search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் கேன்"

    புறம்போக்கு நிலத்துக்கு பட்டா கேட்டு கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மனு கொடுப்பதற்காக பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீவிர சோதனை நடத்திய பின்னரே கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.

    அப்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 29) என்பவர் தனது குடும்பத்தினருடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தார். அவர்களை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் பெட்ரோல் கேன் இருந்ததை கண்டு பிடித்தனர். உடனே அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் ராமசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கூறியதாவது:-

    எங்கள் (ராயர்பாளையம்) பகுதியில் உள்ள 3½ ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் எங்களது கால் நடைகளை மேய்த்து பராமரித்து வருகிறோம். தற்போது திட்டக்குடியை அடுத்த குடிகாடு பகுதியை சேர்ந்த ஒருவர் இந்த நிலத்தை நான் பராமரிக்க போகிறேன். இந்த நிலத்தை இனிமேல் நீ பராமரிக்கக்கூடாது என்று கூறி மிரட்டல் விடுத்தார். கால்நடைகளை நம்பியே எங்களது வாழ்வாதாரம் உள்ளதால் கால்நடைகளை பராமரிக்க வழியில்லாமல் தவித்து வருகிறோம்.

    எனவே அந்த புறம்போக்கு நிலத்துக்கு எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். எங்களுக்கு மிரட்டல் விடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினைக்காக இன்று கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தோம். எங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் தற்கொலை செய்ய முடிவு எடுத்து கையில் பெட்ரோல் கேன் கொண்டு வந்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெட்ரோல் கேனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வாலிபர் ஒருவர் வந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×