search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி"

    மயிலாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மற்றும் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அஞ்சுகிராமம்:

    அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி மார்த்தாண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பட்டுசாமி. இவரது மகன் சாய்ஹரிகரன் (வயது 22). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம் அவர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்திருந்தார்.

    நேற்று இரவு சாய் ஹரிகரனும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் முத்துராஜ் (20) என்பவரும் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் புறப்பட்டுச் சென்றனர்.

    இரவு 10 மணி அளவில் அவர்கள் மயிலாடியை கடந்து சிறிது தூரம் வந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து பெருமணல் நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சாய்ஹரிகரனும், முத்துராஜூம் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். உயிருக்கு போரா டிக் கொண்டிருந்த சாய்ஹரிகரனை அந்த பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து அஞ்சுகிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். விபத்து தொடர்பாக அரசு பஸ் டிரைவர் ஜெகதீஷ் (30) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர் பொன்மனை பகுதியைச் சேர்ந்தவர். விபத்தில் பலியான முத்து ராஜ், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஆவார்.

    நாகர்கோவிலில் நடந்த மற்றொரு விபத்தில் முதியவர் ஒருவர் பலியானார். இளங்கடை பாவாகாசீம் நகரைச் சேர்ந்தவர் பீர்முகம்மது (82). இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்து மருந்து வாங்குவதற்காக ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பறக்கை நோக்கிச் சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் பீர்முகம்மது பலியானார்.

    மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடியை அடுத்த பையர்நத்தம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி அருகே டாஸ்மாக் கடை அமைத்து உள்ளது. இந்த கடையில் நேற்று மாலை கூட்டம் அதிகமாக இருந்தது. டாஸ்மாக் கடையின் வெளியே குடிமகன்கள் குடித்துவிட்டு நடுரோட்டில் நடமாடி கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒட்டுபள்ளம் பகுதியைச் சேர்ந்த பூவரசன் (வயது21) என்பவரும், அவரது நண்பர் தனசேகரன் என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் அச்சம்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் வேகமாக வந்து பூவரசன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

    இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காயமடைந்த பூவரசனையும், வெங்கடேசனையும் மீட்டு பையர்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக பூவரசனை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவர் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். வெங்கடேசனை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து பொம்மிடி போலீசார் விசாரித்ததில், பூவரசனும், வெங்கடேசனும் எதிரெதிரே சரியான பாதையில் வந்தனர். டாஸ்மாக் கடையின் அருகே வரும் குடிமகன்கள் நடுரோட்டில் அலை மோதியதால் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வெங்கடேசன் நிலைத் தடுமாறி எதிரே வந்த பூவரசன் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் பூவரசன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் அவரது நண்பர் தனசேகரன் காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார். இறந்துபோன பூவரசன் கடத்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் படித்தது வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பகுதியில் குடிக்காரர்கள் தங்களது வண்டிகளை நடுரோட்டில் நிறுத்தி விடுவதால் பாதை குறுகி சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி மோதி கொண்டு விபத்துக்கள் நடைபெறுகிறது.

    எனவே, அரசு பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றகோரியும், இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க கோரியும் பலமுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

    இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியின் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மாற்று இடத்தில் வைக்கவும், இந்த சாலையில் வேகத்தடையை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.

    ×