search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளிர்ந்த காற்று"

    திருச்சி- புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையால் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    திருச்சி:

    திருச்சியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், மாலை நேரத்தில் குளிர்ந்த காற்றும் வீசி வந்தது. மாலை பொழுதில் மழை பெய்வது போன்ற அறிகுறி தென்பட்டாலும் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் நேற்றிரவு இடியுடன் பலத்த மழை பெய்தது.

    சுமார் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம், பாலக்கரை, தில்லைநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    மேலப்புதூர் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. தேங்கி கிடந்த தண்ணீரில் கார் ஒன்று சிக்கியது. இதையடுத்து அந்த வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். மேலும், அனைத்து வாகனங்களும் பீமநகர் வழியாக திருப்பி விடப்பட்டன. மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. மாவட்டத்திற்குட்பட்ட புதுக்கோட்டை, ஆலங்குடி, கீரனூர், விராலிமலை , அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரம் வரை மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. நேற்று முன்தினமும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் ஓரளவு தண்ணீர் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்தது.  

    ×