search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாப்சிலிப் கூண்டு"

    மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை டாப்சிலிப் கூண்டில் அடைக்கப்பட்டது. சின்னத்தம்பி யானை அடைக்கப்பட்டுள்ள கூண்டு பகுதியில் 5 யானைகள் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. #ChinnathambiElephant
    பொள்ளாச்சி:

    கோவை தடாகம் பகுதியில் அட்டகாசம் செய்த சின்னதம்பி யானை கடந்த 25-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பிடிபட்ட யானை டாப் சிலிப் வரகளியாறு அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

    ஒரு சில நாட்கள் மட்டுமே வரகளியாறு பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானை கடந்த 31-ந்தேதி வனப்பகுதியில் இருந்து கிழக்கு திசையை நோக்கி இடம் பெயரத்தொடங்கியது.

    வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை இடம்பெயர்ந்து பிப்ரவரி 1-ந் தேதி உடுமலை மைவாடி கரும்பு தோட்டத்துக்குள் புகுந்தது. தொடர்ந்து மடத்துக்குளம், கண்ணாடிப்புத்தூர் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் தஞ்சமடைந்தது. யானையின் நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    அங்கு கலீம், மாரியப்பன் ஆகிய 2 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டது. சின்னதம்பி யானையை கண்டு கும்கி மாரியப்பன் மிரண்டு ஓடியதால் அது விடுவிக்கப்பட்டு சுயம்பு என்ற கும்கி வரவழைக்கப்பட்டது. வனத்துறையின் கண்காணிப்பில் இருந்த யானையை பிடிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து நேற்று காலை 7.15 மணிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. கும்கி யானைகள் உதவியுடன் சின்னத்தம்பி யானை பிடிக்கப்பட்டு வரகளியாறு பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி லாரியில் ஏற்றப்பட்ட யானை இரவு 7 மணியளவில் சேத்துமடை சோதனை சாவடியை அடைந்தது.

    சேத்துமடை சோதனைச் சாவடி பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் யானைக்கு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் பத்திரமாக டாப்சிலிப் கொண்டு செல்லப்பட்டது.

    நள்ளிரவு 12 மணியளவில் வரகளியாறு பகுதிக்கு யானை கொண்டு செல்லப்பட்டது. பிறகு லாரியில் இருந்து இறக்க வனத்துறையினர் முயற்சி செய்து 1.10 மணியளவில் இறக்கப்பட்டது. லாரியில் இருந்து இறக்கப்பட்ட சின்னதம்பி யானை கும்கி, கலீம் மற்றும் 2 பெண் யானைகள் உதவியுடன் கூண்டுக்குள் அடைக்க 30 நிமிடம் போராட்டம் நடந்தது. பின்னர் அதிகாலை 1.40 மணிக்கு சின்னதம்பி யானை கூண்டுக்குள் அடைக்கப்பட்டது.

    கூண்டுக்குள் அடைக்கப்பட்ட யானை ஆரவாரம் இன்றி அமைதியாக இருந்தது. கால்நடை டாக்டர்கள் அசோகன், கலைவாணன் ஆகியோர் யானைக்கு வலி நிவாரணி மற்றும் ஊட்டசத்து ஊசிகளை செலுத்தினர். கால்கள், கழுத்தில் கட்டப்பட்ட கயிறுகளை யானை பாகன்கள் அவிழ்த்துவிட்டனர்.

    பணியின்போது ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வனப்பாதுகாவலர் கணேசன், மாவட்ட வன அலுவலர்கள் மாரிமுத்து, கோவை வன அலுவலர், ஓய்வு பெற்ற வனச்சரக அலுவலரும், மனித- யானை மோதல்களை தடுக்கும் ஆலோசகருமான தங்கராஜ் பன்னீர்செல்வம், வனச்சரக அலுவலர் நவீன்குமார் உட்பட பலர் இருந்தனர்.

    சின்னத்தம்பி யானை அடைக்கப்பட்டுள்ள கூண்டு பகுதியில் 5 யானைகள் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வனப் பாதுகாவலர் கணேசன் கூறும்போது, ஓரிரு மாதங்களில் சின்னத்தம்பி யானை பாகன்களின் கட்டளைகளை புரிந்துகொள்ளும். அதற்கு பிறகு முகாம் யானைகளுடன் சேர்த்துக் கொள்ளப்படும் என்றார்.  #ChinnathambiElephant
    ×