search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோய் பரிகாரம்"

    நாட்டரசன்கோட்டை என்ற ஊரில், பழமையான கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இது 500 ஆண்டுகால தலவரலாற்றுப் பெருமை கொண்ட சிறப்புமிக்க ஆலயமாகும்.
    நாட்டரசன்கோட்டை என்ற ஊரில், பழமையான கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இது 500 ஆண்டுகால தலவரலாற்றுப் பெருமை கொண்ட சிறப்புமிக்க ஆலயமாகும். சிவகங்கையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, நாட்டரசன்கோட்டை.

    ஆணவ வடிவமான சண்டாசுரனை அழிக்க, வடிவெடுத்த மஹா சக்தி, தேவர்கள் காணும் வகையில், அவர்களுக்கு ஞானக் கண் தந்து, தன் திருவுருக் காட்டியதால் கண்ணுடையாள் என்ற திருநாமம் கொண்டாள்.

    கண்ணுடையாள், கண்ணானந்தி, கண்ணம்மா, கண்ணுடைய நாயகி என்று தமிழிலும், 'நேத்ராம்பிகா' என்று வடமொழியிலும் திருநாமங்கள் அம்மனுக்கு இருந்தாலும், பக்தர்களால், 'கண்ணாத்தாள்' என்றே பரவலாக அம்மன் அழைக்கப்படுகின்றாள்.

    திருக்கோயிலின் முன்பாக திருக்குளம்..சுற்று மதிலுடன், படித்துறைகளுடன் கூடியதாக இருக்கிறது தேவியின் திருக்குளம். இதுவே இத்திருக்கோயிலின் தீர்த்தம்..

    அன்னையின் அருட்சக்தி, இந்த திருக்குள நீரில் நிரம்பியிருப்பதாக‌ ஐதீகம்.. கண் நோய்கள் வந்தால், இந்தத் தீர்த்தத்தை கண்களில் விட்டு கழுவினால், நோய்கள் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை

    ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று, கண்ணுடைய நாயகி அம்மனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது.

    திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, கண் நோய் தீர இந்த அம்மனை அதிகமாக வணங்குகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
    தெலுங்கானா மாநிலத்தின் புகழ்பெற்ற திருத்தலம், தீராத பிணி தீர்க்கும் வைத்திய நரசிம்மர் வாழும் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, யாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில்.
    தெலுங்கானா மாநிலத்தின் புகழ்பெற்ற திருத்தலம், ஸ்கந்த புராணம் புகழும் கோவில், யாத ரிஷிக்கு பஞ்ச நரசிம்மராக இறைவன் காட்சி தந்த இடம், தீராத பிணி தீர்க்கும் வைத்திய நரசிம்மர் வாழும் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, யாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில்.

    யாதகிரி நகரின் எல்லையில் எழிலான சிறிய குன்றில் நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது. சுற்றுச்சுவர், கோபுரங்கள், கருவறை என அனைத்தும் மன்னர்கால சிறிய வேலைப்பாட்டோடு கருங்கல் திருப்பணியாக மாநில அரசால் உருவாக்கப்பட்டு வருகிறது. இக்கோவில் பழங்கோவிலுக்குரிய அம்சத்தோடு அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து நம்பிக்கையோடு 40 அல்லது 48 நாட்கள் தினமும் ஆலயத்தை வலம் வந்து வணங்க வேண்டும். அதன் மூலம் அவர்களின் நோய் பூரண குணம் பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதனால் இவரை ‘வைத்திய நரசிம்மர்’ என்றும் அன்போடு அழைக்கின்றனர். தீயசக்திகள், கிரக தோஷங்கள் உள்ளவர்களுக்கும் கண்கண்ட தெய்வமாக இத்தல லட்சுமி நரசிம்மர் விளங்குகிறார்.

    அது மட்டுமின்றி வாகனம் வாங்குவோர், புது வீடு வாங்கியவர்கள், முதல் குழந்தை பெற்றவர்கள் வந்து செல்லும் திருக்கோவிலாகவும் இது விளங்குகிறது. நித்திய கல்யாண நரசிம்மர் என்பதும் இவரின் கூடுதல் சிறப்பு.

    தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில், ஐதராபாத் - வாரங்கல் வழித் தடத்தில் 6 கிலோமீட்டர் தொலைவில் யாதகிரி திருத்தலம் இருக்கிறது. ஐதராபாத்தில் இருந்து 60 கி.மீ, வாரங்கல்லில் இருந்து 90 கி.மீ தொலைவில் யாதகிரி உள்ளது. போன்கிர் என்ற ரெயில் நிலையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவிலும் இந்த திருத்தலத்தை சென்றடையலாம்.
    ஒருவருடைய சுய ஜாதகத்தின் அடிப்படையில், பாக்கியாதிபதி இருக்கும் இடமறிந்து, அதன் பாதசார பலமறிந்து, நவாம்சத்தில் அது இருக்கும் நிலையறிந்து அதற்குரிய ரத்தினத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
    ஒருவருடைய சுய ஜாதகத்தின் அடிப்படையில், பாக்கியாதிபதி இருக்கும் இடமறிந்து, அதன் பாதசார பலமறிந்து, நவாம்சத்தில் அது இருக்கும் நிலையறிந்து அதற்குரிய ரத்தினத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் எந்த விரலில், எந்த வடிவத்தில் செய்து அணிய வேண்டுமோ, அப்படி அணிந்து கொண்டால் அற்புதப் பலன் கிடைக்கும். ரத்தினங்கள் மருத்துவக் குணம் கொண்டவை என்பதை அனுபவத்தின் மூலம் நீங்கள் காணலாம்.

    மாணிக்க கல் - இதயக் கோளாறை நீக்கும்

    வெண்முத்து - தூக்கமின்மையைப் போக்கும்

    பவளம் - கல்லீரல் கோளாறை அகற்றும்.

    மரகதம் - நரம்புக் கோளாறைக் குணமாக்கும்

    வைரம் - இனவிருத்தி உறுப்புகளில்

    ஏற்படும் கோளாறைச் சரிசெய்யும்.

    வைடூரியம் - சளி, கபம் போன்றவற்றைப் போக்கும்

    புஷ்பராகம் - வயிற்றுக் கோளாறைக் குணமாக்கும்

    கோமேதகம் - வாயுக் கோளாறை அகற்றும்

    நீலம் - வாதநோயைக் குணமாக்கும்.

    நவ ரத்தினங்களைத் தேர்ந்தெடுக்கும் பொழுது நல்ல ஜாதி ரத்தினங்களைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டால் உலகம் போற்றும் வாழ்க்கை அமையும்.
    திருவாரூரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நடனேஸ்வரர் திருக்கோவில். இந்த கோவில் வெண்குஷ்டம் எனப்படும் தொழு நோய் போன்றவற்றை தீர்க்கும் ஆற்றல் பெற்றதாக விளங்குகிறது.
    வெண்குஷ்டம் எனப்படும் தொழு நோய் போன்றவற்றை தீர்க்கும் ஆற்றல் பெற்றவர் நடனேஸ்வரர். திருவாரூரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் மருத நிலத்திற்கு உரிய இயல்புகளோடு உள்ளது தலையாலங்காடு என்னும் திருத்தலம். இங்கு நடனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

    கோவிலுக்கு வெளியே கீழ்புறத்தில் ‘சங்குதீர்த்தம்’ என்ற பெயரில் திருக்குளம் ஒன்று இருக்கிறது. இந்த குளத்தில் வெளியில் இருந்து நீர்வரத்து இல்லை. ஊற்று நீர்தான் பெருக்கெடுத்து குளத்தை நிரப்புகிறது. இந்த தீர்த்தம், அந்த மண்ணுக்கே உரிய வேதி, மருந்துப்பொருட்களோடு கலந்து இருப்பதால், வெண்குஷ்டம் எனப்படும் தொழு நோய் போன்றவற்றை தீர்க்கும் ஆற்றல் பெற்றதாக விளங்குகிறது.

    இந்தத் திருக்குளத்தில் நீராடி விட்டு, ஆலயத்திற்குள் உள்ள சுவாமி, அம்பாளுக்கு 5 நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்பவர்களுக்கு, அபிஷேக விபூதி மற்றும் மூலிகை மருந்து கொடுக்கப்படுகிறது. அதனை எடுத்துச் சென்று 48 நாட்களுக்கு விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு, மூலிகை மருந்தினை சாப்பிட வேண்டும். நோய் தீர்ந்ததும் மீண்டும் ஆலயத்திற்கு வந்து சங்கு தீர்த்தத்தில் நீராடி, சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து, புதுத் துணிகள் சாத்தி வழிபட வேண்டும். இந்த திருக்குளத்தில் தொடர்ந்து 48 நாட்கள் நீராடினால் கண்கண்ட பலன் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
    ஆலயங்களில் இறைவனின் கருவறையில் இருந்து, அபிஷேகம் செய்யப்பட்டு வெளியேறும் நீரை அருந்துவதால் நோய்கள் விலகும் என்பதும் ஐதீகமாக உள்ளது.
    ஆலயங்களில் இறைவனின் கருவறையில் இருந்து, அபிஷேகம் செய்யப்படும் நீர் வெளியேறும் பகுதியை ‘கோமுகம்’ என்று அழைப்பார்கள். கோமுகம் வழியாக வெளியேறும் அபிஷேக நீரை பலரும், பாட்டில்களில் பிடித்துச் செல்வதையும், சிலர் கைகளில் ஏந்தி அருந்தி தலையில் தடவிக் கொள்வதையும் நாம் பார்த்திருப்போம்.

    ஒரு சிலர் அது ஏதோ அசுத்தமான நீர் என்று நினைத்து அதை கண்டுகொள்ளாமல் செல்வதையும் பார்த்திருக்கலாம். இறைவனின் மீது பட்டு கோமுகம் வழியாக வெளியேறும் நீர், கங்கையை விட புனிதமானது என்று சொல்லப்படுகிறது.

    பரணி அல்லது மகம் நட்சத்திரத்தன்று இறைவனை அபிஷேகித்து வெளியேறும் நீரை, பாட்டிலில் பிடித்து வீட்டில் வைப்பது நல்லது என்கிறார்கள். அந்த அபிஷேக நீரை அருந்துவதால் நோய்கள் விலகும் என்பதும் ஐதீகமாக உள்ளது.
    சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்க வல்ல ஆற்றல் மிக்கவராக இருக்கிறார், சுத்தரத்தினேஸ்வரர் கோவிலில் அருள்புரியும் சுத்தரத்தினேஸ்வரர்.
    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே அமைந்துள்ளது ஊட்டத்தூர் திருத்தலம். இங்கு அகிலாண்டேஸ்வரி சமேத சுத்தரத்தினேஸ்வரர் கோவில் இருக்கிறது. அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற இந்த ஆலயம், ஆசிய கண்டத்திலேயே அபூர்வமாக கிடைக்கும் பஞ்சநதன கல்லால் ஆன பஞ்ச நதன நடராஜர் சிலையைக் கொண்ட சிறப்பு மிக்கதாகும்.

    சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்க வல்ல ஆற்றல் மிக்கவராக இருக்கிறார், இத்தலத்தில் அருள்புரியும் சுத்தரத்தினேஸ்வரர். இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், வெட்டிவேரை எடுத்துவந்து இங்குள்ள பஞ்ச நதன நடராஜருக்கு மாலை சாற்றி அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை பருகி வழிபடுவது வழக்கம்.

    இக்கோவிலில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு இளம் பெண்கள் பிரார்த்தனை செய்து 11 வாரங்களுக்கு எலுமிச்சை பழ மாலை அணிவித்துவேண்டிக்கொண்டால் திருமணம் தடைபடாமல் விரைந்து நடக்கிறது. இக்கோவிலில் தட்சிணாமூர்த்தி, வீரபத்திரேஸ்வரர் சன்னிதிகள் அழகுற அமைந்துள்ளன.

    கஜலட்சுமி சன்னிதியை நோக்கி உள்ள காலபைரவருக்கு, 11 வாரங்கள் தொடர்ச்சியாக நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொண்டால் குழந்தைகளின் மன பயம் நீங்குகிறது. காலபைரவரிடம் விவசாயிகள் தங்களது கால்நடைகள் நோயுற்று இருக்க வேண்டும் என்பதற்காக, தேய்பிறை அஷ்டமி அன்று காலஹஸ்த மந்திரத்தை ஜெபித்து பிரார்த்தனை செய்கிறார்கள். இந்த வேண்டுதலால் கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் விரைவில் நீங்குகின்றன.

    கல்லால மரத்தின் கீழ் வீற்றிருப்பது போன்ற தட்சிணாமூர்த்தியை, ஒவ்வொரு குரு ஹோரையில் அதிகாலை நேரத்தில் 11 வாரங்களுக்கு கொண்டக்கடலையை மாலையாக கட்டி சாற்றி வழிபட்டால் தாங்கள் நினைக்கும் நல்லெண்ணங்கள் நிறைவேறுகிறதாம்.

    இங்குள்ள பஞ்ச நதன நடராஜர் சிலை பஞ்ச நதன கல்லால் உருவாக்கப்பட்டதாகும். இந்த நடராஜர் சிலைக்கு வெட்டிவேர் மாலையை சாற்றி பிரம்மதீர்த்தத்தை கொண்டு அபிஷேகம் செய்து, அந்த அபிஷேக நீரையும், பிரம்மதீர்த்த சுனை நீரையும் 45 நாட்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகள் நீங்கப்பெறுகின்றனர். அதனால் இக்கோவில் நடராஜர் தனிச்சிறப்பு கொண்டு விளங்குகிறார். அதற்கு இக்கோவிலுக்கு ஏற்கனவே வந்து வேண்டுதலும், சிறுநீரக உபாதைகளும் நீங்கி சுகம் அடைந்தபிறகு வேண்டுதல் பிரார்த்தனையை நிறைவேற்றும் பக்தர்களே சான்றாகும்.

    பெரம்பலூரில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும், பாடாலூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது ஊட்டத்தூர் திருத்தலம்.
    சேலம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது, கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, வழிபாடு செய்தால் குணமாகும் என்பது ஐதீகம்.
    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது, கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது குறைகளை தெரிவித்தால், அது நியாயமான கோரிக்கையாக இருந்தால், அதனை சித்தேசுவரசாமி நிவர்த்தி செய்வதாகவும், நோய்களை தீர்ப்பதாகவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதனால் கோவிலுக்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    கோவிலில் மாதந்தோறும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் சித்தேசுவர சாமியை தரிசித்தால் நல்லது என்பதால் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆண்டுதோறும் சித்திரை மாதம் 3-வது செவ்வாய்க்கிழமை கோவிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    சித்தேசுவரர் கோவிலை சுற்றி 7 தீர்த்தக்குளங்கள் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளங்களில் புனித நீராடி விட்டு, சாமியை தரிசனம் செய்வது வழக்கம். கோவில் வளாகத்துக்குள் காந்த தீர்த்தக்குளம் உள்ளது. தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவற்றை தலையை சுற்றியும், பாதிக்கப்பட்ட தோல் பகுதியையும் சுற்றி, இந்த காந்த குளத்தில் போட்டால், தோல் வியாதி குணமாகும் என்பது ஐதீகம். மேலும் உப்பு, வெல்லம் போன்றவை தண்ணீரில் கரைவது போன்று கஷ்டங்களும் கரைந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    கோவிலுக்கு அருகில் பொன்னி என்கிற ஒரு ஓடை ஓடுகிறது. இதன் அருகில் தான் தீர்த்தக்குளங்கள் உள்ளன. கஞ்சமலையில் ஏராளமான மூலிகை செடிகள் உள்ளதால், மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர் ஓடை வழியாக தீர்த்தக்குளங்களுக்கு வருகிறது. இதனால் மூலிகை கலந்த தண்ணீரில் குளிப்பதால் நோய்கள் குணமாவதாகவும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

    சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் சித்தர்கோவில் அமைந்துள்ளது. மேலும் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இந்த கோவிலுக்கு பஸ் இயக்கப்படுகிறது. அதாவது இளம்பிள்ளை செல்லும் அனைத்து டவுன் பஸ்களும் சித்தேசுவரர் கோவில் வழியாக தான் செல்கின்றன. 
    நோய்க்கு மருந்து உண்ணும் போது, தன்வந்திரி பகவானை மனதில் எண்ணி, அவர் திருநாமத்தை ஜெபித்தபடியே மருந்தை உண்டால் வெகுவிரைவில் நோய் குணமாகும்.
    நீண்டகாலமாக பலரால் கேட்கப்படும் கேள்வி ஒன்று இருக்கிறது. அது தான் ‘விதியை வெல்ல முடியுமா?’. ‘முடியும்’ என்கிறார்கள் ஒரு சாரார். ‘முடியும் என்பதற்கு பின்னால் முயற்சியும் இருக்க வேண்டும்’ என்பது அவர்கள் கூற்று.

    ‘முடியாது’ என்பது இன்னொரு தரப்பினரின் வாதம். அவர்கள், ஊழ்வினை, பூர்வ புண்ணியம் என்பதை தங்கள் தரப்பு வாதத்திற்கு துணைக்கு அழைக்கிறார்கள். ‘பிறப்பின் போதே அமர்ந்த கிரகங்கள் தான் ஒருவரின் வாழ்க்கையை வழிநடத்திச் செல்கின்றன. எது எப்போது நடக்க வேண்டும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று’ என்பது அவர்களின் வாதம்.

    இவை ஒருபுறம் இருந்தாலும், கிரக பலன்களை சொல்ல வந்த ஞானிகள், பரிகாரத்திற்கும் பக்கம் ஒதுக்கியதை மறுக்க முடியாது. தொடக்கம் என்ற ஒன்று இருந்தால், அதற்கு எதிர்முனையில் முடிவு ஒன்று இருக்க வேண்டும் என்பது நியதி. அந்த வகையில் நம்மை ஆளும் நவக்கிரகங்கள் நம்மை பாதிக்கும் போது, அதில் இருந்து மீள சொல்லப்பட்ட மார்க்கம் தான் பரிகாரம்.

    வியாதி வருவது விதி என்று எடுத்துக் கொண்டால், மருந்து உண்டு நிவாரணம் தேடுவது விதியை வெல்லும் வழி. விதியை வெல்லும் வழியை இறை வழிபாட்டின் மூலமும், சில சமயம் மருந்துகளின் துணையோடும் வெல்ல முயன்றிருக்கிறது மனித இனம். அவர்கள் தான் நம் முன்னோர்கள்.

    ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பார்கள். மனிதனுக்கு தேவையான 16 பேறுகளில் ஆரோக்கியமும் ஒன்று.

    அதனால்தான்...

    ‘கலையாத கல்வியும், குறையாத வயதுமோர்
    கபடு வாராத நட்பும், கன்றாத வளமையுங்
    குன்றாத இளமையும், கழுபிணி யிலாத உடலும்
    சலியாத மனமும், அன்பகலாத மனைவியும்
    தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்
    மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்

    தொலையாத நிதியமும்..’ கேட்டு அம்பிகையிடம் வேண்டுதல் வைக்கிறார் அபிராமிபட்டர்.

    அப்படி அபிராமிபட்டர் ‘கழுபிணி இல்லாத உடல்’ என்ற ஒன்றை தர வல்லவர், தன்வந்திரி பகவான். கல்விக்கு சரஸ்வதி, செல்வத்திற்கு மகாலட்சுமி, வீரத்திற்கு பார்வதி என்று சொல்வது போல், மருத்துவ கடவுள், இந்த தன்வந்திரி பகவான்.

    அமிர்தம் பெறுவதற்காக, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, பாற்கடலில் இருந்து தோன்றியவர், தன்வந்திரி பகவான். இறப்பே இல்லாத அமிர்தத்தோடு அவதரித்தவர். நோய்க்கு மருந்து உண்ணும் போது, தன்வந்திரி பகவானை மனதில் எண்ணி, அவர் திருநாமத்தை ஜெபித்தபடியே மருந்தை உண்டால் வெகுவிரைவில் நோய் குணமாகும்.

    அதுமட்டுமல்ல.. மருந்து உண்பதற்கு நேரமும் இருக்கிறது. மனித இனத்திற்கு மகான்கள் கொடுத்த மகத்தான கொடை தான் பஞ்சாங்கம். அது வெறும் நல்லநேரம், கெட்ட நேரத்தை சொல்வதோடு நின்று விடவில்லை. இந்த காலக் கணிதத்தின் வாயிலாக சகலமும் அறியலாம்.

    அந்த பஞ்சாங்கம் என்ற ஆழ்கடலில் இருந்து, நாம் எடுக்க நினைக்கும் முத்து தான், அமிர்தகடிகை அல்லது அமிர்த நாழிகை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், வியாதிக்கு மருந்து உண்ணும் நேரம். இதை சற்று விளக்கமாக பார்ப்போம்.

    மொத்தம் 27 நட்சத்திரங்கள். நாள் ஒன்றுக்கு ஒரு நட்சத்திரம் வீதம் உதயமாகிறது. ஒரு நட்சத்திரம் நாள் ஒன்றுக்கு தோராயமாக 60 நாழிகைக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ நடப்பில் இருக்கும். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு நாளின் தொடக்கம் என்பது சூரிய உதயத்தில் இருந்து தொடங்குகிறது.

    அந்த வகையில் அமிர்த நாழிகையை கணக்கிட அன்றைய சூரிய உதயம் தெரிந்திருக்க வேண்டும். அதில் இருந்து அமிர்த நாழிகை தொடங்கும் நேரத்தை, மணிக்கணக்காக மாற்றி அதை பின்பற்ற வேண்டும். அவ்வாறு சரியான அமிர்த நாழிகையில் நோய்க்கான மருந்தை உண்பதால் பூரண குணமடைய முடியும் என்பது கவிகாளிதாசர் எழுதிய ‘உத்திரகாலாமிர்தம்’ என்ற நூலில் சொல்லப்பட்டிருக்கும் சூட்சுமம்.

    மருந்து உண்ணும் நேரம் பெரும்பாலும் நான்கு நாழிகைக்கு குறைவில்லாமல் இருக்கிறது. எனவே அமிர்த நாழிகை தொடக்கம் முதல் முடிவு வரை 1½ மணிநேரம் இருக்கிறது. முன் பின் சூரிய உதயத்தை ஒதுக்கி விட்டால் கூட, அதன் மத்திம நேரத்தில் மருந்து உண்ணலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    இந்த இடத்தில் இன்னொறு விஷயத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவசரகால நிவாரணத்திற்கு இது பொருந்தாது.

    ஒரு பாம்பு தீண்டிவிட்டது. அதற்கு மருத்துவம் செய்ய அமிர்த நாழிகைக்காக காத்திருக்க முடியாது. அதே போல் இன்றைய நவீன மருத்துவத்தில் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகள் மருந்து எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. இதில் எந்த நேரத்தில் அமிர்த நாழிகை வருகிறதோ அந்த நேரத்திற்கு மருந்து உண்டால் அந்த நோய் பூரணமாக குணமாகும்.

    மருந்து உண்ணும் நேரம்

    நோய்கள் குணமாக மருந்து உண்ண வேண்டிய அமிர்த நாழிகை நேரம் வருமாறு:-

    அஸ்வினி 21 முதல் 25 நாழிகைக்குள்

    பரணி 30 முதல் 34 நாழிகைக்குள்

    கார்த்திகை 50 முதல் 54 நாழிகைக்குள்

    ரோகிணி 15 முதல் 18 நாழிகைக்குள்

    மிருகசீரிஷம் 30 முதல் 34 நாழிகைக்குள்

    திருவாதிரை 40 முதல் 44 நாழிகைக்குள்

    புனர்பூசம் 14 முதல் 18 நாழிகைக்குள்

    பூசம் 16 முதல் 20 நாழிகைக்குள்

    ஆயில்யம் 40 முதல் 44 நாழிகைக்குள்

    மகம் 20 முதல் 24 நாழிகைக்குள்

    பூரம் 30 முதல் 34 நாழிகைக்குள்

    உத்திரம் 33 முதல் 37 நாழிகைக்குள்

    ஹஸ்தம் 7 முதல் 11 நாழிகைக்குள்

    சித்திரை 16 முதல் 24 நாழிகைக்குள்

    சுவாதி 22 முதல் 26 நாழிகைக்குள்

    விசாகம் 20 முதல் 24 நாழிகைக்குள்

    அனுஷம் 14 முதல் 18 நாழிகைக்குள்

    கேட்டை 31 முதல் 35 நாழிகைக்குள்

    மூலம் 14 முதல் 18 நாழிகைக்குள்

    பூராடம் 10 முதல் 14 நாழிகைக்குள்

    உத்திராடம் 14 முதல் 18 நாழிகைக்குள்

    திருவோணம் 20 முதல் 24 நாழிகைக்குள்

    அவிட்டம் 14 முதல் 18 நாழிகைக்குள்

    சதயம் 20 முதல் 24 நாழிகைக்குள்

    பூரட்டாதி 10 முதல் 14 நாழிகைக்குள்

    உத்திரட்டாதி 18 முதல் 22 நாழிகைக்குள்

    ரேவதி 12 முதல் 16 நாழிகைக்குள்

    இந்த கால நேரத்தில் மருந்து உண்டால், நோய்கள் விரைவில் பூரண குணமடையும் என்பது நமது சித்தர்கள் கண்ட ராஜ வைத்தியமாகும். 
    நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்த, மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம் இதய நோய்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கின்றது.
    திரிபுர சம்ஹாரத்தில் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் ஏற்பட்ட சாபத்தை நீக்கிய இறைவன் வாழும் ஆலயம், மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கையின் தோஷம் நீக்கிய தலம் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்த, மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம்.

    இந்த ஆலயம் இதய நோய்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கின்றது. இதய நோய் உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் 11 நெய் தீபம் ஏற்றி, சுவாமிக்கு அர்ச்சனை செய்தும், பாலாபிஷேகம் செய்தும், அபிஷேக பாலை அருந்தியும் வந்தால் நோய் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மூவலூர் அமைந்துள்ளது. மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறைக்கு மேற்கே 5 கி.மீ தூரத்தில், மயிலாடுதுறை ஜங்சன் இருக்கிறது. அங்கிருந்து 1 கி.மீ. தொலைவில், மூவலூர் அமைந்துள்ளது. மூவலூர் தேரடி பேருந்து நிறுத்தத்திற்கு அருகே ஆலயம் அமைந்துள்ளது.

    ×