search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதாரத்துறை அதிகாரிகள்"

    கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த 27 வாகனங்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் ரூ.16.10 லட்சம் அபராதம் விதித்தனர்.
    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே தமிழக எல்லையான புளியரை சோதனை சாவடியில் கடந்த 20-ந் தேதி இரவில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த 12 லாரிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

    இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் சோதனை தீவிரமாக்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் கொட்டுவதற்காக ஏற்றி வந்த பிளாஸ்டிக் கழிவுகளுடன் வந்த 27 வாகனங்கள் அனைத்தும் சோதனைச்சாவடியின் அருகில் உள்ள தனியார் நிலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கழிவுகளுடன் இருந்த 27 வாகனங்களையும் போலீசார் கைப்பற்றி சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தனர். அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் இதுதொடர்பாக செங்கோட்டையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு, நெல்லை சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

    இலத்தூர் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் மாரீஸ்வரி, செங்கோட்டை சுகாதார மேற்பார்வையாளர் ரகுபதி, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேஷ், செல்வமுருகன், செங்கோட்டை தாசில்தார் வெங்கடாசலம், தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த 4 லாரிகளுக்கு தலா ரூ.3 லட்சமும், 18 வாகனங்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதமும், 5 மினிலாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதமும் அபராதம் விதிக்கப்பட்டது.

    அபராத தொகையை செங்கோட்டை அரசு கருவூலத்தில் செலுத்தி ரசீது பெற்ற பின்னர் லாரிகள் மற்றும் வாகனங்கள் விடுவிக்கப்படும் என்றும், கழிவுகளை ஏற்றிய இடத்துக்கே கொண்டு சென்று இறக்கிவிட வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து கழிவுகள் ஏற்றி வந்த லாரி மற்றும் வாகன உரிமையாளர்கள் இன்று அதற்கான அபராத தொகையை கட்டினார்கள். இதன்பின்னர் லாரிகள் மீண்டும் கேரளாவுக்கு திரும்பி சென்றன. #tamilnews
    ×