search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவண்ணாமலை கல்லூரி மாணவி"

    வழக்கை வாபஸ் பெற பணம் தருவதாக பேராசிரியர் தரப்பினர் மிரட்டுகின்றனர் என்று திருவண்ணாமலை கல்லூரி மாணவி குற்றம் சாட்டியுள்ளார். #ChennaiStudentharassment #AgriCollege

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வரும் சென்னை மாணவி, உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

    விடுதியின் பெண் காப்பாளர்களான பேராசிரியைகள் மீதும் குற்றம் சாட்டியிருந்தார். இது சம்மந்தமாக நீதிபதி மகிழேந்தியிடம் மாணவி வாக்கு மூலம் அளித்தார். அதன் அடிப்படையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகம் சார்பிலும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வருமாறு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அந்த மாணவி தனது பெற்றோருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா விசாரணை நடத்தினார். அப்போது பல்வேறு கேள்விகள் கேட்டுள்ளனர்.

    மேலும் மாணவியின் பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்தும் போலீசார் அந்த மாணவியிடம் எழுத்துப்பூர்வமாக புகார் வாங்கினர். விசாரணை முடிந்து அந்த மாணவி மற்றும் அவரது பெற்றோர் சுமார் 5 மணி நேரம் கழித்து அங்கிருந்து வெளியே வந்தனர்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி நிருபர்களிடம் கூறுகையில்:-

    பாலியல் தொந்தரவு தொடர்பான புகாரில் போலீஸ் விசாரணை தனக்கு திருப்தி அளிக்கவில்லை, இது ஒருதலைப்பட்சமாக உள்ளது. என் மீது தவறு உள்ளது போலவே என்னை குறிவைத்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் சார்பில் இருந்து வழக்கை வாபஸ் பெறக்கோரியும், இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகவும் மிரட்டுகின்றனர் என்றார்.

    ‘‘முதலில் இந்த சம்பவம் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சம்பவத்தை மறைப்பதற்காக போலீசார் செயல்பட்டனர். ஆனால் இதில் நீதிமன்றம் தலையிட்ட பிறகு தான் போலீசார் இந்த சம்பவத்தில் தீவிரம் காட்டி உள்ளனர். இதனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

    இந்நிலையில், இது குறித்து கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி தலைமையில் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    5 பேர் கொண்ட குழுவினர் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் மற்றும் விடுதி வார்டன்கள் உதவி பேராசிரியர்கள் மைதிலி மற்றும் புனிதா ஆகியோரிடமும் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    பின்னர், கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகளிடமும் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    விசாரணை முடித்து வெளியே வந்த உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் எந்த தப்பும் செய்யவில்லை. என்னை ஊடகங்கள் தவறாக சித்தரித்து விட்டதால் நான் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளேன் என்றார்.

    மாணவி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதாவிடம் எழுத்து பூர்வமாக புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் தங்கபாண்டியன் மற்றும் பேராசிரியைகள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. #ChennaiStudentharassment #AgriCollege

    ×