search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா ஆலை"

    கோவையில் குட்கா ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    கோவை:

    கோவை கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த குட்கா ஆலையில் கடந்த 27-ந் தேதி போலீசார் சோதனை நடத்தினர்.

    அங்கிருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் பான்மசாலா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த ஆலையில் வாசனை பாக்குகள் தயாரிப்பதற்காக உணவு பாதுகாப்பு துறையில் அனுமதி வாங்கி இருப்பதும். வருகிற ஜூலை மாதம் வரை லைசென்சு இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    கடந்த ஜனவரி மாதம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இந்த ஆலையில் ஆய்வு நடத்தி உள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக எந்த பொருட்களும் இல்லை என சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் போலீஸ் சோதனையில் அங்கு குட்கா தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும் அங்கு அதிகமாக இருந்ததால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை சம்பவ இடத்துக்கு வரவழைத்து ஆய்வு நடத்தினர். இதில் அங்கு குட்கா தயாரிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை சார்பில் குட்கா ஆலை நிர்வாகத்துக்கு ஒரு நோட்டீசு வழங்கப்பட்டது. அதற்கு எந்த பதிலும் வராத நிலையில் ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இந்த ஆலையில் கடந்த 5 வருடங்களாக சட்டவிரோதமாக குட்கா தயாரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கும் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆலையில் இருந்து அதிகாரிகள் பலரும் மாமூல் வாங்கியதாகவும் தகவல்கள் வெளியானது.

    இதுகுறித்தும் துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே ஆலை மேலாளர் ரகுராமனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் தெரிய வந்தது. அதன்பேரில் மேலும் சிலரிடம் விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ஆலை உரிமையாளர் அமித் ஜெயினை கைது செய்வதற்காக டெல்லி சென்ற தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலாளர் ரகுராமனுக்கு கோர்ட்டு வழங்கிய போலீஸ் காவல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×