search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொச்சி துறைமுகம்"

    கொச்சி துறைகம் பகுதியில் உள்ள ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த விசைப்படகு மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில் மேலும் 2 பேர் இறந்ததால், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் கொச்சி முனம்பம் துறைமுகத்தில் இருந்து குமரி மாவட்டம் ராமன்துறையை சேர்ந்த ஏசுபாலன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் உள்பட 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற சரக்கு கப்பல் ஒன்று இவர்களின் விசைப்படகு மீது மோதியது. இதில் அந்த படகு உடைந்து கடலில் மூழ்கியது. படகில் இருந்த ராமன்துறையை சேர்ந்த யாக்கோபு, யுகநாதன், முள்ளூர்துறையை சேர்ந்த சகாயராஜ் ஆகிய 3 மீனவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

    இதைதொடர்ந்து கடலில் மாயமான குமரி மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்கள் உள்பட 9 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த சிஜூ என்ற மீனவர் பிணமாக மீட்கப்பட்டார்.

    கடற்படையினர், விமானப் படையினர் மூலம் தொடர்ந்து மற்ற மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களும் தங்கள் படகுகளில் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் விசைப்படகு உரிமையாளர் ஏசுபாலனின் பிணம் நேற்று இரவு மீட்கப்பட்டது. தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட மீனவர்களின் வலையில் அவரது உடல் சிக்கியது. உடனடியாக ஏசுபாலனின் உடல் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் இதுபற்றி தகவல் கொடுக்கப்பட்டது.

    ஏசுபாலனுக்கு சுபா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அவர்கள் ஏசுபாலன் உடலை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. ஏசுபாலனுக்கு ராஜேஷ் குமார், ஆரோக்கிய தினேஷ் என்ற 2 சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் கடலில் மூழ்கிய படகில் சிக்கி மாயமாகிவிட்டனர். அவர்களது கதி என்னவென்று இதுவரை தெரியாதது அவர்களது குடும்பத்தினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    இந்த விபத்து நடந்து 6 நாட்கள் ஆகிவிட்டதால் மற்ற 7 மீனவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது.

    மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து விஜயகுமார் எம்.பி. கோரிக்கை விடுத்து இருந்தார். அவரும் அதை ஏற்று நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கிடையில் மீனவர்களின் குடும்பத்தினர் விஜயகுமார் எம்.பி.யை சந்தித்து மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினார்கள். அவரும் தான் எடுத்துள்ள நடவடிக்கைகளை அவர்களிடம் விளக்கி கூறினார்.

    ராமன்துறையில் மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மீனவர்களின் விசைப்படகு மீது மோதிய சரக்கு கப்பல் மீது அடையாளம் தெரியாத கப்பல் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், தாங்கள் அந்த கப்பல் பற்றிய அடையாளத்தை ஆதாரத்துடன் கொடுத்துள்ளதால் அடையாளத்தை குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரி இந்த போராட்டம் நடந்து வருகிறது. இன்று 4-வது நாளாக இந்த போராட்டம் நீடிப்பதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
    ×