search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டி நகராட்சி கடை"

    நீலகிரியில் ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு சீல் வைக்க முயன்றதால் வியாபாரிகள் கொட்டும் மழையிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    காந்தல்:

    ஊட்டி நகராட்சிக்கு சொந்தமாக சுமார் 3 ஆயிரம் கடைகள் உள்ளது. இதனை வாடகைக்கு எடுத்து நடத்தும் வியாபாரிகளுக்கு குறைவான வாடகை தான் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    ஒரு சில வியாபாரிகள் கடைகளை உள் வாடகைக்கு விட்டு அதிக பணம் சம்பாதிப்பதாகவும் புகார் எழுந்தது. ஊட்டி நகராட்சி ஒரு வருடத்திற்கு முன் கடை வாடகையை உயர்த்தியது.

    இதனை பெரும்பாலான வியாபாரிகள் கட்டவில்லை. ஒரு சில வியாபாரிகள் மட்டுமே கட்டினார்கள். உயர்த்தப்பட்ட வாடகையை குறைக்க கோரி வியாபாரிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆகியோருக்கு மனு அனுப்பி இருந்தனர்.

    வாடகையை கட்டா விட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என நகராட்சி சார்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும் வியாபாரிகள் வாடகையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    ஊட்டி நகராட்சி கடைகளை 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே குடும்பத்தினர் தான் நடத்தி வருகிறார்கள். இதனால் பொது ஏல முறையில் விட நகராட்சி முடிவு செய்தது.

    இதற்கும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான 1,500 கடைகளுக்கு சீல் வைக்க நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதனை கண்டித்து ஊட்டி மார்க்கெட் முன்பு வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர். ஊட்டியில் இன்று காலை மழை பெய்தது. அதனையும் பொருட்படுத்தாமல் வியாபாரிகள் மறியல் செய்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இதனை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
    ×