search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிபிஐ அதிகாரி"

    மதுரையில் தனியார் நிதி நிறுவனத்தில் சி.பி.ஐ. அதிகாரிபோல் நடித்து நகை-பணத்தை கொள்ளையடிக்க முயன்ற கும்பல் ஊழியர்களின் செல்போன்களை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    மதுரை:

    மதுரை தெற்கு வெளிவீதியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மாலை 4 மணி அளவில் ஒரு நபர் வந்தார். அவர் நகை அடகு வைக்க வேண்டும். அதற்கு என்ன ஆவணங்கள் கொண்டுவர வேண்டும் என்று அங்கிருந்த ஊழியரிடம் விசாரித்து கொண்டிருந்தார்.

    அப்போது அடையாள அட்டையுடன் வருவதாக கூறி விட்டு வெளியே சென்ற அந்த நபர் சிறிது நேரத்தில் 4 பேருடன் மீண்டும் நிதி நிறுவனத்துக்குள் வந்தார்.

    அப்போது அங்கிருந்த ஊழியர்களிடம் உங்கள் நிதி நிறுவனத்திற்கு எதிராக வந்த புகாரின் அடிப்படையில் விசாரிக்க வந்துள்ளோம். நாங்கள் அனைவரும் சி.பி.ஐ. அதிகாரிகள்.

    இங்குள்ள நகை-பணம் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டனர். இந்த நேரத்தில் அங்கிருந்த ஊழியர்கள் 5 பேரின் செல்போன்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் 3 பேரின் செல்போன்களையும் வாங்கி வைத்துக் கொண்டனர்.

    பின்னர் அங்கிருந்த நிதி நிறுவன மேலாளரை சந்தித்து பேசி கொண்டிருந்தனர். அப்போது உடனடியாக லாக்கர் சாவியை தாருங்கள் சோதனை நடத்த வேண்டும் என்று அடிக்கடி கூறி கொண்டே இருந்தனர்.

    அவர்களது நடவடிக்கையில் சந்தேகப்பட்ட நிதி நிறுவன மேலாளர் எச்சரிக்கை அலாரத்தின் சுவிட்சை அழுத்தினார். அப்போது பயங்கர சத்தத்துடன் அலாரம் ஒலித்தது. சுதாரித்துக்கொண்ட அந்த கும்பல் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் செல்போன்களை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டனர்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் போல நிதி நிறுவனத்தில் புகுந்தவர்கள் போலி நபர்கள் என்றும், அவர்கள் அனைவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது.இதுகுறித்து தெற்குவாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது. கொள்ளை முயற்சி நடந்த நிதி நிறுவனத்தில் கைரேகை நிபுணர்களும், போலீசாரும் சோதனை நடத்தினர்.

    நிதி நிறுவன மேலாளர் எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் அங்கிருந்த சுமார் 5 கோடி ரூபாய், நகைகள் தப்பியது.

    ×