search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் குழந்தைகள் பிறப்பு"

    கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வந்தார். மருத்துவமனையில் உள்ள டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை வார்டில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார். பின்னர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த நவம்பர் மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 564 பேர் உள்நோயாளிகளாக இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 260 ஆக குறைந்துள்ளது. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளின் எண்ணிக்கை 146-ல் இருந்து 65 ஆக குறைந்துள்ளது. பொதுவாக நவம்பர் மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு 40 சதவீதம் குறைந்துள்ளது.

    தமிழ்நாட்டில் டெங்கு, பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 23 ஆயிரத்து 294 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 65 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு 3,845 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 13 பேர் இறந்துள்ளனர்.

    அதேபோல் கடந்த ஆண்டு 3,800 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 17 பேர் இறந்தனர். இந்த ஆண்டு 2,100 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, இதுவரை 37 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டை விட டெங்கு காய்ச்சல் இறப்பு குறைந்துள்ளது, பன்றி காய்ச்சல் இறப்பு அதிகரித்துள்ளது. கோவையை ஒட்டியுள்ள பகுதிகளில் பன்றி காய்ச்சல் பாதிப்பை தடுக்க கூடுதலாக கண்காணிக்க வேண்டியது உள்ளது.

    தமிழகத்தில் 17 மாவட்டங்களில் ஆண், பெண் விகிதாச்சாரம் குறைவாக உள்ளது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருந்த பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் அரசு மேற்கொண்ட நடவடிக்கையினால் பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. தற்போது திருவண்ணாமலை மாவட்டம் தான் சவாலாக இருக்கிறது. பாலின விகிதத்தை அதிகரிக்க சட்டம் மற்றும் விழிப்புணர்வு மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×