search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டீ காபி விலை உயர்வு"

    திருச்சியில் நாளை முதல் சிறிய கடைகளில் டீ விலை ரூ. 8-ல் இருந்து ரூ.10 ஆகவும், காபி விலை ரூ.10-ல் இருந்து ரூ.13 ஆகவும் உயர்த்தப்படுகிறது.
    திருச்சி:

    உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பி அருந்தப்படும் பானங்களில் முதலிடம் பிடிப்பது டீ தான். ஏழை, எளியோர்  என்ற  பாகுபாடின்றி அனைத்து  தரப்பினருக்கும் உற்சாகத்தை அளிக்கும் உன்னத பானமாகவும், விலையை பொறுத்தவரை  ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருப்பது டீ மட்டுமே.

    தமிழகம் முழுவதும் கடந்த சிலஆண்டுகளாக ரூ.7-க்கு சிறிய  கடைகளில் விற்கப்பட்ட டீயானது கடந்த அண்டுரூ.8ஆகவிலை உயர்த்தப்பட்டது. ஆவின் பால் விலை, சர்க்கரை விலை, கியாஸ்விலை,  மாஸ்டர்களுக்கு சம்பளம் உயர்வு போன்ற  காரணங்களால் டீ  விலை  உயர்த்தப்பட்டதாக அப்போது அறிவிக்கப்பட்டது.

    அதேபோல் ஓட்டல்களில் டீ விலை ரூ.15 ஆகவும், காபி விலை ரூ.20 ஆகவும் இருந்தது. ஓராண்டுக்கு பின்னர் நாளை முதல்  மீண்டும்  டீ,  காபி விலை அதிகரிக்கப்படுகிறது. அதன்படி நாளை முதல் சிறிய கடைகளில் டீ விலை ரூ. 8-ல் இருந்து ரூ.10 ஆகவும்,  காபி விலை ரூ.10-ல் இருந்து ரூ.13 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

    இதற்கான  அறிவிப்பு திருச்சி மாநகரில் உள்ள ஆயிரத்திற்கும்  மேற்பட்ட கடைகளுக்கு திருச்சி மாநகர டீ ஸ்டால் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வு குறித்த அறிவிப்பு போர்டு அனைத்து கடைகளிலும் வைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாட்டுச்சர்க்கரை டீ ரூ.10, பனங்கற்கண்டு பால் ரூ.13, ஆவின் மோர் ரூ.10, பால் அல்லாத டீ ரூ.10 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  தற்போதைய  விலையில் இருந்து ரூ.2 முதல் ரூ.3 வரை உயர்த்தப்படுவதால் தினமும் 5-க்கும் குறையாமல் டீ குடிப்பவர்கள் சற்றே கவலையடைந்துள்ளனர்.

    இதுகுறித்து டீக்கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-

    டீ, காபி விலை உயர்வை பொதுமக்கள்  ஏற்றுக் கொள்ளவேண்டும். டீ, காபி விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.  குறிப்பாக  கடை வாடகை,  மின்  கட்டணம், மாநகராட்சி  வரி,  தொழில் வரி, கடந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு வரி ஆகியவற்றால்  செலவு  அதிகமாகியுள்ளது.

    மேலும்  இதுவரை ரூ.300-க்கு  விற்கப்பட்ட  ஒரு கிலோ தேயிலை தற்போது ரூ.400-க்கு  விற்கப்படுகிறது. அத்துடன் சர்க்கரை விலை உயர்வு, புதிதாக மாநகராட்சியால் கொண்டு  வரப்பட்டுள்ள குப்பைகள்  அள்ள வரி (ஆண்டுக்கு ரூ.2000 வரை), பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிப்பால் பல காரங்கள் விற்பனை செய்வதில் உள்ள சிக்கல்கள், பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் விற்பனை பாதிப்பு போன்றவைகளும் டீ, காபி விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும் என்றார்.

    இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஆனால் திருச்சி தில்லைநகர், கோர்ட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்றே விலை உயர்வு அமலுக்கு வந்துவிட்டது. அதேபோல் டீ விலை ரூ.10 ஆக உயர்த்தப்படுவதால் சிறிய கடைகளில் சில்லறை தட்டுப்பாடும் தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
    ×