search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவாரூர் கிராம சபை கூட்டம்"

    தி.மு.க. சார்பில் திருவாரூரில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். #MKStalin #DMK
    திருவாரூர்:

    திருவாரூர் அருகே புலிவலத்தில் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தை மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    ‘‘மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனதை வெல்வோம்’’ என்ற மூன்று முழக்கங்களை முன்வைத்து கடந்த 3-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை 12,617 ஊராட்சிகளிலும் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டம் கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருவதால் தி.மு.க. சார்பில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஊராட்சி சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட ஊராட்சி சபை கூட்டம் இன்று (புதன்கிழமை) தொடங்கி பிப்ரவரி மாதம் 17-ந் தேதி வரை நடைபெறும் என தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஊராட்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், ஈரோடு மாவட்டத்தில் பொருளாளர் துரைமுருகனும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலுவும் இன்று தொடங்கி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் இன்று காலை நடைபெற்ற தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    முன்னதாக சென்னையில் இருந்து கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருவாரூருக்கு இன்று அதிகாலை வந்த மு.க.ஸ்டாலின் சன்னதி தெருவில் உள்ள அவரது வீட்டில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின் கார் மூலம் புலிவலம் ஊராட்சி விஷ்ணு தோப்பு என்ற இடத்தில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் கலந்துகொண்டார்.

    கூட்டத்தினரோடு தரையில் அமர்ந்து கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களிடம் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். மக்கள் தெரிவித்த கருத்துக்களை உன்னிப்பாக கேட்ட மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவித்தார்.

    கூட்டம் முடிந்த பின்னர் கட்சியின் ஊராட்சி செயலர் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். மக்கள் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு கட்சியை வளர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன், முன்னாள் அமைச்சர் மதிவாணன், முன்னாள் எம்.பி விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக திருவாரூர் வந்த தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலினுக்கு திருவாரூர் ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் முன்னாள் அமைச்சர் மதிவாணன், சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    செண்டை மேளம் முழங்க பட்டாசுகள் வெடித்து தி.மு.க தொண்டர்கள், மாணவரணி தொண்டர்படை, மகளிரணி என அனைத்து அணியினரும் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    புலிவலம் கிராம சபை கூட்டத்தை முடித்துக்கொண்டு பிற்பகலில் மு.க.ஸ்டாலின் தஞ்சை செல்கிறார். அங்கு சங்கம் ஓட்டலில் ஓய்வெடுக்கும் அவர் மதியம் 3 மணிக்கு மாதாக்கோட்டையில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் மாலை 5 மணியளவில் திருச்சிக்கு புறப்படும் அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.  #MKStalin #DMK
    ×