search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூந்தமல்லியில் மாடு கடத்தல்"

    பூந்தமல்லி அருகே வேனில் மாட்டை கடத்திய கும்பலை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டி சென்று பொதுமக்கள் பிடித்தனர்.
    பூந்தமல்லி:

    பூந்தமல்லி பகுதியில் அடிக்கடி மாடுகளை திருடி கடத்தும் கும்பல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொது மக்கள் விழிப்புணர்வுடன் மாடுகளை கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பூந்தமல்லியை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் ஒரு கும்பல் மாடுகளை வேனில் ஏற்றிக் கொண்டிருந்தது.

    இதனால் பரபரப்பான அந்த பகுதி மக்கள் மாடுகளை வேனில் ஏற்ற முயன்றவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த கும்பல் வேனுடன் பூந்தமல்லி ரோடு தப்பிச் சென்றது. பொதுமக்கள் வாகனங்களில் அந்த வேனை துரத்தி சென்றனர்.

    சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சென்று வேனை மடக்கினார்கள். அந்த வேனில் 7 பேர் இருந்தனர்.

    அவர்களில் 6 பேர் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். ஒரு வாலிபர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டார். அவனுக்கு பொது மக்கள் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போலீசில் ஒப்படைத்தனர்.

    அவரை போலீசார் கைது செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அவன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அவனிடம் போலீசார் விசாரித்த போது பெயரை சொல்ல மறுத்து விட்டான். அவனது ஆதார் அட்டையை வைத்து அவனது பெயர் தாரிக் என்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. தப்பி ஓடியவர்களும் வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் ஆவர்.

    பொதுமக்கள் மடக்கி பிடித்த வேனில் ஒரு மாடு மட்டும் இருந்தது. அந்த மாட்டையும், வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ×