search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா முழு அடைப்பு"

    கேரளாவில் இன்று முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    தென் தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. சுற்று வட்டார பகுதிகளான அத்திக்கோம்பை, மார்க்கம் பட்டி, அம்பிளிக்கை, தாராபுரம், கீரனூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வருகின்றனர்.

    இங்கிருந்து கோவை, பொள்ளாச்சி, புதுக்கோட்டை பகுதிகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பப்படுகிறது.

    குறிப்பாக 60 சதவீத காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. பாலக்காடு, செம்பல்சேரி, வடக்கஞ்சேரி, பெரியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து காய்கறிகளை கொள்முதல் செய்கின்றனர். வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் காய்கறி விற்பனை அதிகமாக இருக்கும். விஷேச நாட்கள் மற்றும் விடுமுறை தினம் என்பதால் அதிக அளவு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படும்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களை அனுமதிப்பது தொடர்பாக அய்யப்ப பக்தர்களிடம் கேரள அரசு கெடுபிடியாக நடந்து கொள்வதை கண்டித்து திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன்பு பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    அப்போது வேணு கோபாலன் நாயர் என்பவர் திடீரென உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அக்கட்சியினர் இன்று முழு கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. இதனால் கேரளாவில் இயல்பு வாழ்க்கை பெரும் அளவு பாதிக்கப்பட்டது.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிலும் ஆர்டர் செய்த காய்கறிகளை வியாபாரிகள் வாங்க வரவில்லை. இதனால் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன.

    தமிழக பகுதிக்கு மட்டும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரும் அளவு காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    மேலும் விலையும் குறைவாகவே கேட்கப்பட்டது. சின்ன வெங்காயம் ரூ.5 முதல் ரூ.12 வரை விலை கேட்கப்பட்டது. பூசணிக்காய் ரூ.1 என்ற விலையில் விற்பனையானது.

    சபரிமலைக்கு செல்ல முயன்ற இந்து அமைப்பின் தலைவி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. #KeralaStrike #Sabarimala #Sasikala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை விழாவிற்காக நேற்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இனி மகரவிளக்கு பூஜை முடியும் வரை கோவில் நடை திறந்திருக்கும்.



    மண்டல, மகரவிளக்கு பூஜைகள் முடியும் வரை 62 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இந்த காலத்தில் கோவிலுக்கு இளம்பெண்கள் வர வாய்ப்புள்ளது என்பதால் இங்கு மீண்டும் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெறும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    எனவே சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைத்த பின்பு சன்னிதானத்தில் யாரும் தங்கக்கூடாது. கடைகள் அனைத்தும் 10 மணியுடன் பூட்டப்பட வேண்டும்.

    பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல்லுடன் நிறுத்தப்படும். நிலக்கலில் இருந்து பம்பைக்கு அரசு பஸ்சில்தான் செல்ல வேண்டும். போராட்டங்கள் நடத்த அனுமதியில்லை. நிலக்கல், பம்பை பகுதிகளில் 144 தடை உத்தரவு என போலீசார் பல்வேறு எச்சரிக்கைகள் விடுத்துள்ளனர்.

    இது தவிர சபரிமலை தொடர்பான போராட்டங்களில் ஈடுபடும் அமைப்புகளையும், அதன் தலைவர்களையும் போலீசார் கண்காணித்து வந்தனர். அவர்கள் பக்தர்கள் வேடத்தில் சபரிமலை சென்று விடாமல் இருக்க கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டக்காரர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் இன்று காலை சபரிமலை போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்து ஐக்கிய வேதி அமைப்பின் பெண் தலைவர் சசிகலா இருமுடி கட்டுடன் சபரிமலைக்கு செல்ல வந்தார். பம்பையில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    சபரிமலை செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் போலீசாருக்கும், சசிகலாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பம்பையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், சசிகலாவை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சசிகலா, ராணியில் உள்ள போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டார். அப்போது சசிகலா, அங்கு நின்ற நிருபர்களிடம் போலீசார் என்னை வேண்டுமென்றே கைது செய்துள்ளனர். என்னை கைது செய்தது பற்றி அமைப்பின் நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தவும் மறுக்கிறார்கள் என்றார்.

    இந்த தகவல் இந்து ஐக்கிய வேதி அமைப்பினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் பா.ஜனதா கட்சியினருடன் இணைந்து போலீஸ் நிலையம் சென்றனர். அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சசிகலா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கட்சி மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவில் பாதுகாப்பு அமைப்பினர் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் குதித்தனர்.

    இதையடுத்து மாநிலத்தின் பல பகுதிகளிலும் பஸ் போக்குவரத்து தடைப்பட்டது. முக்கிய நகரங்களில் கடைகளும் அடைக்கப்பட்டன. ஆனால் நிலக்கலில் இருந்து பம்பை வரையிலான அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. இதுபற்றி போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது, போலீசார் பாதுகாப்பு அளித்தால் மற்ற பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படும் என்றனர்.

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் பஸ்கள் அனைத்தும் மாவட்ட எல்லையான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டது.

    இதனால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பணிக்கு செல்வோர் கடும் அவதிக்கு ஆளானார்கள். #KeralaStrike #Sabarimala #Sasikala
    ×