ்வளவு துணிச்சலாக நகரத்தின் மையப் பகுதியில் போலீஸ் நிலையத்தின் அருகில் கள்ளச் சாராயம் விற்பனை நடைபெறுமா? இது மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிகிச்சையில் இன்னும் எத்தனை பேர் குணமடைவார்கள் என்று தெரியவில்லை. சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முதல் ஒவ்வொருவராக உயிரிழப்பதை பார்க்கும் போது மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைகிறேன்.
கள்ளச்சாராயம் குடித்ததில் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை.
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கள்ளச்சாராய விற்ப னையை தடுக்க பலமுறை வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. புகார் அளித்தும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை. போலீசார் நடவடிக்கை எடுக்காமல் விட்டதே உயிரிழப்புக்கு காரணம்.
தமிழ்நாடு முழுவதும் போதை மாநிலமாக மாறி வருகிறது. அதை தடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கள்ளக்குறிச்சியில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதற்கு பொறுப்பு ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பூத் வாரியாக அமைச்சர்களை நியமித்துள்ளனர். அந்த அக்கறையை கள்ளக்குறிச்சி சம்பவத்தில் காட்டி இருக்கலாம்.
ஆட்சி அதிகாரம் மட்டுமே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியம். மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை.
கள்ளச்சாராயம் குடித்து பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளின் கல்விச்செலவை அ.தி.மு.க. ஏற்கும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். 10 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தின் துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
மதுரை
தமிழக அரசின் வேலை வாய்ப்புத் துறையின் சார்பாக படித்து முடித்து வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் பொது பிரிவு பதிவுதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி பொதுப்பிரிவு பதிவுரார்கள் கல்வித்தகுதி யினை இவ்வலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற பள்ளியிறுதி வகுப்பில் தேர்ச்சி பெறாத வர்கள் பள்ளியிறுதி வகுப்பு, மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டதாரி கல்வித் தகுதியை உடைய பதிவு தாரர்களுக்கு தற்போது உதவித்தொகை பெறுவ தற்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். பட்டியல் இனத்தவருக்கு 45 வயது, இதர வகுப்பினர் 40 வயது இருக்க வேண்டும். உதவித்தொகை பெறுபவர் தமிழ்நாட்டி லேயே பள்ளி, கல்லூரிக் கல்வியை முடித்தவராக இருத்தல் வேண்டும்.
உதவித்தொகை பெறுபவர் ஊதியம் பெறும் எந்த பணியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பிலோ இருக்க கூடாது. அரசு மற்றும் பிற முகமைகளின் வாயிலாக எந்த நிதி உதவியையும் பெறுபவராக இருத்தல் கூடாது. அன்றாடம் பள்ளிக்கு, கல்லூரிக்கு சென்று பயில் பவராகவோ இருக்க கூடாது.
மேலும் அனைத் துவகை மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கென சிறப்பான உதவித்தொகை வழங்கும் திட்டமும் நடை முறையில் உள்ளது. மாற்றுத் திறனாளி பதிவுதாரர் இவ்வலுவலகத்தில் பதிவு செய்து குறைந்த பட்சம் ஓராண்டு முடிவுற்ற எழுதப்படிக்கத் தெரிந்த வர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் வருமானம் மற்றும் வயது வரம்பின்றி தற்போது உதவித்தொகை பெறு வதற்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பயன்தாரர்கள் நவ.30-ந் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளித்து பயன்பெறலாம். மேலும், ஏற்கெனவே வேலை வாய்ப்பற்ற இளைஞர் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள் உதவித்தொகை பெற்று ஓராண்டு முடிவுற்றிருப்பின் தொடர்ந்து உதவித்தொகை பெறுவதற்கு வேலை வாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுச்சான்றிதழ், சுய உறுதிமொழி ஆவணம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் உடன் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தினை தொடர்பு கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.
மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தின் துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள் ளார்.
- தொழிற்படிப்பு மற்றும் தொழில் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
- .பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்திட கடைசி தேதி 30-11-2023 ஆகும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொழிற்படிப்பு மற்றும் தொழில் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. ஒரு வருடத்திற்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு ரூ.30,000 எனவும், மாணவிகளுக்கு 36,000 எனவும் வழங்கப்படுகிறது.பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்திட கடைசி தேதி 30-11-2023 ஆகும்.
மேலும் விவரங்கள் அறிந்திட திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0421-2971127 வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாய்ப்பினை முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் பயன்படுத்தி கொண்டு 30-11-2023-க்குள் www.ksb.gov.in என்ற கே.எஸ்.பி., இணையதளத்தில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- வேலை வாய்ப்பு அதிகாரி தகவல்
- 10 ஆண்டுகள் தொடர்ந்து பெற வேண்டுமானால் சுயஉறுதி மொழி ஆவணத்தை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி ஜெரிபா ஜி.இம்மானுவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குமரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் மற்றும் அதற்கு மேலும் உள்ள கல்வித்தகு தியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து வரும் பதிவுதாரர்க ளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 1-10-2023 முதல் 31-12-2023 வரையிலான காலத்திற்கு உதவித்தொகை வழங்குவதற்கான ந டவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
உதவித்தொகை பெற வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து 30-9-2023 தேதியில் 5 ஆண்டுகள் நிறைவு செய்திருத்தல் வேண்டும். 31-12-2023 அன்று உச்ச வயது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கு 45 வயதுக்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு 40 வயதுக்குள்ளும் முடிவடையாமல் இருக்க வேண்டும். உதவித்தொகை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகைப்படா மல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவு செய்து 30-9-2023 தேதியில் ஒரு ஆண்டு முடிவுற்றி ருந்தால் போதுமானது. மேலும் மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வயது வரம்பு மற்றும் வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.
பொதுப்பிரிவு பதிவு தாரர்களைப் பொறுத்த வரை பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெறாத வர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200-ம், பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600-ம், மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை பள்ளியிறுதி வகுப்பிற்கு கீழ் மற்றும் பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சிக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600-ம், பிளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ. 750-ம், பட்டதாரிகளுக்கு ஆயிரமும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளிக்கல்வி, கல்லூரிக்கல்வி மற்றும் தொழில் சார்ந்த கல்வி பயின்று வரும் பதிவுதாரர்களுக்கும், பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்புகள் படித்த பதிவுதாரர்களுக்கும் வேலை வாய்ப்பற்றோர் நிவாரணம் பெற இயலாது.
தகுதி மற்றும் விருப்பமுடைய பதிவுதாரர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ், மாற்றுக் கல்விச் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையுடன் மாவட்ட வேலைவாயப்பு அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் வந்து உதவித் தொகைக்கான விண்ணப்ப படிவம் பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பெற்றுக் கொண்டிருக்கும் பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. 3 ஆண்டுகளுக்கு குறைவாக இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகையை பெற்று வரும் பயனாளிகள் இந்த உதவித் தொகையினை தொடர்ந்து பெற வேண்டுமானால் (மாற்றுத் திறனாளிகள் பொறுத்தவரையில் 10 ஆண்டுகள் தொடர்ந்து பெற வேண்டுமானால் சுயஉறுதி மொழி ஆவணத்தை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவி தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- மாணவ, மாணவியருக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவி தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
வண்டலூர்:
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி பட்டப்படிப்பு மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவியர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவியருக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவி தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த கல்வி உதவி தொகைக்கு 2023-2024 கல்வி ஆண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட நல இயக்ககம், மிக பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது http://bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவி தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து கீழ்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்து புதுப்பித்தல் விண்ணப்பங்களை வருகிற டிசம்பர் 15-ந் தேதிக்குள்ளும் மற்றும் புதிய விண்ணப்பங்களை அடுத்த ஆண்டு 2024 ஜனவரி மாதம் 15-ந் தேதிக்குள்ளும் ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம் சென்னை - 5 என்ற முகவரியிலோ அல்லது 044 - 29515942 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் முகவரி tngovtiitscholarship@gmail.com ல் அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.