search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோயாளிகள் அவதி"

    விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர், செவிலியர்கள் தாமதமாக வந்ததால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில் விளாங்குடியை சுற்றியுள்ள வி.கைகாட்டி, ரெட்டிபாளையம் அம்பாபூர், தேளூர், ஓரத்தூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என்பதால் கர்ப்பிணிகள் அதிக அளவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    நேற்று பல்வேறு கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணிகள் மற்றும் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை பெறுவதற்காக பலர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்திருந்தனர். நீண்ட நேரமாகியும் டாக்டர்களோ, செவிலியர்களோ யாரும் வராததால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் கர்ப்பிணிகள் ஓரிடத்தில் உட்கார முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். மருத்துவர்கள் எப்போது வருவார்கள் என நோயாளிகளை பதிவு செய்யும் அலுவலரிடம் கேட்டால் சிறிது நேரத்தில் வந்து விடுவார் என்று கூறியதையடுத்து நோயாளிகள் காத்திருந்தனர்.

    10 மணிக்கு மேல் வந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் காத்திருந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என உள்ள நிலையில் செவிலியர்கள் கூட இல்லாமல் மருத்துவமனை இயங்கி வருகிறது. இது குறித்து சிகிச்சைக்காக கர்ப்பிணியை அழைத்து வந்த உறவினர் ஒருவர் கூறியதாவது:-

    காலை 6 மணிக்கு சிகிச்சை பெறுவதற்காக எனது உறவினரான கர்ப்பிணியை கூட்டி வந்தேன். ஆனால் நீண்ட நேரமாகியும் டாக்டர்களோ, செவிலியர்களோ வராததால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படும் என கூறிவிட்டு டாக்டர்கள் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. எனவே அவசர சிகிச்சை பெற வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். இதையடுத்து இந்த மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரியில் அரசு மருத்துவமனை கடந்த 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிங்கம்புணரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் இந்த மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு அங்கும் மருத்துவ பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் இங்கு 7 மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 2 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதுதவிர இங்கு செவிலியர்கள், மருந்தாளுனர், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது.

    இங்கு பணியாற்றிய மருத்துவர்கள் தற்காலிக பணிக்காக அருகில் உள்ள வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டதால் தான் தற்போது போதிய மருத்துவர்கள் இல்லாமல் இந்த மருத்துவமனை உள்ளதாக தெரிகிறது. இது குறித்து இப்பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் கூறியதாவது:-

    சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் நாளுக்கு நாள் சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த மருத்துவமனையில் தற்போது 2 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். ஆனால் இங்குள்ள அறிவிப்பு பலகையில் 7 மருத்துவர்கள் வரை உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தினம்தோறும் இங்கு வரும் நோயாளிகளுக்கு 2 மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதனால் நீண்டவரிசையில் நின்று நோயாளிகள் மருத்துவரை பார்க்க வேண்டிய நிலை உள்ளதால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த மருத்துவமனையில் ஒரு மாத காலத்தில் 50-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்படுகிறது. ஆனால் பெண் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் தான் பிரசவங்கள் பார்க்கும் நிலை உள்ளது. அதேபோல் மருந்தாளுனர் ஒருவர் மட்டும் பணி செய்வதால் மருந்துகளை வாங்குவதற்கு பலமணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    எனவே சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்ததால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். #DoctorsStrike

    திண்டுக்கல்:

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அரசு டாக்டர்கள், புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்தனர்.

    இது குறித்து திண்டுக்கல் மாவட்ட அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-

    எங்கள் கோரிக்கையை அரசுக்கு பலமுறை எடுத்துகூறி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் செவிசாய்க்க வில்லை. இதனால் திறனாய்வு கூட்டங்களை புறக்கணிப்பது, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தை நிறுத்தியது, சிறப்பு முகாம்களை ரத்து செய்தது போன்ற பல்வேறு மக்கள் நேரடி பாதிப்பு இல்லாத போராட்டங்களில் அரசு டாக்டர்கள் ஈடுபட்டு வந்தோம். ஆனால் அதற்கும் அரசு செவிசாய்க்கவில்லை.

    எனவே இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் 250 டாக்டர்கள் புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதன்பிறகும் அரசு அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் வருகிற 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள அனைத்து அறுவை சிகிச்சைகளையும் நிறுத்துவது, முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தையும், மருத்துவ மாணவ வகுப்புகளையும் புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளோம். மேலும் 8-ந் தேதி முதல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ராஜினாமா கடிதங்களை பெறுவது, 10-ந் தேதி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம், 12-ந் தேதி நோயாளிகளின் சிகிச்சைகளை நிறுத்துவது, 13-ந் தேதி அடையாள வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களை நடத்த உள்ளோம். அப்போதும் தீர்வு கிடைக்க வில்லை எனில் வருகிற 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

    அரசு ஆஸ்பத்திரியில் தற்போது மழைக்கால நோய்கள் தாக்கப்பட்டு ஏராளமானோர் வருகை தருகின்றனர். அதிலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் டெங்கு, வைரஸ் காய்ச்சலால் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகின்றனர். இதுபோன்ற சமயத்தில் அரசு டாக்டர்களின் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பயிற்சி டாக்டர்களை கொண்டு புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதும் அரசு ஆஸ்பத்திரியில் நீண்ட வரிசையில் காத்திருந்து நோயாளிகள் சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். #DoctorsStrike

    மத்திய அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் இணையான ஊதியம் வழங்கக்கோரி அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #DoctorsStrike
    சென்னை:

    தமிழகத்தில் அரசு ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் சுமார் 18 ஆயிரத்து 600 டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இவர்கள் மத்திய அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் இணையான ஊதியம் வழங்கக்கோரி போராடி வருகிறார்கள்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சென்னையில் 4 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், குழந்தைகள் மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். டாக்டர்களின் போராட்டத்தால் புற நோயாளிகள் பிரிவு செயல்படவில்லை.



    நீரிழிவு புற நோயாளிகள் பிரிவு, ரத்த அழுத்தம், தோல் சிகிச்சை, கதிர்வீச்சு, நரம்பியல், கல்லீரல், இருதயம் உள்ளிட்ட அனைத்து புறநோயாளிகள் பிரிவிலும் நோயாளிகள் சிகிச்சைக்காக வரிசையில் காத்து நின்றனர்.

    டாக்டர்கள் சிகிச்சை வராததால் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். உதவி மருத்துவர்கள் மட்டுமின்றி முதுகலை பட்டதாரி மாணவர்கள், உதவி பேராசிரியர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் புறநோயாளிகள் பிரிவு முடங்கியது. காலை 8 மணி முதல் 12 மணி வரை புறநோயாளிகள் பிரிவுகள் வழக்கமாக செயல்படும்.

    சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து காத்து நின்றனர். டாக்டர்கள் வராததால் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 350 டாக்டர்கள், அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 400 டாக்டர்கள் என 750 டாக்டர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டம் தள்ளி வைக்கப்பட்டதால், அரசு டாக்டர்களும் தங்கள் வேலை நிறுத்தத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து டாக்டர்கள் பணிக்கு வந்தனர்.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் 600-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் காலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். பின்னர் அவர்கள் பணிக்கு சென்றனர். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புற நோயாளிகள் உரிய சிகிச்சை கிடைக்காமல் அவதிப் பட்டார்கள். பலர் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக சென்றனர்.

    கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, விருத்தாசலம், வேப்பூர் உள்பட 10 அரசு ஆஸ்பத்திரிகள், 70 ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5 இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள் இன்று புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். #DoctorsStrike

    ×