search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓடை நீர்த்தேக்க அணை"

    ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்க அணைப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சி பணிக்காக ரூ.1¼ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஏலகிரி கோடை விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.
    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அருகே ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏலகிரிமலையில் கோடை விழா நேற்று தொடங்கியது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி வரவேற்றார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரவி, லோகநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சுற்றுலாத்துறை ஆணையர் பழனிகுமார் சிறப்புரையாற்றினார்.

    அமைச்சர் கே.சி.வீரமணி கோடை விழாவை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் பல்துறை பணி விளக்க கண்காட்சியை திறந்து வைத்தார். அமைச்சர் நிலோபர் கபில் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சியினை திறந்து வைத்தார்.

    விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் பேசியதாவது:-

    இந்த கோடை விழாவில் சுற்றுலா பயணிகள், பொது மக்கள் தங்களை புதுப்பித்து கொண்டு உள்ளத்தாலும், இல்லத்தாலும் மகிழ்ச்சி அடைகின்றனர். கோடை விடுமுறையை கொண்டாடி மகிழ்வதால், அடுத்த சில மாதங்களுக்கு தங்களை ஆயத்தப்படுத்தி கொள்ள ஏலகிரியின் இயற்கையும், கோடை விழாவும் வசந்த வாசலாக மக்களுக்கு திகழ்கிறது.

    மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் சுற்றுலா தலங்கள் எத்திசையும் புகழ் மணக்கக்கூடிய சிறப்பை பெற்றுள்ளது. இந்தாண்டு வரவு - செலவு திட்டத்தில், சுற்றுலாத் துறைக்கு ரூ.173 கோடியே 42 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாணியம்பாடி வட்டம் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்க அணைப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சி பணிக்காக ரூ.1 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் வேலூர் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ராஜ்குமார், திருப்பத்தூர் துணை பதிவாளர் பாஸ்கர், ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளவரசன், அன்பரசன், ஜோலார்பேட்டை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.ரமேஷ், ஜோலார்பேட்டை நகர சபை முன்னாள் தலைவர் வசுமதி சீனிவாசன், அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன் மற்றும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிச்சாண்டி நன்றி கூறினார்.

    விழாவை முன்னிட்டு மங்கல இசை, கிராமிய கலை நிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ, பல்சுவை நிகழ்ச்சி, லேசர் நடன நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மலர் கண்காட்சியும் இடம் பெற்றது.

    2-வது நாள் நிறைவு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. 
    ×