search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளங்கி கோம்பை சாலை"

    கொடைக்கானல் அருகே சேதமடைந்த பள்ளங்கி-கோம்பை சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் இருந்து 18 கி.மீ தூரத்தில் பள்ளங்கி- கோம்பை கிராமம் அமைந்துள்ளது. கொடைக்கானலில் இருந்து பள்ளங்கி வரை மட்டுமே அரசு பேருந்து செல்கின்றது. பள்ளங்கி முதல் கோம்பை சுமார் 8 கி.மீ. தூரத்திற்கு அரசு பேருந்தோ தனியார் பேருந்தோ இயங்குவதில்லை. இதற்கு முக்கிய காரணம் பள்ளங்கி முதல் கோம்பை வரை 15 வருடங்களுக்கு முன் போடப்பட்ட சாலை தற்போது வரை முறையான பராமரிப்பு வேலைகள் செய்யாததே காரணமாகும்.

    மேலும் கோம்பை பகுதியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் வாகன வசதி இல்லாததால் தங்களது உறவினர்கள் வீட்டிலோ அல்லது தங்கும் வசதி கொண்ட பள்ளிக்கூடங்களில் சேர்ந்தே படிக்கின்றனர்.

    மேலும் மருத்துவ அவசர உதவிக்கு 108 ஆம்புலன் சின் உதவியை நாடினால் தங்களது பகுதிக்கு செல்லும் சாலை சரியாக இல்லாதால் வரமுடியாது என்றும், சில சமயங்களில் அனுப்பி வைக்கின்றோம் என்றும் கூறுகின்றனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதில்லை.

    இதனால் விபத்துகளில் சிக்கி முதலுதவி குறித்த நேரத்தில் கிடைக்காமல் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை மிக அதிகம். மகப்பேறு காலங்களில் இவர்களது பாடு திண்டாட்டம். சாலைவசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, கல்வி வசதி என எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லாததால் இந்த கிராமத்திற்கு பெண் கொடுப்பதற்கு பெண் வீட்டார் தயங்கும் சூழல் உருவாகியுள்ளது . கடந்த வாரம் கனகு என்பவர் காய்கறி மூடையை தலைச்சுமையாக கொண்டு செல்லும்போது கரடு முரடான சாலையில் தவறி விழுந்து அதிக காயம் ஏற்பட்டதாலும், அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வரமறுத்த தாலும் தாமதமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

    எனவே தொடர் விபத்துகளை சந்திக்கும் இதனை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×