search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிக்கெட் வாரியம்"

    மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பும்ராவுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் கவலைப்படும்படி இல்லை என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. #JaspritBumrah


    ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பும்ரா தோள்பட்டையில் காயம் அடைந்தார். வேகப்பந்து வீச்சாளரான அவர் மே மாதம் நடக்கும் உலககோப்பை போட்டியில் முக்கிய துருப்பு சீட்டாக இருப்பார் என்ற நிலையில் காயம் அடைந்ததால் கிரிக்கெட் வாரியம் கவலை அடைந்தது.

    காயத்தின் தன்மை குறித்து பும்ராவுக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. இதற்கிடையே, கிரிக்கெட் வாரிய தரப்பில் கூறும்போது, பும்ராவுக்கு தோள்பட்டையில் ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் கவலை கொள்ளும்படியான காயம் இல்லை. கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்த அனைத்து ஸ்கேன்களும் பும்ராவுக்கு செய்யப்பட்டது என தெரிவித்தனர். #JaspritBumrah

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பயிற்சியாளர் ரமேஷ் பவரால் பலமுறை அவமதிக்கப்பட்டதாக இந்திய வீராங்கனை மிதாலிராஜ் கூறியுள்ளார். #MithaliRaj #Coach #RameshPower #WorldT20
    புதுடெல்லி:

    சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரைஇறுதியுடன் வெளியேறியது. இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் இந்திய அணி 112 ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

    லீக் சுற்றில் இரண்டு அரைசதங்கள் அடித்த இந்திய மூத்த வீராங்கனை மிதாலிராஜ், முக்கியமான இந்த ஆட்டத்தில் சேர்க்கப்படவில்லை. காயத்தில் இருந்து குணமடைந்த போதிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியது. அணியின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விளக்கம் அளித்தார். ‘ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வது குறித்து அணி நிர்வாகம் (கேப்டன், துணை கேப்டன், பயிற்சியாளர், தேர்வாளர்) எடுக்கும் முடிவில் நாங்கள் தலையிட முடியாது. விளையாட்டில் இது போன்று நடப்பது சகஜம்’ என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி கூறியிருந்தார்.



    இந்த நிலையில் 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரிய 35 வயதான மிதாலிராஜ், தனது தரப்பு விளக்கத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி மற்றும் பொது மேலாளர் (கிரிக்கெட் ஆபரேட்டிங்) சபாகரிம் ஆகியோருக்கு இ-மெயில் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இதில் மிதாலிராஜ் கூறியிருப்பதாவது:-

    எனது 20 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படியொரு மனவேதனையையும், அவமதிப்புகளையும் இதற்கு முன்பு சந்தித்ததில்லை. தேசத்திற்காக நான் ஆற்றும் சேவையையும், எனது புகழ் மற்றும் நம்பிக்கையையும் அதிகாரத்தில் உள்ள சிலர் சீர்குலைக்க முயற்சிக்கிறார்களோ? என்று நினைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

    இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி மற்றும் அவர் வகிக்கும் பொறுப்பு மீது எனக்கு எப்போதும் மிகுந்த மதிப்பு உண்டு. அவர் எனக்கு எதிராக தனது பதவியை பயன்படுத்துவார் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. அரைஇறுதி போட்டியில் என்னை வெளியே உட்கார வைத்த முடிவுக்கு அவர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது வேதனை அளிக்கிறது. இத்தனைக்கும் நடந்த சம்பவம் குறித்து அவரிடம் நான் முன்பே பேசி இருக்கிறேன். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்ற எல்லா உண்மையும் அவருக்கு தெரியும்.

    நான் இந்த மாதிரி ‘இ-மெயில்’ அனுப்புவதால் நான் மேலும் பாதிப்புக்குள்ளாகலாம் என்பதை அறிவேன். ஏனெனில் அவர் அதிகாரம் கொண்ட கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியின் உறுப்பினர். நானோ சாதாரண ஒரு வீராங்கனை.

    நான் எப்போதும் கிரிக்கெட் வாரியத்தின் நடைமுறைகளை சரியாக கடைபிடிப்பவள். அதனால் தான் வெஸ்ட் இண்டீசில் இருந்த போது இந்த விஷயம் பற்றி ஊடகத்தினரிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எனது விவகாரத்தை கிரிக்கெட் வாரியம் நியாயமாக கையாளும் என்று நம்பினேன். ஆனால் அணியில் இருந்து ஓரங்கட்டிய முடிவுக்கு கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர் ஆதரவு தெரிவித்ததன் மூலம் அவர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதும், எனக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதும் தெளிவாக தெரிகிறது.

    அரைஇறுதி ஆட்டத்தில் என்னை நீக்க பயிற்சியாளர் எடுத்த முடிவுக்கு ஆதரவு தந்ததை தவிர்த்து, இந்திய 20 ஓவர் போட்டி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத்சிங் மீது எனக்கு எந்த மனக்கசப்பும் கிடையாது. இந்த உலக கோப்பையை இந்தியாவுக்காக வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். அந்த பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது தான் வேதனையிலும் வேதனை. எங்களுக்குள் எந்த பிரச்சினைகள் எழுந்தாலும் அதை நானும், ஹர்மன்பிரீத் கவுரும் பேசி தீர்த்துக் கொள்ள முடியும். இந்திய 50 ஓவர் அணிக்கு நான் கேப்டனாக இருக்கிறேன். ஒரு நாள் போட்டி அணிக்கு அவர் எவ்வளவு அவசியம் என்பதை அறிவேன். உலகின் சிறந்த வீராங்கனைகளில் அவரும் ஒருவர்.

    எல்லா சர்ச்சைகளுக்கும் தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவார் தான் காரணம். வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் காலடி எடுத்து வைத்ததுமே பிரச்சினைகளும் உருவெடுத்து விட்டன. அவரது நடத்தைகள் எனக்கு எதிராகவே அமைந்தன. என் மீது பாகுபாடு காட்ட ஆரம்பித்தார்.

    உலக கோப்பை போட்டிக்கு முந்தைய தொடர்களிலும், உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்களிலும் நான் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி விளையாடினேன். ஆனால் உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்திற்கு முந்தைய நாள், ‘பேட்டிங்கில் நடுவரிசையை வலுப்படுத்த வேண்டி உள்ளது. அதனால் நீ பின்வரிசையில் இறங்க வேண்டும்’ என்று பயிற்சியாளர் ரமேஷ் பவார் என்னிடம் கூறினார். அணியின் நலன் கருதி நானும் ஏற்றுக்கொண்டேன். ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க ஜோடி சொதப்பியது. பவர்பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்களை மட்டுமே எடுத்தோம். ஆனாலும் தொடக்க ஜோடியை வெகுவாக பாராட்டியதோடு, அடுத்த ஆட்டத்திலும் (பாகிஸ்தானுக்கு எதிராக) அதே ஜோடியே தொடக்க வீராங்கனைகளாக விளையாடுவார்கள் என்று சொன்னார். இதை கேட்டு நான் அதிர்ச்சிக்குள்ளானேன். பாகிஸ்தானுக்கு எதிராக மிடில்வரிசையை பலப்படுத்த வேண்டிய தேவை இல்லை. அத்துடன் அந்த அணிக்கு எதிராக நான் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது உண்டு. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலைமையும் இருந்தது. அதனால் இது பற்றி தேர்வாளர்களிடம் பேசினேன். அவர்களது தலையீட்டின் பேரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீராங்கனையாக ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டு ஆட்டநாயகியாக தேர்வானேன். ஆனால் ரமேஷ் பவார் என்னை ஊக்கப்படுத்தி ஒரு வார்த்தை கூட பாராட்டவில்லை. அதன் பிறகு அவரது நடவடிக்கை எனக்கு எதிராக முற்றிலும் திரும்பியது.

    உதாரணமாக வலை பயிற்சிக்கு அவர் வரும் போது நான் பேச முயற்சித்தால், உடனே அவர் செல்போனை பார்ப்பது போல் அங்கிருந்து சென்று விடுவார். நான் அருகில் உட்கார்ந்து இருந்தாலும் என்னை உதாசீனப்படுத்தும் வகையில், மற்றவர்களின் பயிற்சியை மட்டும் கவனிப்பது போல் செயல்படுவார். இத்தகைய அவமதிப்புகளால் மனம் காயப்பட்டது. ஆனாலும் நிதானத்தை இழக்கவில்லை. இது போன்ற பிரச்சினைகளால் அணியின் முன்னேற்றத்துக்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என்று கருதி அணியின் மேலாளரிடம் எனது வேதனைகளை கொட்டி தீர்த்தேன். மேலாளர், அணி வீராங்கனைகளின் கூட்டத்தின் போது இது பற்றி பேசினார். அப்போது ரமேஷ் பவார் சில விஷயங்களில் தவறு செய்ததை ஒப்புக் கொண்டார். நானும், அயர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இளம் வீராங்கனைகளை தொடக்க ஜோடியாக அனுப்பினால் தான் சரியாக இருக்கும் என்று நினைத்தால், அப்படியே செய்யுங்கள் என்று கூறினேன். இத்துடன் எங்களுக்குள் உள்ள கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வந்து விட்டதாக நம்பினேன்.

    ஆனால் அதற்கு பிறகு அவரது நடவடிக்கை மேலும் மோசமானது. என்னை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. அவரிடம் ஏதாவது யோசனை கேட்க முயற்சித்தால் உடனே வேறு பக்கம் திரும்பி தொடர்ந்து என்னை வெறுப்பேற்றும்படி நடந்து கொண்டார். இந்த சூழலில் அயர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கடினமான ஆடுகளத்தில் களம் கண்டு அரைசதம் விளாசி மறுபடியும் ஆட்டநாயகி விருதை பெற்றேன். துரதிர்ஷ்டவசமாக பீல்டிங்கின் போது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. காய்ச்சலும் வந்து விட்டது. உடல்நிலை சரியாக சில நாட்கள் ஓய்வு தேவை என்று அணியின் உடல்தகுதி நிபுணர் அறிவுறுத்தினார்.

    இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ஆட முடியாமல் போனது. போட்டியை பார்க்க மைதானத்திற்கு வரக்கூடாது என்று ரமேஷ் பவார் திடீரென கட்டளையிட்டார். மிகப்பெரிய ஆட்டங்களில் ஒன்றில் இந்தியா விளையாடும் போது அணி வீராங்கனைகளுடன் நான் இருக்கக்கூடாது என்று சொன்னதும் திகைப்புக்குள்ளானேன். உடனடியாக அணி மேலாளரிடம் பேசினேன். ‘காயம் பயப்படும்படி இல்லை, உடல்நிலை தான் கொஞ்சம் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்’ என்று சொன்னேன். இதையடுத்து மேலாளர், நான் மைதானத்திற்கு செல்ல ஒப்புக் கொண்டார். அடுத்த சில நிமிடங்களில் ரமேஷ் பவாரிடம் இருந்து செல்போனில் ஒரு தகவல் வந்தது. வீராங்கனைகளுக்குரிய அறையை விட்டு வெளியே வரக்கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவரது நடவடிக்கை எல்லாமே வினோதமாகவே இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற பின்னர், மைதானத்தில் வீராங்கனைகள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு வரும்படி அழைப்பு வந்தது. நானும் வீராங்கனைகளுடன் இணைந்து வெற்றியை கொண்டாடினேன். இருப்பினும் போட்டி நடந்து கொண்டிருந்த போது அறையிலேயே முடங்கி கிடந்தது, ஏதோ சிறைபிடிக்கப்பட்டு போல தவித்தேன்.

    அரைஇறுதி சுற்றை எட்டிய பிறகு 3 நாட்கள் இடைவெளி இருந்தது. முதல் நாளில் யாரும் வலை பயிற்சியில் ஈடுபடவில்லை. பீல்டிங் பயிற்சி மட்டுமே நடந்தது. ஆனால் ரமேஷ் பவார் 5 வீராங்கனைகளுக்கு மட்டும் கூடுதல் பயிற்சி அளித்தார். இதை கேள்விப்பட்டு நான், ‘இரண்டு நாட்களாக பேட்டிங் பயிற்சி எதுவும் செய்யவில்லை. அதனால் நானும் கூடுதல் பயிற்சியில் இணைகிறேன்’ என்று பவாருக்கு செல்போனில் தகவல் அனுப்பினேன். அதற்கு அவரிடம் இருந்து பதில் இல்லை. மறுநாள் அவர் பின்வரிசையில் உள்ள வீராங்கனைகளுடன் சேர்த்து என்னை பேட்டிங் பயிற்சி செய்ய வைத்தார். இதில் இருந்தே அரைஇறுதியில் நான் விளையாடுவதில் அவருக்கு விருப்பம் இல்லை என்பதை புரிந்து கொண்டேன்.

    வழக்கமாக போட்டிக்கு முந்தைய நாளோ அல்லது போட்டி நாள் அன்றோ ஆடும் லெவன் அணியை அறிவிப்பார். ஆனால் அரைஇறுதியில் போட்டி நாள் அன்று காலையிலேயோ அல்லது மாலையிலேயோ அணி குறித்து அவர் வாய் திறக்கவில்லை. இரவில் அரைஇறுதியில் ஆடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தேன். ‘டாஸ்’ போடுவதற்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மைதானத்திற்குள் நுழைந்த போது, என்னை நோக்கி ஓடி வந்தார். ‘கடைசி லீக்கில் ஆடிய அதே அணியுடன்தான் விளையாடப்போகிறோம்’ என்று கூறினார். அப்போது தான் அணியில் எனக்கு இடம் இல்லை என்பது தெரிந்தது. ஆடும் லெவன் அணியினர் தவிர மற்ற யாரும் வீராங்கனைகளின் பகுதியில் இருக்கக்கூடாது என்று சொன்ன போது மேலும் நொந்து போனேன். எனது அழுகையை அடக்க முடியவில்லை. கண்ணீர் சிந்தினேன். இவ்வளவு ஆண்டுகள் அளித்த பங்களிப்புக்கு என்ன மதிப்பு? என்று நினைக்கத்தோன்றியது.

    ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனாக இதுவரை எனது சிறந்த பங்களிப்பை அளித்துள்ளேன். உங்களிடம் இருந்து நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். மீடியாக்களிடம் பேசக்கூடாது என்று சொன்னதால் தான் இ-மெயில் மூலம் நடந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    இவ்வாறு மிதாலி ராஜ் அதில் கூறியுள்ளார். #MithaliRaj #Coach #RameshPower #WorldT20 
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜை நீக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் எடுத்த முடிவை கேள்வி கேட்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி தெரிவித்தார். #MithaliRaj #DianaEdulji
    புதுடெல்லி:

    ‘20 ஓவர் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் ஆடும் லெவனில் இருந்து மிதாலி ராஜை நீக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் எடுத்த முடிவை கேள்வி கேட்க முடியாது’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி தெரிவித்தார்.

    வெஸ்ட்இண்டீசில் நடந்த 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறியது.



    லீக் ஆட்டங்களில் கம்பீரமாக செயல்பட்ட இந்திய அணி அரைஇறுதி ஆட்டத்தில் மோசமாக ஆடியது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் அரைசதம் அடித்த முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் உடல் தகுதியுடன் இருந்தும் முக்கியமான அரைஇறுதி ஆட்டத்தில் ஆடும் லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.

    ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றோம். அந்த வெற்றி கூட்டணியை மாற்ற வேண்டாம் என்று முடிவு செய்ததால் மிதாலி ராஜ்க்கு இடம் கிடைக்கவில்லை. எல்லா முடிவும் அணியின் நலனுக்காகவே எடுக்கப்படுகிறது. இதில் வருத்தப்பட எதுவுமில்லை’ என்று மிதாலி ராஜ் நீக்கம் குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விளக்கம் அளித்தார்.

    இதைத்தொடர்ந்து மிதாலி ராஜ் மேலாளர் அனிஷா குப்தா, ஹர்மன்பிரீத் கவுரை கடுமையாக சாடினார். இதனால் இந்த பிரச்சினை மேலும் வலுத்தது.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினரும், இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டனுமான டயானா எடுல்ஜி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி கண்ட அணியில் மாற்றம் செய்ய வேண்டாம் என்று இந்திய அணி நிர்வாகம் (கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பயிற்சியாளர் ரமேஷ் பவார், துணை கேப்டன் மந்தனா, தேர்வாளர் சுதாஷா) எடுத்த முடிவு பிரச்சினைக்கு உள்ளாகி இருக்கிறது. அந்த அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தால் அந்த முடிவு குறித்து யாரும் கேள்வி கேட்டு இருக்கமாட்டார்கள். ஆடும் லெவன் குறித்து அணி நிர்வாகம் எடுக்கும் முடிவை நாங்கள் கேள்வி கேட்க முடியாது. உதாரணமாக சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய வீரர் குருணல் பாண்ட்யா விக்கெட் எடுக்காமல் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தார். ஆனால் கடைசி 20 ஓவர் போட்டியில் அவர் வலுவாக மீண்டு வந்து விக்கெட்டுகள் சாய்த்தார். விளையாட்டில் இது போன்ற விஷயங்கள் நடக்க தான் செய்யும்.

    என்னை பொறுத்தமட்டில் அன்று இந்திய அணிக்கு மோசமான நாளாகும். நமது பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. இங்கிலாந்து அணி நன்றாக செயல்பட்டு இலக்கை சேசிங் செய்தது. பனிப்பொழிவு நமது பந்து வீச்சாளர்களுக்கு சிரமமாக அமைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் எதிர்பார்ப்புக்கு மாறாக நமது அணி பெரிய வெற்றியை ஈட்டியது. அரைஇறுதியில் ஏற்பட்ட தோல்வியை மறந்து அடுத்து வரும் நியூசிலாந்து தொடர் குறித்து வீராங்கனைகள் கவனம் செலுத்த வேண்டும். மிதாலி ராஜ் விவகாரம் குறித்து விவாதிக்க இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டம் நடத்தும் திட்டம் எதுவுமில்லை. அணி தேர்வு விஷயத்தில் நிர்வாக கமிட்டி தலையிட வேண்டிய அவசியமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் நேற்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரீம் ஆகியோரை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்ததாக கூறப்படுகிறது. #MithaliRaj #DianaEdulji
    மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் மிதாலி ராஜ் நீக்கப்பட்டது போல, தன்னையும் நீக்கியதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். #SouravGanguly #MithaliRaj

    கடந்த சில வாரங்களாக மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில், இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    இதில் பங்குபெற்ற இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து பரிதாபமாக வெளியேறியது. இந்தப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான மிதாலி ராஜை அணியில் சேர்க்காதது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மிதாலியின் மேனேஜரும், "இந்திய கேப்டன் பிரீத் கவூரை கேப்டன் பதவிக்கு தகுதியற்றவர்" என்று விமர்சித்தார். இந்நிலையில், இந்திய ஆண்கள் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இது குறித்த தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

    "உலகின் தலைசிறந்தவர்கள் சில நேரங்களில் இதனை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் " என்று கூறினார். மேலும் "நான் கேப்டனாக இருந்து பின்னர் அணியில் வீரராக தொடர்ந்த போதும் இது இருந்தது. நான் அணியிலிருந்து நீக்கப்பட்டேன். இப்போது மிதாலியை பார்க்கும்போது, அதேதான் தோன்றுகிறது. வெல்கம் டு த குரூப் மிதாலி" என்று கூறியுள்ளார்.



    ‘மிதாலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள். வாய்ப்பு தானாக வரும். அதனால் மிதாலியின் நீக்கத்துக்கு நான் வருந்தவில்லை. ஆனால் இந்தியா இவ்வளவு தூரம் உலகக் கோப்பையில் தோற்காமல் வந்து, கோப்பையை நூலிழையில் தோற்றதுக்கு வருந்துகிறேன்" என்றும் கங்குலி கூறியுள்ளார்.

    கிரேக் சேப்பல் காலத்தில் ஒருநாள் போட்டியின் சிறந்த வீரராக விளங்கிய கங்குலி 15 மாதங்கள் அணியில் இடம்பெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. #SouravGanguly #MithaliRaj
    மிதாலி ராஜ் நீக்கப்பட்ட விவாகரம் குறித்து கேப்டன் பிரீத்கவூர், மிதாலிராஜ், பயிற்சியாளர் ரமேஷ்பவார், ஆகியோருக்கு சம்மன் அனுப்ப கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. #MithaliRaj #HarmanpreetKaur
    புதுடெல்லி:

    வெஸ்ட் இண்டீசில் நடந்த மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்திடம் தோற்றது.

    ‘லீக்’ போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய மகளிர் அணி அரை இறுதியில் மோசமாக ஆடியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

    மிகவும் முக்கியமான ஆட்டத்தில் முன்னாள் கேப்டன் மிதாலிராஜ் நீக்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. 2 அரை சதம் அடித்த பிறகு அவர் காயத்தில் இருந்து குணமடைந்தார். அப்படி இருந்தும் அவர் அரைஇறுதியில் சேர்க்கப்படாதது பூதாகரமானது.

    இதற்கு கேப்டன் ஹர்மித் கவூர் விளக்கம் அளித்து இருந்தார். அவர் கூறும்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றோம். அந்த கூட்டணியை மாற்ற வேண்டாம் என்று முடிவு செய்ததால் மிதாலி ராஜூக்கு இடம் கிடைக்கவில்லை. எந்த முடிவும் அணியின் நலனுக்காகவே எடுக்கப்பட்டது என்றார்.

    ஆனால் மிதாலிராஜ் பயிற்சியாளர், ஹர்மன்பிரித் கவூரை கடுமையாக சாடினார். கவூர் சூழ்ச்சியாக செயல்படுகிறார். அவர் பொய் சொல்கிறார். கேப்டன் பதவிக்கு தகுதியற்றவர் என்று கூறி இருந்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு விசாரணை நடந்த முடிவு செய்து உள்ளது.

    இதுபற்றி விளக்கம் அளிக்க கேப்டன் பிரீத்கவூர், மிதாலிராஜ், பயிற்சியாளர் ரமேஷ்பவார், மானேஜர் திருப்தி பட்டாச்சார்யா ஆகியோருக்கு சம்மன் அனுப்ப இருக்கிறது. அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத்ராய் கூறும்போது, “வீராங்கனைகளின் பயிற்சியாளர்கள் வெறுப்பூட்டும் கருத்துக்களை தேவையில்லாமல் தெரிவிக்கக்கூடாது. அணியில் உள்ள அனைவரும் கண்ணியத்தை காக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். #MithaliRaj #HarmanpreetKaur
    அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இறுதி வரை நியூசிலாந்து வீரர்கள் விளையாடுவார்கள் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. #NewZealand #IndianPremierLeague #IPL2019
    மும்பை:

    12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் அடுத்த ஆண்டு (2019) மார்ச் 23-ந் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மே மாதம் 15-ந் தேதிக்குள் இந்த போட்டி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் இடம் மற்றும் தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    ஐ.பி.எல். போட்டி முடிந்ததும், உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி தொடங்குகிறது. இரண்டு போட்டிக்கும் இடையே குறுகிய கால இடைவெளியே இருப்பதால் ஐ.பி.எல். போட்டி தொடரில் இறுதி ஆட்டம் வரை இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா வீரர்கள் விளையாட அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அனுமதி அளிப்பது சந்தேகம் தான் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனுக்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய பொதுமேலாளர் ஜேம்ஸ் வியர் அளித்த சிறப்பு பேட்டியில், ‘அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டி தொடரில் இறுதிப்போட்டி வரை நியூசிலாந்து வீரர்கள் விளையாட அனுமதி அளிக்க நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதன் மூலம் நியூசிலாந்து வீரர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். கடந்த சீசனில் ஐ.பி.எல். போட்டியில் எங்கள் நாட்டை சேர்ந்த 11 வீரர்கள் விளையாடினார்கள். அது எங்களுக்கு சிறந்த பலனை அளித்தது. எனவே அவர்கள் தொடர்ந்து விளையாட அனுமதிப்பதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

    மேலும் ஆஸ்திரேலிய போட்டி தொடர் முடிந்ததும், இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 23-ந் தேதி நேப்பியரில் நடக்கிறது. 20 ஓவர் போட்டிகள் இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டி தொடங்கும் நேரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடர் குறித்து நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் அளித்த பேட்டியில், ‘இந்திய அணி கடைசியாக 2014-ம் ஆண்டில் நியூசிலாந்தில் விளையாடியது. அதன் பிறகு இரு அணிகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. நியூசிலாந்தை போன்ற தன்மை கொண்ட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் தற்போதைய இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. எங்களது மைதானங்கள் ரன் குவிப்புக்கு உகந்ததாக இருக்கும். இந்திய அணியில் கேப்டன் விராட்கோலி உள்ளிட்ட சில வீரர்கள் சமீபகாலமாக சிறப்பாக ரன் குவித்து வருகிறார்கள். எனவே இந்த போட்டி தொடரில் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் இந்த போட்டி தொடர் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று கூறினார்.

    இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரவிசாஸ்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார். #RaviShastri #indvseng

    புதுடெல்லி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. இதனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீதும் கேள்வி கணைகள் பாய்ந்து வருகின்றன. அவர் பதவி விலக வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இதனால் ரவிசாஸ்திரி பதில் அளிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

    இந்த நிலையில் ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    டெஸ்ட் தொடருக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்களில் விளையாட நாங்கள் தயங்க வில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு முன்னேற்றம் அடைந்து உள்ளோம். ஆனால் அதுபோன்ற ஆட்டம் முதல் டெஸ்டில் ஏன் இருக்கவில்லை என்பதை நினைக்க வேண்டும்.

    பலம் குறைந்த அணிகளுக்கு எதிராக இரண்டு அல்லது மூன்று பயிற்சி ஆட்டங்கள் இருந்தாலும் அது பற்றி கவலை இல்லை. ஏனென்றால் அதுவும் போட்டிதான். ஆனால் போட்டி அட்டவணை கடினமான சூழ்நிலையில் இருக்கும் போது நாம் புரிந்து கொள்ளதான் வேண்டும். ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின் போது டெஸ்ட் தொடருக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அதற்கு நேரம் இருக்கிறதா என்பது தான் கேள்வி.

    டெஸ்ட் போட்டிக்கு முன்பு இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட விரும்புகிறோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடர் முடித்த பிறகு டெஸ்ட் போட்டிக்கு 10 நாட்கள் இடைவெளி இருக்கிறது. ஆனால் பயிற்சி ஆட்டங்கள் அட்டவணையில் இடம் பெறுவது எங்கள் கையில் இல்லை.

    அணி நிர்வாகம் சார்பில் கிரிக்கெட் வாரியத்திடம் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்கள் வைக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது என்றார். இந்திய அணி வருகிற நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட், 3 ஓரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. #RaviShastri #indvseng 

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கடந்த 3 மாத காலக்கட்டத்துக்கு ரூ.2.05 கோடி சம்பளம் முன்பணமாக கிரிக்கெட் வாரியம் வழங்கி உள்ளது. #RaviShastri

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஏ.பி.சி. என பிரிக்கப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

    வீரர்களின் செயல்பாட்டை பொறுத்து அவர்களுக்கு தரம் உயர்த்தப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது.

    இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கடந்த 18.7.2018 முதல் 17.10.2018 வரையிலான 3 மாத காலக்கட்டத்துக்கு ரூ.2.05 கோடி சம்பளம் முன்பணமாக வழங்கப்பட்டு உள்ளது.

    கேப்டன் விராட்கோலிக்கு தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயண ஊதியம், ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற்றதற்கான ஊக்க தொகை என ரூ.1.25 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புஜாராவுக்கு ரூ.2.83 கோடியும், தவானுக்கு ரூ.2.8 கோடியும், ரோகித் சர்மாவுக்கு ரூ.1.42 கோடி சம்பளம் வழங்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமாருக்கு அதிகபட்சமாக ரூ.3.73 கோடி தரப்பட்டு இருக்கிறது.

    இதேபோல பும்ராவுக்கு ரூ.1.73 கோடி, அஸ்வினுக்கு ரூ.2.7 கோடி, இஷாந்த்சர்மாவுக்கு ரூ.1.33, பாண்ட்யாவுக்கு ரூ.1.1 கோடி, சகாலுக்கு ரூ.1.1 கோடி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த தகவலை கிரிக்கெட் வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். #RaviShastri

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது. #AsiaCup2018
    புதுடெல்லி:

    6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 15-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது.

    இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளன. இப்போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் இந்தியா செப்டம்பர் 18-ந் தேதி தகுதி சுற்று அணியையும், மறுநாள் செப்டம்பர் 19-ந் தேதி பாகிஸ்தானையும் எதிர் கொள்கிறது.

    இந்தியாவுக்கு தொடர்ந்து 2 நாட்கள் விளையாட்டு போட்டி அட்டவணை உள்ளது. இதற்கு முன்னணி தொடக்க வீரர் ஷேவாக் கடும் அதிருப்தி தெரிவித்தார். அவர் கூறுகையில்,

    இந்திய அணி முதல் ஆட்டத்தில் விளையாடி விட்டு அடுத்த நாளே பாகிஸ்தானுடன் மோதும் படி அட்டவணை உள்ளது.

    ஓய்வு இல்லாமல் அடுத்தடுத்த நாட்களில் விளையாடுவது கடினம். இதனால் அட்டவணையை மாற்ற வேண்டும். இல்லை யென்றால் இந்தியா ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தினார்.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமும் ஆசிய கோப்பை போட்டி அட்டவணைக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    ஆசிய கோப்பை போட்டி அட்டவணை முட்டாள் தனமாக இருக்கிறது. இதை பார்க்கும் போது மூளையை கூட பயன்படுத்தவில்லை என்பது போல் தெரிகிறது. பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் விளையாடி விட்டு 2 நாட்களுக்கு பிறகு இந்தியாவுடன் மோதுகிறது. ஆனால் இந்தியா அடுத்தடுத்து 2 நாட்கள் விளையாடுவதை எப்படி ஏற்று கொள்ள முடியும்? இந்த போட்டி அட்டவணை ஏற்று கொள்ள முடியாதபடி உள்ளது. மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    போட்டியை நடத்துபவர்களுக்கு இது பணம் கிடைக்கும் போட்டியாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு போட்டி அட்டவணையில் சமநிலை இருக்க வேண்டும் என்றார். #AsiaCup2018
    ×