search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லையில் மழை நீடிப்பு"

    நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் கருப்பாநதி அணை மீண்டும் நிரம்பியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நன்றாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகபட்சமாக குண்டாறு அணைப்பகுதியில் 61 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை தொடங்கிய மே மாதம் பிற்பகுதியில் இருந்து இன்று வரை குண்டாறு அணைப் பகுதியில் மட்டும் தினசரி மழை பெய்து வருகிறது. இடையில் 2 நாட்கள் மட்டுமே மழை பெய்யாமல் இருந்துள்ளது. மற்ற நாட்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குண்டாறு அணை கடந்த 1 மாதமாக நிரம்பி வழிகிறது.

    இந்த சீசனில் நெல்லை மாவட்டத்தில் அதிக மழை பெறும் பகுதியாக குண்டாறு அணை உள்ளது. இதுபோல நகர் பகுதிகளில் செங்கோட்டை பகுதியிலும் அதிக நாட்கள் மழை பெய்துள்ளது. இன்று செங்கோட்டையில் 27 மில்லி மீட்டர் மழையும், தென்காசியில் 11 மில்லி மீட்டர் மழையும் பெய்துள் ளது.

    பாபநாசம் அணைப்பகுதியில் இன்று 8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 2234 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அணை நீர்மட்டம் நேற்றை விட 1.5 அடி உயர்ந்து இன்று 95.80 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் மேலும் 3 அடி உயர்ந்து இன்று 110.70 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 518 கன அடி தண்ணீர் வருகிறது. ஆனால் அணையில் இருந்து 675 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் சற்று குறைந்து 79.80 அடியாக உள்ளது.

    கடனாநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 76 அடியாகவும் ராமநதிஅணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 74 அடியாகவும் உள்ளது. கருப்பாநதி அணை நீர்மட்டம் முழு கொள்ளளவையும் அடைந்து 70.21 அடியில் நிரம்பி வழிகிறது. அடவிநயினார் அணை 2 அடி உயர்ந்துள்ளது. 116.50 அடியாக உள்ளது.

    ×