search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாக்சிங் டே டெஸ்ட்"

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் நடைபெற்ற மெல்போர்ன் ஆடுகளத்தை ‘சராசரி’ என மதிப்பீடு செய்துள்ளது ஐசிசி. #AUSvIND #ICC
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பொதுவாக ஒரு டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு, போட்டி நடைபெற்ற மைதானத்தின் ஆடுகளம் எப்படி செயல்பட்டது என்பதை ஐசிசி மதிப்பீடு செய்யும்.

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இந்த போட்டி மிகவும் சவாலான போட்டியாக இருந்து. ஆடுகளத்தில் அதிக அளவு புற்கள் காணப்பட்டது. பவுன்சர் பந்திற்கு அதிக அளவில் ஆடுகளம் ஒத்துழைத்தது. பெர்த் ஆடுகளத்தை ஐசிசி ‘சராசரி’ ஆடுகளம் என மதிப்பீடு செய்தது. இதற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.



    இந்நிலையில் 3-வது போட்டி நடைபெற்ற மெல்போர்ன் ஆடுகளத்தையும் ‘சராசரி’ என மதிப்பீடு செய்துள்ளது. மெல்போர்ன் மைதான ஆடுகளம் முதல் இரண்டு நாட்களில் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது. மூன்றாவது நாள் மதிய உணவு இடைவேளைக்குப்பிறகு பவுன்ஸ் பந்திற்கு சாதகமாக இருந்தது. இதனால் பும்ரா, கம்மின்ஸ் பந்து வீச்சில் அசத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்திய அணி புகழ்மிக்க மெல்போர்ன் மைதானத்தில் 37 வருடத்திற்குப் பிறகு வெற்றி வாகை சூடியுள்ளது. #AUSvIND #ViratKohli #TeamIndia
    மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா 37 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது. 3-வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு மெல்போர்னில் இந்தியா 12 டெஸ்டில் 2 வெற்றி, 8 தோல்வி, 2 டிரா பெற்று இருந்தது. 1978-ம் ஆண்டு பி‌ஷன்சிங் பெடி தலைமையிலும், 1981-ம் ஆண்டு சுனில் கவாஸ்கர் தலைமையிலும் வென்றிருந்தது.



    தற்போது இம்மைதானத்தில் 37 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு வெற்றியை ருசித்து உள்ளது. மேலும் பாக்சிங் டே டெஸ்டை இந்தியா வென்றதே கிடையாது. தற்போது ‘பாக்சிங் டே’ டெஸ்டில் வெற்றி வாகை சூடியது
    மெல்போர்ன் வெற்றி மூலம் விராட் கோலி தலைமையில் இந்திய அணி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளது. #AUSvIND #TeamIndia
    மெல்போர்ன் வெற்றி மூலம் விராட் கோலி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் 26-வது வெற்றியை ருசித்துள்ளது. அவரது தலைமையில் இந்தியா 45 டெஸ்டில் போட்டியில் விளையாடி இந்த வெற்றியை பெற்றுள்ளது. 10 போட்டியில் தோல்வியடைந்துள்ளது. 9 டெஸ்ட் போட்டிகள் ‘டிரா ஆகியுள்ளது.

    இன்னும் ஒரு வெற்றி பெற்றால் இவர் டோனியின் சாதனையை சமன் செய்வார். டோனி தலைமையில் இந்தியா 27 டெஸ்டில் (மொத்தம் 60) வெற்றி பெற்றுள்ளது.

    வெளிநாட்டு மண்ணில் கங்குலி தலைமையில் இந்திய அணி 11 வெற்றிகள் பெற்றதே இதுவரை சாதனையாக இருந்தது. மெல்போர்ன் டெஸ்ட் வெற்றி மூலம் கங்குலியின் சாதனையை கோலி சமன் செய்தார். வெளிநாட்டில் கோலி தலைமையில் இந்தியாவின் 11-வது வெற்றி இதுவாகும்.

    1986-ம் ஆண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா (சேனா- SENA) மண்ணில் ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளது.

    ‘சேனா’ நாடுகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் விராட் கோலியே. அவர் 4 வெற்றிகள் பெற்றுள்ளார். இதன் மூலம் டோனி, பட்டோடியை முந்தினார். இருவரும் தலா 3 வெற்றிகளை பெற்று இருந்தனர்.
    சிட்னியில் 3-ந்தேதி தொடங்கும் 4-வது டெஸ்டிலும் வெற்றி பெறுவோம் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். #AUSvIND
    மெல்போர்ன் ‘பாக்கிங் டே’ டெஸ்டில் வெற்றி பெற்றது குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    நாங்கள் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஆகிய 3 துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் அபாரமாக விளையாடி இந்த வெற்றியை தேடித்தந்தார்கள். பாராட்டுகள் அனைத்தும் பும்ராவிற்கே.

    பேட்டிங்கை பொறுத்தவரை புஜாரா தொடர்ந்து சிறப்பாக செயல்படுகிறார். புதுமுக வீரர் அகர்வாலும் மெல்போர்ன் டெஸ்டிலும் நன்றாக விளையாடினார். எங்கள் அணியின் வெற்றியை இனி யாரும் தடுக்க முடியாது. சிட்னியில் நடைபெறும் 4-வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறுவோம். மெல்போர்ன் டெஸ்ட் வெற்றி எங்களது நம்பிக்கை அதிகரித்துள்ளது.



    ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் முதல் இந்திய கேப்டன் நானாக இருப்பேனா? என்பது தெரியாது. நேர்மையான பதிலும் அளிக்க இயலாது. மெல்போர்ன் டெஸ்டில் ‘பாலோஆன்’ கொடுக்காதது குறித்து விமர்சனம் செய்கிறார்கள். இதுபற்றி நான் கவலைப்படவில்லை. மேலும் ரன்களை சேர்க்க விரும்பினோம். 4-வது மற்றும் 5-வது நாள் ஆட்டத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமானது.

    இவ்வாறு அவர் கூறினார்
    மெல்போர்ன் டெஸ்டில் 137 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இந்திய பந்து வீச்சாளர்களை ஆஸி. கேப்டன் வெகுவாக பாராட்டியுள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்றது. இதில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை இந்தியா 151 ரன்னில் சுருட்டியது.

    இந்நிலையில் தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில் ‘‘பெர்த் டெஸ்டில் நாங்கள் சில முன்னேற்றங்கள் அடைந்தோம். ஆனால் மொல்போர்னில் ஏமாற்றமே மிஞ்சியது. நாங்கள் சில உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாடிக் கொண்டிருக்கிறோம். சிட்னி தொடருக்கு முன் சில நேர்மறையான வழிகளைத் தேட வேண்டியது அவசியமானது.

    எங்களுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. பேட்டிங் ஆர்டர் குறித்து சிறு ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. ஆனால் சிட்னி சீதோஷ்ண நிலை முற்றிலும் மாறுபட்டது. ஆகவே, நாங்கள் சிறந்த பார்முலாவை முடிவு செய்ய வேண்டும். மெல்போர்ன் பிட்ச் குறித்து சிலர் குறை கூறுகிறார்கள். ஆனால் மெல்போர்ன் ஆடுகளம் சிறப்பானதுதான்.

    இந்தத் தொடரில் கம்மின்ஸ் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரது பந்து வீச்சு எப்போதும் தரமாகத்தான் இருக்கும். ஆனால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவருடைய முயற்சியை பார்க்க வேண்டும். அவரைப்போன்று மற்ற பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்’’ என்றார்.
    மயாங்க் அகர்வாலின் ரஞ்சி கிரிக்கெட்டின் முச்சதத்தை விமர்சித்த ஆஸ்திரேலிய வர்ணனையாளருக்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AUSvIND
    மெல்போர்ன் டெஸ்டில் மிகவும் கடினமான சூழலில் இந்திய அறிமுக வீரர் மயாங்க் அகர்வால் முதல் இன்னிங்சில் அரைசதம் விளாசினார். ஆனால் அவர் குறித்து வர்ணனையாளரான ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கெர்ரி ஓ’கீபே இழிவுபடுத்தும் வகையில் பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    ‘‘மயாங்க் அகர்வால் ரஞ்சி கிரிக்கெட்டில் முச்சதம் அடித்திருப்பதாக அறிகிறேன். அது ஜலந்தர் ரெயில்வே கேன்டீன் ஊழியர்கள் லெவன் அணிக்கு எதிராக எடுக்கப்பட்டதாக இருக்கும்’’ என்றார். அவரது பேச்சு இந்திய அணி நிர்வாகத்தை கோபத்திற்குள்ளாக்கி இருக்கிறது.

    கெர்ரி ஓ’கீபே கருத்து குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறும்போது, ‘‘காயப்படுத்தும்படியான ஒரு கருத்து இது. ஆனால் இவ்வாறு சிலர் கூறும்போது ஒன்றும் செய்ய முடியாமல் போய் விடுகிறது. அது நம் கட்டுப்பாட்டுக்கு அப்பால் இருக்கிறது. இத்தகைய விமர்சனங்களால் பாதிக்கப்படும்போது களத்தில் சிறப்பாக செயல்படுவதுதான் அதற்கு எல்லாம் சரியான பதிலாக இருக்கும். இது குறித்து அதிகாரபூர்வமாக புகார் செய்யும் எண்ணம் ஏதும் இல்லை’’ என்றார்.

    இந்திய தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறும்போது, ‘‘கெர்ரிக்காக அகர்வாலிடம் ஒரு திட்டம் உள்ளது. அதாவது நீங்கள் (கெர்ரி) கேன்டீன் திறக்கும்போது அகர்வால் அங்கு வந்து காபியை முகர்ந்து பார்ப்பார். அதை இந்திய காபியுடன் ஒப்பிடுவார். உங்களது காபி சிறந்ததா? அல்லது எங்கள் நாட்டின் காபி சிறந்ததா? என்பதை அவர் முடிவு செய்வார்’’ என்று பதிலடி கொடுத்தார்.

    கெர்ரி ஓ’கீபேவை, சமூக வலைதளத்தில் இந்திய ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். இதற்கிடையே, தனது கருத்துக்கு, கெர்ரி  ஓ’கீபே மன்னிப்பு கேட்டுள்ளார்.
    மெல்போர்ன் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் இந்தியா 137 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. #AUSvIND
    மெல்போர்ன்:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் எந்த ஒரு வீரரும் 25 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 66.5 ஓவர்களில் 151 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. பும்ரா 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பாலோ-ஆன் வழங்கவில்லை. ஒருவேளை கடைசி நாளில் பேட்டிங் செய்யும் நிலை ஏற்பட்டால் சேசிங் செய்வது மிகவும் கடினம் என்று கருதிய இந்திய அணி நிர்வாகம் 292 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடுவது என்று முடிவு செய்தது.

    ஆனால் 2-வது இன்னிங்ஸ் இந்தியாவுக்கு திருப்திகரமாக அமையவில்லை. இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து இருந்தபோது தனது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சின் 292 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    இதனைத்தொடர்ந்து இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை துவங்கி ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. கம்மின்ஸ் 61 ரன்னுடனும், நாதன் லயன் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. காலையில் மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கவில்லை. பின்னர் மதிய உணவு இடைவேளைக்குப்பின் ஆட்டம் தொடங்கியது. கம்மின்ஸ் 63 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். நாதன் லயன் 7 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 261 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இதனால் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-1 என தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. #AUSvIND #TeamIndia
    மெல்போர்ன் டெஸ்டில் 6 ரன்களுக்குள் புஜாரா, விராட் கோலி, ரகானே, ரோகித் சர்மா ஆட்டமிழந்து 72 வருடகால மோசமான சாதனையை சமன் செய்துள்ளனர். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா 151 ரன்னில் சுருண்டது. 292 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. கம்மின்ஸ் வீசிய 13-வது ஓவரின் கடைசி பந்தில் விஹாரி ஆட்டமிழந்தார். அவர் 13 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து 3-வது வீரராக களம் இறங்கிய புஜாரா (0), 4-வது வீரராக களம் இறங்கிய விராட் கோலி (0), 5-வது வீரராக களம் இறங்கிய (1) ரகானே, 6-வது வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா (5) ஆகியோர் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். ரோகித் சர்மாவைத் தவிர மற்ற மூன்று பேரையும் கம்மின் 6 பந்தில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் வீழ்த்தினால். இதில் விராட் கோலி, ரகானேவை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.



    கடந்த 25 வருடங்களாக இப்படி 3 முதல் 6-ம் நிலை வரை களம் இறங்கும் பேட்ஸ்மேன்கள் சொதப்பியது கிடையாது. நான்கு பேரும் சேர்ந்து 6 ரன்கள் மட்டுமே எடுத்ததன் மூலம் குறைவாக பெற்ற ரன்கள் என்று கடந்த 72 ஆண்டு காலமாக இருக்கும் மோசமான சாதனையை சமன் செய்துள்ளனர்.

    இதற்கு முன் 1946-ல் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் (3 முதல் 6 வரை) 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளனர். அதன்பின் தற்போதுதான் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளனர்.



    1969-ல் ஐதராபாத்தில் நியூசிலாந்திற்கு எதிராக 9 ரன்களும், 1983-ல் அகமதாபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 9 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்துள்ளனர்.
    மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஷான் மார்ஷை ‘ஸ்லோ யார்க்கர்’ பந்தால் வீழ்த்த ரோகித் சர்மாதான் ஐடியா கொடுத்தார் என பும்ரா தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இன்று காலை ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. மார்கஸ் ஹாரிஸ் 22 ரன்னிலும், ஆரோன் பிஞ்ச் 8 ரன்னிலும், கவாஜா 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    4-வது விக்கெட்டுக்கு ஷான் மார்ஷ் உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இருவரும் தாக்குப்பிடித்து விளையாடினார்கள். இதனால் உணவு இடைவேளை நெருங்கிய நிலையில் ஆஸ்திரேலியா மேலும் விக்கெட் இழக்கவில்லை. உணவு இடைவேளைக்கான கடைசி ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் ஐந்து பந்திலும் விக்கெட் ஏதம் விழவில்லை.

    கடைசி பந்தை ஷான் மார்ஷ் எதிர்கொண்டார். யாரும் எதிர்பாராத வகையில் பும்ரா அந்த பந்தை ஸ்லோ யார்க்கராக வீசினார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஷான் மார்ஷ் பந்தை தடுக்க முயன்றார். ஆனால் பந்து பேடில் பட்டதால் சந்தேகமின்றி எல்பிடபிள்யூ ஆனார்.

    அதன்பின் பும்ரா அபாரமாக பந்து வீசி 15.5 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார். இன்றைய 3-வதுநாள் ஆட்டம் முடிந்தபின், பும்ரா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது ஷான் மார்ஷ் ஆட்டமிழந்தது குறித்து பும்ரா கூறுகையில் ‘‘நான் உணவு இடைவேளைக்கான கடைசி ஓவரை வீசும்போது ஆடுகளம் பெரிய அளவில் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை. பந்தும் சாப்ட்-ஆக இருந்தது.



    மிட்-ஆஃப் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ரோகித் சர்மா என்னிடம், ‘‘இது கடைசி பந்து. நீங்கள் ‘ஸ்லோ’வாக வீச முயற்சி செய்யுங்கள்’’ என்றார். ஒருநாள் போட்டியில் நான் அதிக அளவில் பயன்படுத்தும் யுக்தியை அவர் கூறியதால், நான் அதை முயற்சி செய்ய முடிவு செய்தேன். திட்டத்தை சரியாக வெளிப்படுத்தியதால், கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தினோம்.

    உண்மையிலேயே ரோகித் சர்மா ஆலோசனை வழங்கியதற்காக நன்றி சொல்லனும். ஆடுகளம் மிகவும் ஸ்லோவாக இருந்தது. இதனால் பேட்ஸ்மேன்கள் திணற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆகவே, இந்த ஆடுகளத்தில் ஸ்லோ பந்துகளை வீச வேண்டிய நிலை ஏற்பட்டது’’ என்றார்.
    மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விராட் கோலி, புஜாரா, ரகானேவை சாய்த்தார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா 151 ரன்னில் சுருண்டது.

    292 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஜோடியான ஹனுமா விஹாரி - மயாங்க் அகர்வால் 12-வது ஓவர்கள் தாக்குப்பிடித்தனர்.

    கம்மின்ஸ் வீசிய 13-வது ஓவரின் கடைசி பந்தில் விஹாரி ஆட்டமிழந்தார். அவர் 13 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த புஜாரா கம்மின்ஸ் வீசிய 15-வது ஓவரின் 2-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி ரன்ஏதும் எடுக்காமல் அதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் ரகானே 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்தியாவின் நட்சத்திர வீரர்களான புஜாரா, விராட் கோலி, ரகானே ஆகியோரை ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் வெறும் 6 பந்தில் வீழ்த்தி இந்தியாவிற்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் 28 ரன்கள் வரை விக்கெட் ஏதும் இழக்காத இந்தியா 32 ரன்னிற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது.

    அடுத்து வந்த ரோகித் சர்மா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியா 3-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் 292 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.
    அறிமுகமான வருடத்தில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையை பும்ரா படைத்துள்ளார். #AUSvIND
    மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 151 ரன்னில் சுருண்டது. பும்ரா 33 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் அவர் புதிய சாதனை நிகழ்த்தினார்.

    பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக அறிமுகம் ஆனார். மூன்று முறை 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் இதை செய்து இருந்தார். இதன்மூலம் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் ஒரே ஆண்டில் ஐந்து விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய முதல் ஆசிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    மேலும் ஒரே ஆண்டில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். பும்ரா 9 டெஸ்டில் 45 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் 39 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். திலீப் தோஷி தனது அறிமுக டெஸ்ட் ஆண்டில் (1979) 40 விக்கெட் கைப்பற்றியதே இதுவரை சாதனையாக இருந்தது. அதை தற்போது பும்ரா முறியடித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக பந்து வீச்சு என்ற சாதனையையும் பும்ரா படைத்துள்ளார்.

    அறிமுக டெஸ்ட் ஆண்டில் அவர் விக்கெட் கைப்பற்றிய ‘டாப் 5’ இந்திய பந்து வீச்சாளர்கள் விவரம்:-

    1. பும்ரா - 45 விக்கெட் (2018)

    2. திலீப் தோஷி - 40 விக்கெட் (1979)

    3. வெங்கடேஷ் பிரசாத் - 37 விக்கெட் (1996)

    4. ஹிர்வானி - 36 விக்கெட் (1988)

    5. ஸ்ரீசாந்த் - 35 விக்கெட் (2006)
    மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் இன்னிங்சில், இந்திய அணி முன்னணி விக்கெட்டுகளை இழந்தபோதும், 346 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது. #AUSvIND #TeamIndia
    மெல்போர்ன்:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா (106 ரன்கள்), விராட் கோலி (82 ரன்கள்), ரோகித் சர்மா (63 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்னில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

    பின்னர் தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக பும்ரா, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளித்தார். இந்தியாவின் வேகப்பந்துகளை சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஆஸ்திரேலியா, மூன்றாம் நாளான இன்று 151 ரன்களில் சுருண்டது. பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.


    இதையடுத்து 292 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி, 2ம் இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் ஏற்பட்ட பின்னடைவுக்கு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பதிலடி கொடுத்தனர். குறிப்பாக கம்மின்ஸ் வீசிய பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.

    துவக்க வீரர் விகாரி 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சில் சதம் அடித்த புஜாரா, இந்த இன்னிங்சில் ரன் எதுவும் எடுக்கமல் வெளியேறினார். இதேபோல் கேப்டன் விராட் கோலியும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ரகானே 1 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இந்த நான்கு விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் கைப்பற்றினார்.


    இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், மற்றொரு முன்னணி வீரர் ரோகித் சர்மாவின் விக்கெட்டை ஹேசில்வுட் கைப்பற்றினார். 44 ரன்கள் எடுப்பதற்குள் 5 முன்னணி விக்கெட்டுகளை இழந்த நிலையில், மயங்க் அகர்வால், ரிஷப் பந்த் ஜோடி நிதானமாக விளையாடியது. இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. அகர்வால் 28 ரன்களுடனும், ரிஷப் பந்த் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    நாளை 4-ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில், ஆஸ்திரேலியாவைவிட இந்தியா 346 ரன்கள் முன்னிலையில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் மேற்கொண்டு 50 ரன்கள் சேர்த்தால்கூட ஆஸ்திரேலியாவுக்கு அது கடின இலக்காக அமையும்.  #AUSvIND #TeamIndia
    ×