search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைலாய மலை"

    கைலாய மலைக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழக பக்தர்கள் மோசமான வானிலை காரணமாக சிக்கி இருப்பதால் அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    திருச்செங்கோடு:

    சீனா - நேபாள எல்லையில் கைலாய மலையில் மானசரோவர் ஏரி அமைந்துள்ளது. இங்கு உள்ள சிகரத்தை பக்தர்கள் கைலாயநாதராக நினைத்து வழிபடுவார்கள். இங்கு செல்லும் பக்தர்கள் நேபாள நாட்டின் வழியாக யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாமக்கல், கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 25 தமிழர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கைலாய மானசரோவருக்கு ஆன்மீக சுற்றுலா சென்றனர். சிமிகோட் என்ற இடத்தில் தற்போது மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு சென்ற தமிழக பக்தர்கள் உள்பட அனைவரும் ஊர் திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சுற்றுலா யாத்திரை சென்றவர்களில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வித்யா விகாஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியின் மேலாண்மை இயக்குநர்களில் ஒருவரான குணசேகரன் என்பவரும் ஆவார்.

    இது குறித்து அவரது மகன் வெற்றிச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது தந்தை கடந்த 23-ந்தேதி கைலாய மலையில் உள்ள மானசரோவருக்கு ஆன்மீக சுற்றுலா சென்றார். இன்று அவர் ஊருக்கு வர வேண்டும்.

    ஆனால், இந்தியா- சீனா எல்லையில் உள்ள சிமிகோட் பகுதியில் நிலவி வரும் மோசமான வானிலை, பனிப்பொழிவு போன்றவை காரணமாக எனது தந்தை உள்பட பல தமிழர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். மோசமான வானிலையால் அப்பகுதியில் விமானங்கள் இயக்கப்படவில்லை.

    இதனால் கடந்த 5-நாட்களாக உணவு, மருத்துவ வசதி என எந்த வசதிகளும் இல்லாமல் இருக்கிறார்கள். எனது தந்தையிடம் இது பற்றி செல்போன் மூலமாக கேட்டறிந்தேன். அவர் ராணுவ ஹெலிகாப்டர்கள் வந்தால் தான் எங்களை மீட்க முடியும். சிறிய ரக விமானம் வந்து செல்வதால் பெரும்பாலான பயணிகள் செல்ல முடியவில்லை. ஆகவே, மத்திய அரசு மற்றும் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தலையிட்டு எனது தந்தை உள்பட அனைவரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் குணசேகரன் தொடர்பு கொண்டு கேட்டபோது, நாங்கள் தற்போது பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும், விரைவில் ஊர் திரும்பி விடுவதாகவும் தெரிவித்தார்.

    கடந்த ஏப்ரல், ஜூன் மாதங்களில் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்டனர்.

    நேபாள நாட்டின் மலைப் பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாகவும், நிலச்சரிவு காரணமாகவும் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதில் தமிழகம் உள்பட பல்வேறு மாநில பக்தர்கள் சிக்கினார்கள். அவர்கள் இந்திய தூதரகம் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டு தேவையான உணவுகள், தங்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.
    ×