search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக கழிப்பறை தினம்"

    உலக கழிப்பறை தினத்தையொட்டி ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    ஊட்டி:

    ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 19-ந் தேதி உலக கழிப்பறை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் உலக கழிப்பறை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நேற்று நடைபெற்றது. ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு திறந்த வெளியில் மலம் கழிக்காமல் கழிப்பறையை பயன்படுத்த வலியுறுத்தி மலைரெயிலுடன் கூடிய தத்ரூபமாக ஓவியம் வரையப்பட்டு இருந்தது. இதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



    நீலகிரி மாவட்டம் முழுவதும் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் 35 ஆயிரம் தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளது. இந்த கழிப்பறைகள் கட்ட வசதியில்லாத இடங்களில் பொதுக்கழிப்பறை கட்டப்பட்டு இருக்கிறது. மேலும் 3 ஆயிரத்து 500 தனிநபர் கழிப்பறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்தால் நீலகிரி மாவட்டத்தில் 100 சதவீதம் கழிப்பறை கட்டும் பணிகள் முடிவடையும். பொதுமக்கள் அருகில் உள்ள வனப்பகுதிகளுக்கு காலைக்கடன் கழிக்க சென்றால் வனவிலங்குகள், விஷஜந்துக்கள் மூலம் ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

    எனவே அனைவரும் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு குப்பை தொட்டி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. சுற்றுலா வாகனங்களில் செல்கிறவர்கள், அந்தந்த பகுதி பொதுமக்கள் குப்பைகளை வெளியில் வீசாமல், குப்பை தொட்டிகளில் போட வேண்டும். அப்போது தான் தூய்மையை பாதுகாக்க முடியும். எவ்வளவு தூரத்தில் குப்பை தொட்டி வைக்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்து சாலையோரங்களில் ஸ்டிக்கர் விரைவில் ஒட்டப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    பேரணியானது ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து லோயர் பஜார், மாரியம்மன் கோவில் சந்திப்பு, கமர்சியல் சாலை, கேஷினோ சந்திப்பு, சேரிங்கிராஸ் வழியாக தாவரவியல் பூங்கா வரை சென்றது. இதில் கழிப்பறையை பயன்படுத்துவோம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம், திறந்தவெளியில் மலம் கழித்தலை முற்றிலும் தவிர்ப்போம் என்ற விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி மகளிர் சுயஉதவிக் குழுவினர் சென்றனர். பேரணியில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், நகராட்சி கமிஷனர் நாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமன், நாகராஜன், ரமேஷ் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    ×