search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் வியாபாரி"

    ஆலந்தூரில் செல்போன் வியாபாரி ஒருவர் கை, கால் கட்டப்பட்டிருந்த நிலையில் மர்மமாக இறந்த கிடந்தார். இந்த கொலையில் வேலைக்கார பெண்ணுக்கு தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    பண்ருட்டியை சேர்ந்தவர் முகமது சுல்தான் (40). இவர் சென்னை ஆலந்தூர் எம்.கே.என்.சாலை 2-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் தனியாக வசித்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழிலும், ரிச்சி தெருவில் செல்போன் மற்றும் அதன் உதிரி பாகங்கள் மொத்த விற்பனையும் செய்து வந்தார்.

    நேற்று மாலை முகமது சுல்தான் தங்கி இருந்த வீட்டில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து தீயை அணைத்தனர். அப்போது படுக்கை அறையில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் முகமது சுல்தான் இறந்து கிடந்தார்.

    அவரது கை, கால்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. மர்ம நபர்கள் அவரை எரித்து கொலை செய்து தப்பி இருப்பது தெரிந்தது. இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை நடந்த வீட்டின் அருகே கண்காணிப்பு காமிரா எதுவும் இல்லாததால் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

    கொலையுண்ட முகமது சுல்தான் வீட்டில் ஆலந்தூர் ராஜா தெருவை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் வேலை பார்த்து உள்ளார். அவருக்கும், முகமது சுல்தானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. எனவே இந்த மோதலில் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதையடுத்து வேலைக்கார பெண்ணை போலீசார் பிடித்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அந்த பெண்ணுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது சுல்தானை வேலைக்கார பெண்ணின் வருங்கால கணவர் வந்து சந்தித்துள்ளார்.

    பெண் தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. தற்போது வேலைக்கார பெண்ணின் வருங்கால கணவர் ராமேஸ்வரத்திற்கு சென்றிருப்பதாக தெரிகிறது. அவரிடம் விசாரிக்க தனிப்படை போலீசார் அங்கு சென்றுள்ளனர்.
    ×