search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் பணம்"

    செங்குன்றம் அருகே ஆந்திரா பஸ்சில் ரூ. 1 கோடி சிக்கிய சம்பவம் தொடர்பாக நகை வியாபாரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாதவரம்:

    ஆந்திராவில் இருந்து செங்குன்றம் வழியாக சென்னைக்கு வாகனங்களில் குட்கா புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து டி.எஸ்.பி. ஜூலியஸ் சீசர் உள்ளிட்ட போலீசார் இன்று காலை செங்குன்றம், ஜி.என்.டி. சாலையில் பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பஸ்சில் திடீர் சோதனை நடத்தினர்.

    பஸ்சில் இருந்த விஜயவாடா, பாவக்காபுரம் பகுதியை சேர்ந்த துர்க்கா ராவ் என்பவரது பையை திறந்து பார்த்தனர். அதில் கட்டு, கட்டாக பணம் இருந்தது.மொத்தம் ரூ. 1 கோடியே 5 லட்சம் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்திற்கான ஆவணம் துர்க்கா ராவிடம் இல்லை.


    இதையடுத்து ரூ. 1 கோடியே 5 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை செங்குன்றம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக துர்க்கா ராவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர், தான் நகை வியாபாரி என்றும், சென்னையில் நகை வாங்குவதற்காக பணத்தை எடுத்து வந்ததாகவும் தெரிவித்தார்.

    பணத்திற்கான ஆவணம் அவரிடம் இல்லாததால் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பிடிபட்ட பணம் யாருடையது? எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆந்திரா பஸ்சில் ரூ. 1 கோடியே 5 லட்சம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×