search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு முகாம்கள்"

    வேலூரில் காய்ச்சலை தடுக்க நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்தார்.
    வேலூர்:

    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் காய்ச்சல் அதிகரித்து வருவதால், நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்தார்.

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நகரம் மட்டுமல்லாது கிராமங்களிலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குகிறது. இதன் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.

    இதனை தடுக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் ஒன்றியத்துக்கு 3 மருத்துவ முகாம் என 20 ஒன்றியங்களில் மொத்தம் 60 முகாம்கள் தினமும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை செய்த பின்னர், 'டெங்கு' அறிகுறிகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்வார்கள்.

    அத்துடன் காய்ச்சல் பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுகாதார ஊழியர்கள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மற்றவர்களுக்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் பொதுமக்களும் தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

    உதாரணமாக, மழைக்காலத்தில் தண்ணீரை நன்கு காயவைத்து குடிக்க வேண்டும். உணவுகளை சமைத்த உடனே சிறிது நேரத்தில் உட்கொள்வது நல்லது. நீண்ட நேரம் கழித்து உட்கொள்வதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உணவுக்கு முன் தங்கள் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்.

    அதுமட்டுமின்றி, திறந்த வெளியில் மலம் கழித்தலை தவிர்க்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களையோ, அரசு மருத்துவமனைகளையோ அணுகி சிகிச்சை பெற வேண்டும். வீட்டின் அருகில் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×