search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கச்சா எண்ணெய் அகற்றம்"

    சென்னையில் உள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கடலில் கொட்டிய இரண்டரை டன் கச்சா எண்ணெய் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது. #EnnorePort #CoralStars #OilSpill

    பொன்னேரி:

    எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு ஈராக்கில் இருந்து எம்.டி.கோரல் ஸ்டார்ஸ் என்ற கப்பலில் கச்சா எண்ணெய் கொண்டு வரப்பட்டது.

    நேற்று முன்தினம் அதிகாலை கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் இறக்கிய போது இணைப்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதில் சுமார் 2.5 டன் கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கொட்டியது.

    இதனால் கப்பலை சுற்றிலும், கடலில் எண்ணெய் படலமாக மிதந்தது. உடனடியாக அது பரவாமல் இருக்க மிதவை தடுப்புகள் போடப்பட்டன. துறைமுக அதிகாரிகளும் கடலோர காவல் படையினரும் விரைந்து வந்து எண்ணெய் படலத்தை அகற்றும் பணியை தீவிரப்படுத்தினர்.

    ஸ்டிரிம்மர் எனப்படும் உறிஞ்சும் கருவி மூலம் கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு பேரல்களில் சேகரிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக இந்த பணி வேகமாக நடந்து வந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் முழுவதும் அகற்றப்பட்டு உள்ளது. குறைந்த அளவில் எண்ணெய் திட்டுக்கள் மிதக்கின்றன. அதனையும் ஊழியர்கள் படகில் சென்று அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

     


    இது தொடர்பாக துறைமுக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது. ஆங்காங்கே மிதக்கும் எஞ்சிய கச்சா எண்ணெய் கருவிகள் மூலம் ஊழியர்கள் உறிஞ்சி எடுத்து வருகின்றனர்.

    கப்பலில் மொத்தம் 16, 500 டன் கச்சா எண்ணெய் இருந்தது. இதில் 5000 டன் இறக்கப்பட்டுள்ளது.

    மீதியுள்ள கச்சா எண்ணெயை இறக்குவது பற்றி அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். எண்ணெய் இறக்குவதற்கு பாதுகாப்பாக உள்ளதா? என ஆய்வு செய்த பின்னர் இதுபற்றி முடிவு எடுக்கப்படும்.

    விசாகபட்டினத்திலிருந்து சிறப்பு கப்பல் வந்தடைந்துள்ளது. கடலோர பாதுகாப்பு படையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    கடலில் இருந்து உறிஞ்சி எடுக்கப்பட்ட கச்சா எண்ணெய் பேரலில் அடைக்கபட்டுள்ளன. இவை சுமார் 2 டன் அளவுக்கு குறைவாகத்தான் உள்ளது. அதை சுற்றுசூழல் அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடலில் கச்சா எண்ணெய் கொட்டியதால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #EnnorePort #CoralStars #OilSpill

    ×