search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர் மரணம்"

    சென்னை வண்ணாரப்பேட்டையில் 40 வருடமாக ரூ.5 கட்டணத்தில் சிகிச்சை அளித்த டாக்டர் ஜெயசந்திரன் இன்று மரணமடைந்ததையடுத்து அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #FiveRupeeDoctor #DrJayachandran
    ராயபுரம்:

    சென்னை வண்ணாரப்பேட்டையில் டாக்டர் ஜெயசந்திரன் என்று கேட்டால் பலருக்கு தெரியாது. ஆனால் ‘அஞ்சு ரூபா’ டாக்டர் என்று யாரை கேட்டாலும் அடையாளம் காட்டி விடுவார்கள்.

    அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் மக்கள் நல மருத்துவராக வலம் வந்தவர் டாக்டர் ஜெயச்சந்திரன் (71). உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயச்சந்திரன் இன்று மரணம் அடைந்தார்.

    அவரது உடல் பழைய வண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மகள் சரண்யா, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றுகிறார். ஒரு மகன் சரத் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் டாக்டராகவும் மற்றொரு மகன் சரவணன் தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராகவும் இருக்கிறார்கள்.

    ஜெயச்சந்திரனின் மனைவி டாக்டர் வேணி. மகப்பேறு மருத்துவ நிபுணர். சென்னை அரசு பொது மருத்துவமனை டீனாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மொத்த குடும்பமும் மருத்துவத்துறை சார்ந்த குடும்பம்.

    மருத்துவம் தொழில் அல்ல. அது சேவை. அந்த சேவையை ஆத்மார்த்தமாக செய்பவர்கள் மக்கள் மனங்களில் என்றும் வாழ்வார்கள் என்பதை ஜெயச்சந்திரனின் மறைவு எடுத்துக்காட்டியது.

    டாக்டர் ஜெயச்சந்திரனின் சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் கொடைப்பட்டினம் கிராமம். 1947-ல் பிறந்த ஜெயச்சந்திரன் பள்ளிப்படிப்பு முடிந்ததும் சென்னை அரசு மருத்துவ கல்லுரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றார்.

    சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜெயச்சந்திரன் டாக்டர் ஆனதும் டாக்டர் தொழிலுக்கு செல்ல விரும்பவில்லை. மருத்துவ சேவை செய்யவே விரும்பினார். அதனால் ஒரு சிறு கிளினிக்கை தொடங்கினார்.

    தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் ஆரம்பத்தில் வெறும் ரூ.2 மட்டுமே வசூலித்தார். அதையும் அங்குள்ள உண்டியலில் போட சொல்வார். செவிலியர்கள் நியமித்தால் அவர்களுக்கும் சம்பளம் தரவேண்டும் என்பதால் அவரே ஊசி போடுவது, மருந்து மாத்திரைகள் எடுத்து கொடுப்பது போன்ற வேலைகளையும் கவனித்தார்.

    அவரது சேவையால் ஈர்க்கப்பட்டு பகுதிநேரமாக வந்து உதவி செய்து சென்ற செவிலியர்களும் உண்டு. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கு மவுசு குறைந்ததை தொடர்ந்து நோயாளிகள் வற்புறுத்தியதால் கட்டணத்தை ரூ.5 ஆக உயர்த்தினார். கடைசி காலம் வரை அதே கட்டணத்தையே வாங்கிவந்தார்.

    அவரது மருத்துவ சேவைக்கு குடும்பத்தினரும் ஒத்துழைத்தனர். அந்த பகுதியில் இலவச மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள் ஏராளம் நடத்தி இருக்கிறார்.

    டாக்டர் ஜெயச்சந்திரனின் கிளினிக்கில் எப்போதும் கூட்டம் இருக்கும். அதிலும் கிராமப்புற மற்றும் குடிசை பகுதி ஏழைகள் தான் அதிக அளவில் இருப்பார்கள். புறநகர் பகுதிகளில் இருந்தும் பஸ்களில் பலர் வருவார்கள்.



    இன்று அவரது மரண செய்தி அறிந்து ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். குடிசைப் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது அவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

    சேவையால் மக்கள் மனதில் இடம்பிடித்த அஞ்சு ரூபாய் டாக்டருக்கு மக்கள் தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள். #FiveRupeeDoctor #DrJayachandran

    திருமங்கலம் அருகே விபத்தில் டாக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    தஞ்சாவூர் தில்லை நல்லூரைச் சேர்ந்தவர் நாராயணராஜ் (வயது48). அக்குபஞ்சர் டாக்டர். இவர் மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடியில் வாரந் தோறும் 2 நாட்கள் முகாம் நடத்துவார்.

    வழக்கம்போல் முகாம் நடத்துவதற்காக இன்று திருமங்கலம் வந்தார். பின்னர் அங்கிருந்து கள்ளிக்குடி சென்ற அவர் முகாம் நடைபெறும் இடத்துக்கு செல்வதற்காக 4 வழிச்சாலையை கடக்க முயன்றார்,

    அந்த சமயத்தில் அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நாராயணராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக நாராயணராஜை 108 ஆம்புலன்சு மூலம் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். செல்லும் வழியிலேயே நாராயணராஜ் பரிதாபமாக இறந்தார்.

    கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை தேடி வருகிறார்கள்.

    ×