search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவைத்து எரிப்பு"

    மேலப்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவரின் 3 கார்கள் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.
    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் சுபேர் அகமது (வயது45). இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக உள்ளார். இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் தனது வீட்டுக்கு எதிரே நேற்று இரவு 3 கார்களை நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் அவரது வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக 3 கார்களும் தீப்பிடித்து எரிந்தன. சத்தம் கேட்டு வெளியே வந்த சுபேர் அகமது, உடனடியாக பாளை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு அதிகாரி ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    ஆனாலும் 3 கார்களும் தீயில் எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது. அதிர்ஷ்டவசமாக தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் அணைக்கப்பட்டது. தீ விபத்தில் எரிந்து நாசமான 3 கார்களின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து சுபேர் அகமது மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதில் மேலப்பாளையத்தை சேர்ந்த மற்றொரு ஜமாத் நிர்வாகிகள் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். நேற்று மேலப்பாளையத்தில் இறந்தவர் ஒருவரின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளுக்கும், சுன்னத் ஜமாத் நிர்வாகிகளுக்கும் தகராறு ஏற்பட்டது. போலீசார் இரண்டு தரப்பினரையும் சமரசம் செய்து வைத்தனர்.

    இந்த பிரச்சினையின் எதிரொலியாக தவ்ஹீத் ஜமாத்தின் கிழக்கு மாவட்ட தலைவர் சுபேர் அகமதுவின் 3 கார்களும் தீவைத்து எரிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.



    ×