search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோயம்பேடு மார்க்கெட்"

    • கால்வாய்கள் துரிதப்படுத்தி தூர்வார்கின்ற பணியை மேற்கொள்வதற்கும் துறை சார்பில் உத்தரவிடப்பட்டு இருக்கின்றது.
    • போர்க்கால அடிப்படையில் பெருமழை வெள்ளம் ஏற்பட்டால் சமாளிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர் பாபு கோயம்பேடு வணிக வளாகத்தை இன்று ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பெருமழை வெள்ளத்தின் போது ஏற்படுகின்ற தண்ணீர் தேக்கத்திற்கு நிரந்தர தீர்வாக முதல் கட்டமாக 15 கோடி ரூபாய் செலவில் மழை நீர் கால்வாய் அமைப்பதற்கு உண்டான ஒப்பந்தங்கள் நிறைவுற்று பருவமழையை பொறுத்து அந்த பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

    அதேபோல் ஏற்கனவே இருக்கின்ற புதிதாக கட்டப்பட இருக்கின்ற கால்வாய்களை தவிர்த்து 850 மீட்டர் அளவிற்கு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி தொடங்குகிற போது கட்டப்பட்ட அந்த கால்வாயை மறுசீரமைக்க வேண்டும் என்று சட்டமன்ற பேரவை உறுப்பினர் கோரிக்கை வைத்திருக்கின்றார். அந்த பணிகளும் ஏற்றுக்கொள்ளப்படும்.

    தற்பொழுது மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறுவதால் இந்த பகுதியில் பெய்கின்ற அவ்வப்போது மழைக்கு தண்ணீர் தேங்குகின்ற நிலை இருக்கின்றது முழுவதுமாக சி.எம்.ஆர்.எல். பணி நிறைவுறுவதற்கும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கட்டப்பட இருக்கின்ற 770 மீட்டர் அளவு குண்டான கால்வாய் பணிகளும் இந்த பருவமழைக்கு பிறகு தான் அவை முழுமையாக கட்டுமான பணி நிறைவு பெறுகின்ற சூழ்நிலை இருப்பதால் அந்த இடத்தில் இந்த மழைக்கு தேங்குகின்ற தண்ணீரை வெளியேற்றுவதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 60 ஹெச்பி அளவிற்கு புதிதாக மோட்டார்கள் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கின்றன. அவைகளை உடனடியாக அந்தப் பகுதியில் நிறுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மழை தொடரும் என்று ஆரஞ்சு அலெர்ட் தந்திருக்கின்ற அந்த 14, 15, 16 போன்ற தேதிகளுக்கு கூடுதலாக உடல் உழைப்பு பணியாளர்களை நியமித்து அந்த கால்வாய்கள் துரிதப்படுத்தி தூர்வார்கின்ற பணியை மேற்கொள்வதற்கும் துறை சார்பில் உத்தரவிடப்பட்டு இருக்கின்றது.

    ஆகவே இந்த பெரு மழையை சமாளிப்பதற்கு தமிழக முதலமைச்சருடைய உத்தரவின் பேரில் நம்முடைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 3 முறை கலந்தாய்வு கூட்டங்களை நடத்தியிருக்கின்றார். அந்த வகையில் போர்க்கால அடிப்படையில் பெருமழை வெள்ளம் ஏற்பட்டால் சமாளிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரத்து அதிகரிப்பால் கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • பீன்ஸ் மற்றும் ஊட்டி கேரட் கிலோ ரூ.50-க்கும் விற்கப்படுகிறது.

    போரூர்:

    கோயம்பேடு, மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து வருகிறது.

    வரத்து அதிகரிப்பால் கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்த விற்பனையில் வரி கத்தரிக்காய் கிலோ ரூ.10-க்கும், அவரைக்காய் மற்றும் கொத்தவரங்காய் கிலோ ரூ.15-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.10-க்கும் விற்பனை ஆகி வருகிறது. பீன்ஸ் மற்றும் ஊட்டி கேரட் கிலோ ரூ.50-க்கும் விற்கப்படுகிறது.

    இதேபோல் மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து தக்காளி ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.35 வரையிலும், நாசிக் வெங்காயம் ஒரு கிலோ ரூ.45 முதல் ரூ.55 வரையிலும் விற்கப்படுகிறத. வரத்து குறைவால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை விபரம் வருமாறு (கிலோவில்):-

    உஜாலா கத்தரிக்காய்-ரூ.30, பன்னீர் பாகற்காய்-ரூ.30, பீர்க்கங்காய்-ரூ.25, பச்சை மிளகாய்-ரூ.15, முட்டை கோஸ் ரூ.12, புடலங்காய்-ரூ.10, சுரக்காய்-ரூ.8.

    • நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையும் திறக்கப்பட உள்ளது.
    • பூங்காவும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரப்படும்.

    சென்னை:

    கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில், காய்கறி, பழங்கள், பூக்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள கடைகளில் வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வேலை செய்து வருகின்றனா்.

    இந்நிலையில், தொழிலாளா்கள் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ளவா்கள் பயனடையும் வகையில், ஏற்கனவே ரூ.86 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை அழகுபடுத்தும் விதமாக பூ மார்க்கெட் வளாகத்தில் 7 ஏக்கரில் பிரமாண்டமான பூங்கா அமைக்க சென்னை பெருநகர வளா்ச்சி குழுமம் திட்டமிட்டு, தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த பூங்காவில் நடை பயிற்சிக்கான பாதைகள், குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், செடிகள், மரங்கள், இருக்கைகள், செயற்கை நீரூற்றுகள் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளது.

    மருத்துவமனைப் பணிகள் விரைவில் நிறைவு பெற்று செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில், பூங்காவும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என கோயம்பேடு மார்க்கெட் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

    • மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக அங்கு நடைபெற்று வரும் வெங்காயம் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளியை தொடர்ந்து வெங்காயத்தின் விலையும் அதிகரித்து வருகிறது.

    வழக்கமாக தினசரி 45 லாரிகளில் விற்பனைக்கு குவிந்து வரும் வெங்காயம் கடந்த சில நாட்களாக 30 லாரிகளாக குறைந்து விட்டது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாசிக் வெங்காயம் ரூ.30-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது விலை அதிகரித்து கிலோ ரூ.42-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.55 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக அங்கு நடைபெற்று வரும் வெங்காயம் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால் வெங்காயம் விலை அதிகரித்து இருப்பதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதேபோல் மொத்த விற்பனையில் தக்காளி ஒரு கிலோ ரூ.46-க்கும் வெளிமார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ ரூ.60 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது.

    • முகூர்த்த நாள் என்பதால் மல்லிகைப் பூ மற்றும் கனகாம்பரம் விலை அதிகரித்து உள்ளது.
    • இனி வரும் நாட்களில் பூக்கள் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரி தெரிவித்தார்.

    போரூர்:

    கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

    இன்று முகூர்த்த நாளையொட்டி 35-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து பூக்கள் குவிந்தது. அதிகாலை முதலே சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பூ மார்க்கெட்டில் அதிகளவில் குவிந்தனர். இதனால் பூ விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.250-க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று விலை அதிகரித்து ரூ.450-க்கு விற்கப்பட்டது. இதேபோல் ஒரு கிலோ ரூ.500-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.700-க்கு விற்கப்படுகிறது.

    இதுகுறித்து பூ மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, தற்போது பூக்கள் சீசன் இல்லாததால் வரத்து பாதியாக குறைந்து விட்டது. சாமந்தி பூ ஒரு கிலோ ரூ.200-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் முகூர்த்த நாள் என்பதால் மல்லிகைப் பூ மற்றும் கனகாம்பரம் விலை அதிகரித்து உள்ளது. இனி வரும் நாட்களில் பூக்கள் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.

    கோயம்பேட்டில் பூக்கள் விலை விபரம் வருமாறு (கிலோவில்):-

    சாமந்தி-ரூ.200, மல்லி-ரூ.450, முல்லை-ரூ.250, பன்னீர் ரோஜா-ரூ.100, சாக்லேட் ரோஜா-ரூ.120, கனகாம்பரம்-ரூ.700, அரளி-ரூ.200, சம்பங்கி-ரூ.80.

    • பிப்ரவரி மாதம் வரத்து குறைவால் பூண்டு விலை ஒரு கிலோ ரூ.500வரை விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    • வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி பூண்டு விற்பனைக்கு வருகிறது. கடந்த 10 நாட்களுக்குள் பூண்டுவின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.100 வரை அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ பூண்டு ரூ.160 முதல் ரூ.320 வரை விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ பூண்டு ரூ.200 முதல் ரூ.400வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    உற்பத்தியாளர்களிடம் இருந்து பூண்டுவை அதிகளவில் கொள்முதல் செய்து பின்னர் தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில் அதை பயன்படுத்தி விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். இதனால் பூண்டு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களான பூண்டு பதுக்கலில் ஈடுபடுவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு பூண்டு வியாபாரிகள் கோரிக்கை தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் வரத்து குறைவால் பூண்டு விலை ஒரு கிலோ ரூ.500வரை விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.160-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.200-க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் பீர்க்கங்காய் கிலோ ரூ.70-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.50-க்கும், அவரைக்காய் கிலோ ரூ.60-க்கும், வெள்ளரிக்காய் கிலோ ரூ.40-க்கும், புடலங்காய் கிலோ ரூ.35-க்கும், உஜாலா கத்தரிக்காய் ரூ.25-க்கும், பச்சை மிளகாய் கிலோ ரூ.50-க்கும் மொத்த விற்பனையில் விற்கப்படுகிறது.

    • கடந்த சில நாட்களாக அதிகளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு வரத் தொடங்கி உள்ளன.
    • தினசரி 70-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 250 டன் அளவிலான மாம்பழங்கள் குவிந்து வருகிறது.

    போரூர்:

    மாம்பழம் சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இதனால் சென்னையில் சாலையோரங்களில் மாம்பழக்கடைகள் அதிக அளவில் முளைத்து உள்ளன. அதிக அளவில் மாம்பழங்கள் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அதிக அளவில் மாம்பழங்கள் வருகிறது. கடந்த சில நாட்களாக அதிகளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு வரத் தொடங்கி உள்ளன. தினசரி 70-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 250 டன் அளவிலான மாம்பழங்கள் குவிந்து வருகிறது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை 150 டன் மாம்பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது அதன் வரத்து 2மடங்காக அதிகரித்து உள்ளது. காலையிலேயே வெயில் வாட்டி எடுத்து வருவதால் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் மாம்பழம் விற்பனை மந்தமாகவே நடந்து வருவதாக வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழம் விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்) :-

    பங்கனபள்ளி-ரூ.50-ரூ.80வரை, மல்கோவா-ரூ.120, இமாம்பசந்த்-ரூ.130-ரூ.170வரை, ஜவாரி-ரூ.60-ரூ.80வரை, செந்தூரா-ரூ.80, அல்போன்சா-ரூ.170.

    • 100-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனம் கலந்து மாம்பழம் மற்றும் வாழைத்தார்கள் பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • உணவு பாதுகாப்பு துறையின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு, பழ மார்க்கெட்டில் ரசாயனம் கலந்து செயற்கை முறையில் பழுக்க வைத்து வாழை மற்றும் மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்தது.

    இந்த நிலையில் சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் உத்தரவின்பேரில் கோயம்பேடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சுந்தரமூர்த்தி மற்றும் அங்காடி நிர்வாக குழு ஊழியர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை 5 மணி அளவில் கோயம்பேடு பழ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். 100-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனம் கலந்து மாம்பழம் மற்றும் வாழைத்தார்கள் பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து 4 டன் மாம்பழம் மற்றும் 3 டன் வாழைப்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் உணவு பாதுகாப்பு துறையின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    • தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • இது தொடர்பாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

    போரூர்:

    கோயம்பேட்டில் காய்கறி, பழம், பூ மற்றும் மளிகை மார்க்கெட் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது.

    சுமார் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில் மொத்த மற்றும் சில்லரை விற்பனை நடந்து வருகிறது.

    இதில் வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலின் போது கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து வரும் அனைவரும் ஓட்டு போடுவதற்கு செல்ல வசதியாக வருகிற 19-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மார்க்கெட்டில் உள்ள காய்கறி, மளிகை, பழம் மற்றும் உணவு தானிய வளாகம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். எனினும் 19-ந்தேதி பூ மார்க்கெட் வழக்கம் போல் செயல்படும் என்று பூ வியாபாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

    • தண்ணீர் தட்டுப்பாட்டால் ஆந்திராவில் காய்கறி உற்பத்தி குறைந்துவிட்டது.
    • பீன்ஸ், அவரைக்காய், கேரட் ஆகிய காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து விட்டதால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு, காய்கறி மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் நடைபெற்று வரும் காய்கறி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் தண்ணீர் தட்டுப்பாட்டால் ஆந்திராவில் காய்கறி உற்பத்தி குறைந்துவிட்டது. இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்து உள்ளன. வழக்கமாக தினசரி 550 லாரிகளில் வந்து குவிந்த காய்கறிகள் தற்போது 450 லாரிகளாக குறைந்து விட்டது. இதனால் காய்கறி விலை வழக்கத்தை விட 10 சதவீதம் அதிகரித்து உள்ளன. பீன்ஸ், அவரைக்காய், கேரட் ஆகிய காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து விட்டதால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.60-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது அதன் விலை மேலும் அதிகரித்து ரூ.80-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ100 வரை விற்பனை ஆகிறது. அதேபோல் ஊட்டி கேரட் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

    • கோயம்பேடு சந்தைக்கு தினசரி 10லாரிகள் வரை சுமார் 80 முதல் 100டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம்.
    • கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எலுமிச்சை பழத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    போரூர்:

    கோயம்பேடு, காய்கறி மார்கெட்டுக்கு ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது. தற்போது கோடைவெயில் சுட்டெரித்து வரும் நிலையில் எலுமிச்சை பழம் தேவை அதிகரித்து உள்ளது.

    கோயம்பேடு சந்தைக்கு தினசரி 10லாரிகள் வரை சுமார் 80 முதல் 100டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். கோடை சீசன் தொடங்கி உள்ளதால் பல்வேறு மாநிலங்களுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து எலுமிச்சை பழங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் எலுமிச்சை பழங்களின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.

    கடந்த சில நாட்களாகவே 40 டன் எலுமிச்சை பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எலுமிச்சை பழத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் விலையும் தொடர்ந்து ஏறு முகமாகவே இருந்து வருகிறது. மொத்த விற்பனையில் எலுமிச்சை பழம் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.130வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கடைகளில் எலுமிச்சை பழச்சாறு, குளிர்பானங்கள், சர்பத்தை பலர் விரும்பி குடித்து வருகிறார்கள். இதனால் சாலையோரங்களிலும் எலுமிச்சை சர்பத் கடைகள் பல இடங்களில் முளைத்து உள்ளன.

    • கிலோ ரூ.30-க்கு விற்ற ரோஜாப்பூ 4 மடங்கு அதிகரித்து ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    • வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் பழங்கள் விலை மேலும் பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

    போரூர்:

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்து உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ.250-க்கு விற்ற மல்லிப்பூ தற்போது 2 மடங்காக விலை அதிகரித்து கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ.100-க்கு விற்ற சாமந்தி ரூ.220 வரை உயர்ந்துள்ளது. அதேபோல் கிலோ ரூ.30-க்கு விற்ற ரோஜாப்பூ 4 மடங்கு அதிகரித்து ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல் ஆப்பிள் சீசன் முடிந்து உள்ளதால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோயம்பேடு பழ மார்க்கெட்டில் இந்தியன் ஆப்பிள் ஒரு கிலோ ரூ180-க்கும், ஈரான் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.120-க்கும் விற்கப்படுகிறது. மாதுளை கிலோ 180-க்கும், சாத்துக்குடி கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், கமலா ஆரஞ்சு கிலோ ரூ.50-க்கும், கொய்யா கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் பழங்கள் விலை மேலும் பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விலை விவரம் கிலோவில் வருமாறு:-

    சாமந்தி - ரூ.150 முதல் ரூ.220 வரை, மல்லி - ரூ.500, பன்னீர் ரோஜா ரூ.80 முதல் ரூ.100வரை, சாக்லெட் ரோஜா ரூ.100 முதல் ரூ.120 வரை, அரளி - ரூ.250, செவ்வரளி - ரூ.400, கனகாம்பரம் - ரூ.600, சம்பங்கி - ரூ.180, முல்லை - ரூ.600, ஜாதிப்பூ - ரூ.500.

    ×