search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலனுடன் தஞ்சம் அடைந்த பெண்"

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட பட்டதாரி பெண் காதலனுடன் தஞ்சம் அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    பாளை அருகேயுள்ள சிவந்திபட்டியை சேர்ந்தவர் கோட்டையப்பன்(வயது23). இவர் கேரளாவில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். நெல்லையை அடுத்த தாழையூத்து சாரதாம்பாள் நகரை சேர்ந்த மாரியப்பன் மகள் சுஷ்மிதா(22). பட்டதாரியான இவர் தென்காசியில் ஒரு ஸ்கேன் சென்டரில் வேலை செய்து வருகிறார்.

    சுஷ்மிதா இந்த ஆண்டு தான் கல்லூரி படிப்பை முடித்தார். பாளையில் ஒரு தனியார் கல்லூரியில் இவர் படித்தபோது அப்பகுதியில் உள்ள மற்றொரு கல்லூரியில் கோட்டையப்பன் படித்தார். இருவரும் வேறு வேறு பஸ்சில் வந்து கல்லூரிக்கு செல்வது வழக்கம்.

    பஸ் நிலையத்தில் அவர்கள் சந்தித்துக்கொண்ட போது அவர்களுக்கிடையே காதல் உண்டானது. இதனால் பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்கள் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர். கல்லூரி படிப்பை முடித்து அவர்கள் வேலைக்கு சென்றபின்னரும் அவர்களது காதல் தொடர்ந்தது. இந்த காதல் விவகாரம் சுஷ்மிதாவின் பெற்றோருக்கு தெரியவந்தது.

    சுஷ்மிதாவின் காதலுக்கு அவரது வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சுஷ்மிதாவுக்கு அவரது வீட்டினர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் சுஷ்மிதாவுக்கு நிச்சயம் செய்ய ஏற்பாடு நடந்தது. இதை அறிந்த சுஷ்மிதா தனது காதலரிடம் இதுபற்றி கூறினார்.

    இதையடுத்து கடந்த 14-ந்தேதி சுஷ்மிதா வீட்டை விட்டு வெளியேறி காதலன் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் காதல்ஜோடி அப்பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். இதனிடையே மகளை காணவில்லை என சுஷ்மிதாவின் தந்தை மாரியப்பன் தாழையூத்து போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி சுஷ்மிதாவை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் தேடுவதை அறிந்த காதல் ஜோடி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கழுத்தில் மாலை அணிந்தபடி வந்தனர். தங்களை பிரிக்க பெற்றோர் முயற்சிக்கின்றனர், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று கூறி சுஷ்மிதா தனது காதலனுடன் எஸ்.பி.அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.

    அலுவலகத்தில் இருந்த போலீஸ் உயர் அதிகாரிகள் காதல் ஜோடியை தாழையூத்து போலீஸ் நிலையத்துக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். தாழையூத்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை இறுதியில் சுஷ்மிதாவை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கணவருடன் வசித்து வந்த சுஷ்மிதா திருமணம் செய்த 2-வது நாளான நேற்று திடீரென வி‌ஷத்தை குடித்து விட்டார். மயங்கி கிடந்த சுஷ்மிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் அங்கு சுஷ்மிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிவந்திபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×